Sunday, August 12, 2012

மதுபானக்கடை - விமர்சனம்மதுபானக்கடை - விமர்சனம்


சனிக்கிழமை என்பதால் சரக்கு ஞாபகத்தில் இந்த படத்திற்க்கு போனேன். ஆனால் உண்மையிலேயே ஆல்கஹால் கலக்காத அமிர்தம்தான் இந்த மதுபானக்கடை.

மிகுந்த சிரமத்துக்கு இடையில் பல கட்டுகளுடன் வந்திருக்கும் "A" சர்டிஃபிகேட்டுடன் வந்திருக்கும் படம்.அரசுக்கு எதிராகவும், சமூக அவலங்களையும் காட்டினால் இப்படித்தான் செர்டிஃபிகேட் கொடுப்பார்களோ?

பலகால இந்திய சினிமா வரலாற்றில் மொத்தப்படமும் ஒரே ஒரு லொகேஷனலில் எடுக்கப்பட்ட ஒரு சில படங்களில் இந்தப்படமும் என்று. அதுவும் அழுக்கான, அருவெறுப்பான, அசிங்கம் மிகுந்த இடமான டாஸ்மாக் பாரில் நடக்கும் இரண்டுநாள் கதைதான் இந்த படம்தான். அதுவும் காந்தி ஜெயந்திக்கு முதல்நாள் வரை நடக்கும் கதை. முக்கியமாக தமிழ் திரைப்பட வரலாற்றில் முழுக்க முழுக்க புது முகங்களை கொண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.

ஒரே ஒரு பாரில்(Bar) நடக்கும் கதையை வெறும் குடிகாரர்களையும், டாஸ் மாக் வேலையாட்களை கொண்டு இப்படி சலிக்காத படத்தைக்கொடுக்க முடியுமா?

கொடுத்திருக்கிறார் இந்த இயக்குனர். தமிழ்நாட்டின் முக்கால் பகுதி வருமானத்தை கொடுக்கும் அவலங்கள்தான் இந்த மதுபானக்கடை.

அழகான லொகேஷன்கள் இல்லை, பல வண்ண பெண்கள் இல்லை, கவர்ச்சிப்பாடல்கள் இல்லை, வெளிநாட்டு பாடல்கள் இல்லை, அதிரும் சண்டைகள் இல்லை, ஆர்ப்பரிக்கும் வசனங்கள் இல்லை, கமர்ஷியல் கலாட்டாக்கள் இல்லை...இப்படி ஆயிரம் இல்லை இல்லை என்று சொன்னாலும் இந்த படத்தில் அதையும் தாண்டி ஆயிரம் இருக்கின்றது.

கதைஎன்று ஒன்றும் இல்லை டாஸ்மாக் பாரில் நடக்கும் நிகழ்வுகள்தான் கதை. டிப்டாப்பாக ஆங்கிலம் பேசி காசு கடன்வாங்கி குடிக்கும் சாப்ட்வேர் அல்லக்கை, கவர்மண்ட் ஆசிரியர், போலீஸ் ரைட்டர்( காலில் விழும் காட்சிகள் அபாரம்), அரசியல் அப்பாடக்கர், மனநலம் பாதித்தவர், பாடியே கோட்டர் அடிக்கும் பெருசு,கள்ள சரக்கை கலக்கும் பார் முதலாளி, ஓனர் மகளையே காதலிக்கும் பார் அட்டெண்டர்,காதலுக்கு உதவும் நண்பன், இறுதியில் கிளர்ந்து எழும் சாக்கடைகளை கிளீன் செய்யும் தொழிளாளி மற்றும் லஞ்சம் வாங்கும் போலீஸ் என அத்தனையும் ஒரு குண்டாவில் ஊற்றி சரியான கலவையில் பரிமாறப்பட்ட் இந்த காக்டெய்ல் உண்மையிலேயே தேவாமிர்தம்தான்.

இரண்டுகாட்சிளில் வரும் பருவ காதலாகட்டும், நண்பன் காதலை கண்டித்தாலும் கடைசியில் அவனுக்கு உதவும் நண்பனும், காலை கடை திறக்கும் முன்னே கடைமுன் புலம்பும் சாதாரண குடிமகன் ஆகட்டும் இங்கே யதார்த்தத்தின் கலவைகள் ஏராளம்.

இழையோடும் நகைச்சுவை, சலிக்காத காட்சிகள், யதார்த்த வசனங்கள் என அத்தனையும் ஒவ்வொரு சுவை.

அழுக்கான பாரில் கேமரா அழகாய் நகர்கிறது(சுமீ பாஸ்கரன்), பாடல்களில் சமூகம் விமர்சிக்கப்படுகிறது, ஆர்ட் டைரக்ஷன் கன கச்சிதம் (வினோ). பணம் கொழிக்கும் வியாபார்த்தின் அழுகிய பக்கங்கள் இங்கே பார்வைக்கு காட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தில் எல்லோரும் அறிமுகம்தான். முழுக்க முழுக்க அறிமுகங்களை கொண்டு இவ்வளவு சிறப்பான நடிப்பை வாங்கிய இந்த குழுவுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்,கைத்தட்டலாம்.

மைனஸ்:

எல்லாமே பிளஸ்தான். ஆனாலும் எனக்கு கண்ணில் பட்ட நெருடல்கள் சில.

இரண்டு காட்சி காதல்களில் காதலை விட காமம் தான் அதிகம். ஆனாலும் (இந்த படத்திலும் பெரிய பணக்கார பெண் ஏழையைத்தான் காதலிக்கிறாள்). ஆனாலும் டாஸ்மாகில் வேலைசெய்யும் ஆண்களை காதலிப்பார்களா தெரியவில்லை.

குடிப்பவர்கள் எல்லோரும் ஏழைகள், மனக்கவலைகளுக்காகத்தான் குடிக்கிறார்கள் என்பது ஒத்துக்கொள்ள முடியவில்லை. சந்தோஷத்திற்க்காகவும் அளவாய் குடிப்பவர்களும் இருக்கின்றார்கள்.

படமே பாரில்தான்(Bar) எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் புகைப்பிடிக்கும் காட்சிகளில் மட்டும் "புகை உடலுக்கு கேடு" என்கிற வாசகத்தை போடுகிறார்கள்.மொத்தமாக படம் முழுதும் அந்த வாசகத்தை போட்டிருக்கலாம் போலே.

குடிப்பதை சொல்லிய இயக்குனர் அதனால் வரும் ஆபத்தை ஒரே ஒரு காட்சியிலாவது சொல்லியிருக்கலாம்.

வித்தியாசமான படங்களை என்றும் ஆதரிக்கும் இந்த தமிழ் சமூகம் இந்த படத்தையும் ஆதரிக்கும்.யாருமே சொல்லத்தயங்கிய கதையை தைரியமாய் எடுத்த இயக்குனர்/ தயாரிப்பாளருக்கு(கமலக்கண்ணன்) வாழ்த்துக்கள்.

"மதுபானக்கடை கமர்சியல் ஆல்கஹால் கலக்காத காக்டயில் எனர்ஜி டிரிங்க்".


No comments:

Post a Comment