Sunday, September 16, 2012

"திக் திக் ஒரு ப(தி)க்க கதை".திக் திக் ஒரு ப(தி)க்க கதை.

தினமும் சீக்கிரமாய் போய்விடுவேன்...இன்று வெள்ளி என்பதாலும் நாளை சனிக்கிழமை லீவ் அதனால் சொச்சம் இருந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பும்போது மணி 10 ஆகிவிட்டது.

மெதுவாய் வெளியே வந்தேன். மாலையில் மழை பெய்து விட்டிருந்ததால் வானம் இறுக்கமாக இருந்தது, வெளியில் மெல்லிய தூறல்....கும்மிருட்டு வேறு.

தப்பு செய்துவிட்டேன் கணவர் போன் செய்தபோது நானே வந்து விடுவதாய் சொல்லிவிட்டேன்.

செக்யூரிட்டி சல்யூட் வைத்துவிட்டு கேட்டை மூடினார். அம்மா போய்விடுவீங்களா? எனக்கேட்டார்...

மெதுவாய் திரும்பி பரவாயில்லை ஆட்டோ பிடிச்சு போய்டுவேன்....குருட்டு தைரியத்தில் கொஞ்சம் தயக்கமாய்தான் சொன்னேன்.

துடைத்துவைத்த சாலை....வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. நம்ம இசிஆர் ரோடா இது? நம்ப முடியவில்லை.

வெள்ளிக்கிழமை என்பதால் எல்லா டெக்கிகளும் சீக்கிரமாய் பார்ட்டி, பப் என்று போவதால் ரோட்டில் ஒரு ஈ காக்காக் கூட இல்லை.

மெதுவாய் நடந்து பஸ்டேண்ட் அருகில் வந்தேன். முதன் முறையாக பத்து மணிக்கு மேல் தங்கியதால் இந்த மாதிரி இருக்கும் என்று நினைக்க வில்லை. ஷேர் ஆட்டோக்கள் வரும் என எதிர்ப்பார்க்க ஆரம்பித்தேன்.

நல்ல வேளையாக பஸ்டேண்டில் ஒரு பெண்ணும் கொஞ்சம் தள்ளி ஒரு ஆளும் இருந்தார்கள். கொஞ்சம் தைரியம் வந்தது. அந்த பெண்ணுக்கு அருகில் வந்து நின்றுக்கொண்டேன். மெதுவாய் அவர்களைப்பார்த்து சிரித்தேன். சட்டென்று பஸ் வர அவர்கள் ஏறி சென்று விட்டார்கள். அது என் ரூட் பஸ் அல்ல.

பஸ் போவதையே வெறித்துப்பார்த்தேன்...

அப்போதுதான் கவனித்தேன் என் முதுகு பக்கம் யாரோ என்னை வெறித்துப்பார்ப்பது போல் இருந்தது.

திரும்பி பார்த்தேன்....பக்கத்தில் இருந்தது அந்த ஆள்தான். அழுக்கான துணியில் பல கிழிசல்கள்.....கையில் அழுக்கு மூட்டை பற்க்களில் மஞ்சள் கறை...தலை சொறிந்துக்கொண்டு என்னை பார்த்து சிரித்தார்.

அந்த இருட்டு குளிரிலும் எனக்கு வேர்த்தது. கைகள் நடுங்கத்தொடங்கின...கால்கள் உதற ஆரம்பித்தது.

அவன் மெதுவாய் என்னை நெருங்குவது தெரிந்தது. எனக்கு என் இதயத்தின் திக் திக் தெளிவாய் கேட்டது.

மெதுவாய் இரண்டடி முன்னே நின்றேன். அவனும் என் அருகில் நின்றான்.

சத்தமாய் கத்தவேண்டும் போல் இருந்தது....கத்தினால் மட்டும் யாராவது வரப்போகிறார்களா என்ன?

மனதில் தைரியத்தை வரவைத்து என் விரல்களை இறுக்கி தவராய் நடந்தால் அவனை குத்துவதற்க்கு தயாராய் இருந்தேன்.

கடவுளை வேண்டிக்கொண்டு கண்களை மூடி திறந்தேன்.

அவனும் பக்கத்தில் வந்து சிரித்தான்." எக்ஸ்கியூஸ்மி, ஐ வாண்ட் டூ ருபீஸ்" என்றான். எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

வேகமாய் பர்ஸில் இருந்த 5 ரூபாய் காய்னை கொடுத்தேன்.

"தேங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு ஆர்வத்துடன் வேகமாய் போய்விட்டான்.

அப்பாடா என்று இருந்தது.....

தூரத்தில் மஞ்சள் வெளிச்சம் மினிக்கி கொண்டு பெரிதாகிக்கொண்டே வந்தது. அது ஒரு போலீஸ் வண்டி என்பதற்க்கு அதன் மேல் இருக்கும் சிவப்பு விளக்கு அடையாளம் காட்டியது.

மெதுவாய் என் அருகில் வந்து நின்றது.....

"இங்கே என்னம்ம பண்றே" சத்தமான போலீஸ் மிரட்டல் ஒலி.

"இல்லே சார் இன்னைக்கி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு" என்றேன்.

"எந்த ஏரியா போகணும்?"

"மைலாப்பூர் சார்"

"ஏறுங்க நாங்க அந்த வழியாத்தான் போறோம்...."

நானும் கொஞ்சம் கலக்கத்துடன் ஏறினேன்......

முன்னால் உட்கார்ந்திருந்த போலீஸ் காரர் என்னை மேலிருந்து கீழ் பார்த்தார்.....

எனக்கு கூசியது....

அவரின் சிரிப்பில் ஏக்கமும் கண்களில் காமமும் தெரிந்தது.பெரிய தவறு செய்துவிட்டதைப்போல் மனம் பயப்பட தொடங்கியது....

                                               தொடரும்......
பாகம் - 2

மெதுவாய் என் போனை எடுத்தேன். கால் செய்ய தொடங்கினேன்...

அய்யோ கடவுளே....பொண் சுவிச் ஆஃப் ஆகியிருந்தது. பயத்தில் நாக்கு வரண்டது. வேர்வையில் சுடிதார் என் உடலோடு ஒட்டி எனக்கு அறுவறுப்பை தந்தது.

என்ன செய்வது...எப்படி தப்பிப்பது? எனக்கு புரியவில்லை...
ஜீப்பும் வேகமாய் சாலையில் நழுவிக்கொண்டு இருந்தது. மனம் யோசிக்க ஆரம்பிப்பது.

"சார்...." மெதுவாய் அழைத்தேன்.
"என்னம்மா" குழைந்துவிட்டு ஜொள் வடிய என்னைப்பார்த்தார் போலீஸ்காரர்.
"ஒண்ணுமில்லே சார்" என சொல்லிவிட்டு...தலை குனிந்தேன்.

அதற்க்குள் நம்ப முடியவில்லை....என் வீட்டு ஏரியாவை நோக்கிதான் வாகனம் செல்கிறது....

"எந்த தெரு ம்மா" அவர் கேட்டவுடன்...

"அடுத்த ரைட்டுங்க" என்றேன்.

வீட்டுக்கு அருகில் ஜீப் நின்றதும்...கதவை திறந்து இறக்கிவிட்டார்.

எனக்கு என்னை நினைக்க அறுவெறுப்பாய் இருந்தது. பதட்டத்தில் மற்றவர்களின் பார்வையை தவறாக புரிந்துக்கொண்டதில் என் தவறு புரிந்தது.

அப்போதுதான் அவர் பேச தொடங்கினார்..." அம்மா...நீங்க என்ன நினைச்சீங்கன்னு எங்களுக்கு தெரியும், ஆனாலும் எங்களோட சந்தேகத்தை தீக்கத்தான் அப்படி நடிச்சோம், காரணம் பணக்கார ஐடி பசங்க நிறைய பேர் உங்க ஆபீஸ் ஏரியாவுலே இருக்கிறதாலே...தப்பான பொண்ணுங்க எப்பவுமே அங்கே சுத்திட்டு இருப்பாங்க...அவங்களை கண்டு பிடிக்க நாங்க கொஞ்சம் அப்படி நடிச்சா அவங்களை ஈஸியா கண்டு பிடிச்சுடலாம்.சில பொண்ணுங்க தப்பா அட்ரெஸ் சொல்லி மாடிப்பாங்க"

நான் வழிந்துகொண்டே சிரித்தேன்.....

"முக்கியமா...உங்களை பயமுறுத்தியதற்க்கு காரணம் " இனிமே நீங்க மறுபடியும் இந்தமாதிரி பாதுகாப்பில்லாமே நேரங்கெட்ட நேரத்துலே வரக்கூடாது, அதுக்காகவும்தான் கொஞ்சம் நடிக்க வேண்டியதாகிவிட்டது" என்றார் சிரித்துக்கொண்டே.

"ரொம்ப தேங்ஸ் சார்" நிம்மதியாய் வீட்டுக்குள் நுழைந்தேன்.

முற்றும்.


No comments:

Post a Comment