Sunday, September 16, 2012

மாலை பொழுதின் மயக்கத்திலே - விமர்சனம்.மாலை பொழுதின் மயக்கத்திலே - விமர்சனம்.


"ஃபிரேம்களில் ரிச்சான ஒரு லோ பட்ஜட்" படம்.

மற்றவர்கள் மாதிரி படம் வெளிவந்த வந்த உடனே சுடச்சுட என்னால் விமர்சனம் எழுதமுடியாது. காரணம் நான் வேலைக்கு செல்வதால்! எழுதுவது என்பது எனக்கு பொழுதுபோக்குமட்டுமே. அதனால், முதலில் என் வேலை, பின்னர் குடும்பம், அதற்க்கடுத்துதான் எழுதுவது.

ஆனாலும் அனைத்து படங்களையும் பார்த்தபின் அதை மக்களுடன் பகிர்வதில் நான் சந்தோஷம் கொள்வேன்.(கொஞ்சம் லேட்டானாலும்!)

மாலை பொழுதின் மயக்கத்திலே....மழை பெய்யும் ஒரு மாலை வேளையில் சென்னையின் பணக்கார மக்கள் கூடும் ஒரு காஃபீ டே யில் நடக்கும் நிகழ்வுகள்தான் கதை. சமீபத்தில் பார்த்த "மதுபானகடை" படத்தின் சாயலில் ஆனால் உயர்ந்த டீ கடையில் நடக்கும் கதை.

மதுபானக்கடையில் ஏழைகளும், குடிகார்களும் புலம்புவதைப்போல் இங்கே...மெத்தப்படித்தவர்களும் அப்பன் காசை கரைக்கும் உயர்தர மக்களும் ஆங்கிலத்தில் புலம்புகிறார்கள் அதுதான் வித்தியாசம்.

சரி கதைக்கு வருவோம்.

ஐடி-யில் நிறைய சம்பாதிக்கும் கணவன், படிப்பை பாதியில் விட்டுவிட்டு கல்யாணம் செய்துக்கொண்டு மனஸ்தாபங்களில் தவிக்கும் குடும்ப தலைவி, லேப்டாப்பில் கதை எழுதுவதாய் வெட்டியாய் காஃபி டேயில் நேரத்தை ஓட்டும் எழுத்தாளர், டைரக்டர் ஆக வேண்டும் என்கிற கனவில் பணப்பிரச்சனையில் தவிக்கும் நாயகன் இளம் இயக்குனர் (ஆரி) , கஷ்டத்தில் காஃபி ஷாப்பை நடத்தும் ஓனர், படிக்க துடிக்கும் காஃபி ஷாப்பில் வேலை செய்பவர், இங்கே வரும் பெண்களை கடலை போட வேலை செய்யும் இன்னொருவர், கடைசியாய் வந்து சேரும் இரண்டு நாளில் படிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்கு பறக்க விருக்கும் பணக்கார நாயகி (ஷுபா புட்டேலா), அம்மாவின் கனவுக்காக கதாநாயகன் ஆக நினைக்கும் கொழுத்த சொட்டை தலை ஹீரோ மற்றும் விடாமல் பெய்யும் அடை மழை இப்படி அனைவரும் சந்திக்கும் காஃபி டேயில் நடக்கும் ஒரு மாலை நேர நிகழ்வுகள்தான் இந்த கதை.

வெறும் 12 பேர் மட்டும்தான் இந்த படத்தில் நடித்திருக்கின்றார்கள். அவ்வளவாக பிரபலம் இல்லாத முகங்கள் சொல்லப்போனால் (சுப்பு பஞ்சு) இவரும், "சார் எங்கேயோ போய்ட்டீங்க" புகழ் (சிவாஜி) இவரும்தான் கொஞ்சம் தெரிந்த முகங்கள். மற்றவர்கள் சீரியல் ஆர்டிஸ்ட் மற்றும் நாளைய இயக்குனரில் நடித்த நடிகர்கள்.

படம் ஆரமித்த உடன் படத்தில் இருப்பவர்கள் போலவே நம்மையும் ஏசி அறையில் உட்கார்ந்த ஃபீலை தந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். சில காட்சிகளில் நாயகனுக்கு ஏற்ப்படும் குளிரை நாமும் உணர்வோம். மிகவும் மெதுவாய் நகர்ந்தாலும் கொஞ்சம் அவ்வப்போது போரடித்தாலும் கடைசிவரை நம்மை ஒன்றச்செய்வதில் இயக்குனர் வெற்றிப்பெறுகிறார்.

முக்கியாமாய் நான்கு சுவற்றுக்குள் அழகான கவிதை மாதிரி நகர்கிறது படம். பரபரப்பான சண்டைகள் இல்லை, பன்ச் டயலாக்குகள் இல்லை, கண்ணை கலங்க வைக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் இல்லை, சீட்டின் நுனிக்கு நகர வைக்கும் திருப்பங்கள் இல்லை, மயிர் கூச்செரியும் திகிலும் இல்லை, கவர்ச்சிகள் காட்டும் நாயகிகள் இல்லை, பாடல்களில் குத்தாட்டங்கள் இல்லை குலுங்க வைக்கும் அயிட்டம் பாடல்கள் இல்லை.....அப்போ என்னதாய்யா இருக்கு? நீங்கள் கேட்பது புரிகின்றது.

ஆனாலும் படத்தை உட்கார்ந்து பார்க்கலாம். அங்கங்கே ரசிக்கலாம். பிரஷ்ஷான கேமரா, அழகான இடம், ஸ்மார்ட்டான நாயகன், கொஞ்சி கொஞ்சி டமிங்கிளீஸ் பேசும் நாயகி இது போதாதா கல்லூரி கூட்டங்களை கவர?

மசாலா படங்களை பார்த்து போரடித்துப்போனவர்களுக்கு இந்த படம் கொஞ்சம் ஆறுதலாயும், பொழுதை போக்கவும் உதவும். கணவனை எதற்க்கெடுத்தாலும் எரிந்துவிழும் மனைவி, வேண்டா வெறுப்பாய் அவுட்டிங் வந்ததால் வெயிட்டரிடம் கோபத்தை காட்டுவதும் கடைசியில் அனைத்தையும் மறந்து கணவரின் தோளில் சாய்வதும், நாயகியை பார்த்தவுடன் கவலைகளை மறந்து சர்ப்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி கொடுத்து கேக்கில் பெயர் எழுத அவளின் பெயர் தெரியாமல் திரும்பி வந்து ஐயம் ஜெய்...நீங்க என அவள் பெயரை கேட்பதும், பில்லுக்கு பணம் இல்லாமல் பைக் சாவியை வைத்து விட்டு செல்வதும்,கோபத்தில் திட்டிவிட்டு கடைசியில் வேலை செய்பவரை மன்னிக்கும் ஓனரும், நாயகனின் இரண்டு மணிநேர கவனிப்பில் கனிந்து காதலை ஏற்க்கும் நாயகியும் இப்படி ஆங்காங்கே இதமான வருடல்கள்.

ஆரம்பத்தில் வரும் நந்தாவின் பாடல் அருமை. "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" டீமின் வெஸ்டர்ன், ஹிப் ஹாப் டான்ஸில் நந்தாவும் மற்றவர்களும் சூப்பர். நாயகன் ஸ்மார்ட்...வழிவதிலும் சோகத்திலும், வெறுப்பிலும் கவர்கிறார். நாயகி குழந்தை தனமான பேச்சிலும் அவ்வளவாக நடிக்க வாய்ப்பில்லை எனினும் கோதுமை கலரில். காஃபி டேயில் வேலை செய்யும் வெயிட்டர் காமெடியில் அங்கங்கே நம்மை சிரிக்க வைக்கிறார். வந்து போகிறார். குண்டு பையன் நல்ல தேர்வு. மற்றப்படி சொல்ல ஒன்றும் இல்லை.

மைனஸ் :

கதை என்று ஒன்றும் பெரிதாக இல்லை. ரொம்ப டெட் ஸ்லோ நரேஷன். நாடத்தனமான சிலரின் நடிப்புகள். நான்கு அறைக்குள் இரண்டு மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதால் திருப்பங்கள் இல்லாத திரைக்கதை. குறைவான நடிகர்கள் மூன்று பேரை மட்டும் வைத்து கதை சுழல்வதால் வரும் கொட்டாவி. இடை இடையே கதையை தடுக்கவும், நேரத்தை ஓட்டவும் வரும் சுமாரன பாடல்கள்...

பிளஸ் :

வித்தியாசமான கதை களம், திறமையான இயக்கம் (நாராயண் நாகேந்திர ராவ்). ஃபீல் குட் எண்ட்ரடெய்னர்.

பன்ச் :

மாலை பொழுதின் மயக்கத்திலே
மனதை தொடும் தூரத்திலே!

ஒரு முறை பார்க்கலாம்.....டைம் பாஸுக்காக.

No comments:

Post a Comment