Monday, August 20, 2012

அட்ட கத்தி - விமர்சனம்.
அட்ட கத்தி - விமர்சனம்.

முதல்முறை கொஞ்சம் தயக்கத்துடன் விமர்சனம் எழுதுகிறேன். காரணம் எங்கள் ஓவியக் கல்லூரி மாணவரின் இயக்கம் என்பதாலும் நடுநிலமை தவறாமல் எழுதவேண்டும் என்கிற பயமும்தான் காரணம்.

அட்ட கத்தி - வித்தியாசமான பெயர். இந்த பெயரை ஆராய்ந்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வழக்கத்தில் உள்ள வார்த்தை. அதாவது சும்மா பீலா, உதார், வெட்டி பில்டப் விட்டுக்கொண்டு அலையும் ஆட்களை அட்ட கத்தி என்றழைப்பார்கள். (ஒன்றுக்கும் வேலைக்காகாதவர்கள் மற்றவர்கள் முன் ஓவராய் பீத்திக்கொள்பவர்கள்)....தலை சுற்றுகிறதா.....

இந்த படத்தில் நாயகன் தான் அட்ட கத்தி. அதுவும் பார்க்கும் பெண்களையெல்லாம் காதலிக்கும் ஹீரோ கடைசியில் ஒவ்வொரு காதலும் நம் நாயகனை கவுக்க....பரிதாபமாக அடுத்த பெண்ணை தேடும் இளவயசு கல்லூரிக்காதல்தான் இந்த படம்.

பல படங்களில் நாம் பார்க்கும் நாயகன் பத்துப்பேரை அடிப்பான்....ஒரு பெண்ணை நோட்டம் விட்டால் அந்த பெண் அப்படியே நாயகணை துரத்தி துரத்தி காதலிப்பாள்.சாதாரணமான நம்மால் செய்யாததை செய்பவன்தான் ஹீரோ. ஆனால் இந்த ஹீரோ படம் பார்ப்பவர்களின் யதார்த்தமான நிஜ பதிவு. இந்த படத்தின் நாயகனின் நிலைதான் நம் பலபேருக்கு நடந்திருக்கும் என்பதுதான் இந்த படத்தின் வெற்றி.( நானும் என் பழைய 22A பேருந்தின் நினைவலைகளை நினைக்க தவறவில்லை).

தினமும் சென்னைக்கு புற நகரில் இருந்து பஸ்ஸில் வரும் கல்லூரி மாணவனாக தினா வேடத்தில் அசத்தியிருக்கிறார் புதுமுகம் தினேஷ். தனது கேஷுவலான நடிப்பில் கவர்கிறார். அதுவும் ஒரு காட்சியில் கோபத்தை வரவைக்க அவரின் அலம்பல்கள் நம்மை கொள்ளைகொள்கிறார். நண்பர்கள் மத்தியில் தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்ள உதார் விடுவதிலாகட்டும், கராத்தே மாஸ்டரிடம் அடி வாங்கிவிட்டு அழுவதிலாகட்டும், தாவணிகளை பார்த்தால் வழிவதிலாகட்டும், திடீரென்று "தலை"யாய் காலரை தூக்கிவிட்டு கெத்து காட்டுவதிலும் தமிழுக்கு அடுத்த நல்ல நடிகர் ரெடி.

ரெண்டு மூணு நாயகிகள் வந்தாலும் கடைசியில் வந்து ஆப்பு அடிக்கும் பெங்களூர் தக்காளி நந்திதா மிளிர்கிறார். ஆனாலும் அந்த டுவின்ஸ் ஜோடிகள் அருமை. கலக்கலான நடிப்பும் அருமை.

கதையென்று பெரிதாக ஒன்றும் இல்லையென்றாலும் படம் பார்ப்பவர்களை தங்களின் ஜாலியான பழைய நினைவுகளுக்குள் கொண்டு செல்வதில் இயக்குனர் ரஞ்சித் தனித்து நிற்க்கிறார். இப்படித்தான் ஹீரோ இருக்க வேண்டும் என்பதற்க்கு பதில் இப்படியும் ஹீரோக்கள் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார். வெங்கட் பிரபுவின் சீடரான ரஞ்சித் அவரைப்போலவே முதல் படத்தில் இளைஞர்களை கவர்ந்திருக்கிறார்.

சாதாரண வழக்கு மொழிகளிலும், கல்லூரிமானவர்களின் கலாட்டாக்கள் நிறைந்த வாழ்க்கையையும் அழகாய் படம் பிடித்திருக்கிறார். இன்னும்... கதாநாயகனின் அப்பா அடிக்கும் லூட்டிகளில் சிரிப்புக்கு பஞ்சமில்லை.

முக்கியமாக சொல்லவேண்டிய இன்னொரு விஷயம் அந்த கானாப்பாடல்கள்....இப்போது பேருந்துகளில் அவ்வளவாக இந்த மாதிரி பாடல்கள் இல்லையென்றாலும் பத்து வருடங்களுக்கு முன்பு வரை பேருந்துகளில் கல்லூரி மாணவர்களின் கானாப்பாடல்களுக்காகவே பொது மக்கள் கூட்டம் இருக்கும். படத்தில் நான்கு கானாப் பாடல்கள் கேட்பதற்க்கு இனிமை(அதுவும் அந்த ஆடிப்போனா ஆவணி).

யதார்த்தமான ஒளிப்பதிவும், ஆர்ட் டைரக்க்ஷனே தெரியாத ஆர்ட் டைரக்ஷனும்(நண்பர் ராமலிங்கம்), மிதமான இசையும்(சந்தோஷ் நாராயணன்) படத்தின் சிறப்புக்கு உதவி செய்துள்ளார்கள்.

ஞானவேல் ராஜாவின் திறமையான அக்ரெசிவ் மார்க்கெட்டிங் உத்தியில் இந்த "அட்ட கத்தி" "தங்க கத்தியாக" சாத்தியம் உண்டு.

மைனஸ்:

படம் கொஞ்சம் மெதுவாகவே நகர்வதால் அவ்வப்போது சலிப்பு வருவது நிஜம்.பஸ், காதல், பாடல் என்று பலமுறை தொடர்ந்து அடிக்கடி காட்டுவதால் புதிதாய் ஒன்றும் கவரவில்லை.

எந்த பெண்ணும் ஏன் நாயகனை வெறுக்க வேண்டும், ஏன் வெறுத்தார்கள் என்பது கடைசிவரை தெரியவில்லை. அப்படி வெறுக்கும் அளவுக்கு  நாயகன் மோசமாகவும் இல்லை. நாயகன் கொஞ்சம் காமெடியன் ஆகிவிட்டாரோ என நினைக்க தோன்றுகின்றது.

பன்ச்:

இந்த காதலும் காதலை சார்ந்த அட்ட கத்தி பலரின் நினைவலைகளை துளைக்கும் என்பதில் சந்தேகமில்லை....ஆனாலும் இன்னும் ஆழமாக மனதை துளைத்து நெருடவில்லை என்பது நிஜம்.

No comments:

Post a Comment