Thursday, August 30, 2012

18 வயசு - திரைப்பட விமர்சனம்.
18 வயசு - திரைப்பட விமர்சனம்.

ரேணிகுண்டாவின் மாபெரும் வெற்றிக்குப்பின் இயக்குனர் பன்னீர் செல்வத்தின் அடுத்த படைப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப்பின் வெளிவந்திருக்கும் படம். முதல் பாட நாயகன் ஜானியையே இந்த படத்திலும் விளையாடி இருக்கிறார்.

ரேணி குண்டாவில் பட்டையை கிளப்பிய இந்த டீம் இதில் பாதி கிணறுதான் தாண்டியிருக்கிறார்கள். வித்தியாசமாய் ஆரம்பித்த படம் இடைவேளைக்குப்பின் கொஞ்சம் சறுக்குகிறது. ஆனாலும் வித்தியாசமாக சொல்ல நினைத்த இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.

அப்படியென்ன வித்தியாசமான கதை என்கிறீர்களா?

அம்மாவிடம் ஒட்டாத மகன் அப்பாவிடம் பாசமாய் வளர்கிறான். அம்மாவின் தவறான நடத்தையால் அப்பா தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்ள, பாசத்துக்காக ஏங்கும் இவன் ஆதரவற்ற நாயகியைப்பார்த்து காதல் வயப்பட்டு அம்மாவையும், அம்மாவின் கள்ள காதலனையும் கொன்று விட்டு நாயகியை தூக்கிக்கொண்டு எஸ்கேப் ஆக, துரத்தும் போலீஸிடம் சிக்கினாரா? காதல் கைகூடியதா என்பதை சொல்லும் இரண்டாவது பாதிதான் இந்த படம்.

இதிலென்ன வித்தியாசம் என்கிறீர்களா?

இங்கேதான் இயக்குனரின் சாமார்த்யம். நாயகன் ஜானிக்கு ஒரு வித மன நோய் (ஆமாம்...அதே வாயில் நுழையாத பேர்தான்). பல விலங்குகளின் சப்தங்களை எழுப்பிக்கொண்டு அவைகளைப்போலவே செயலில் வெளிக்காட்டும் வித்தியாசமான நோய்.

ஜானியும் டப்பிங்கில் சொதப்பினாலும் சில இடங்களில் நடிப்பில் கவர்கிறார். அதுவும் விலங்குகளைப்போல, அதன் ஒலிகளை எழுப்பிக்கொண்டு மேனரிசத்தை காட்டும் காட்சிகளில் மிளிர்கிறார். கொஞ்சம் டப்பிங்கிலும், சில காட்சிகளில் நடிப்பில் இன்னும் கொஞ்சம் ஹோம்வர்க் செய்திருக்கலாம். சண்டை காட்சிகளில் அதுவும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அற்ப்புதம். ஜானியும் அவருக்கு ஐடியா கொடுக்கும் மன நிலை பாதித்தவரும் (சத்யேந்த்ரா) காட்சிகளில் நகைச்சுவை இழையோட நடித்திருக்கிறார்கள்.

ரொம்ப வருடங்களுக்குப்பின் சத்யேந்த்ரா காமெடியிலும் காதலுக்கு உதவுவதிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். அவருக்கு ஏற்ற சரியான வேடம்.(முன்பெல்லாம் அடிக்கடி இவரை கோடம்பாக்கத்து ரோடுகளில் சந்திப்பேன். கொஞ்சம் பேசுவோம். ஆனால் பல மாதங்களாக இவரை பார்க்கமுடியவில்லை...காரணம் இப்போதுதான் புரிகிறது). காதல் வாழ்க என்று சொல்வதும், போலீஸ்காரருக்கு சப்போர்ட்டாய் ஜானியை கொல்ல துணிவதும் ஆனால் கிளைமாக்ஸில் சர்ப்ரைஸ் கொடுப்பதும் கலக்கியிருக்கிறார். வாய்ப்புகள் கிடைத்தால் இன்னும் நல்லாவே செய்வார்.

நாயகனின் அம்மாவாக யுவராணி.மகன் மேல் இவருக்கு என்ன வெறுப்பு என்பது புரியவில்லை. கணவர் இறந்த்பின் கூட மகனின் மீது அன்பு காட்டாத அம்மா! இப்படியெல்லாம் இருப்பார்களா?

ஜானியின் நோயை அறிந்து உதவதுடிக்கும் டாக்டர் வேடத்தில் ரோகினி...சொல்லவா வேண்டும் அவரின் அனுபவம் நமக்கு ஆனந்தத்தை தருகின்றது.

நாயகி காயத்ரி புதுமுகம் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லையென்றாலும் முதலிலும் கடைசியிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆதரவற்ற நிலையில் ஜானியை நம்புவதும் ஆனால் ஜானியை பற்றி தெரிந்தபின் சட்டென்று மாறுவதும்....வளர வாழ்த்துக்கள்.

ஜானிக்கு உதவும் நண்பனும், டாப் அப் காதலியும் காமெடிக்கு உதவியிருக்கிறார்கள். அதுவும் அந்த டாப் அப் சிரிப்பு காமெடியின் உச்சம்.

துரத்தும் போலீஸ்காரர் படத்தை ஆர்வத்துடன் பார்க்க செய்திருக்கிறார். அவரின் யதார்த்த நடிப்பு ஏஒன்.

பாடல்கள் அவ்வளவாக ஞாபகத்தில் நிற்க்கவில்லை ஆனால் பிண்ணனி இசை படத்தை விறுவிறுப்பாக்கத்தவரவில்லை. இரண்டு நிமிடமே வரும் ஃபிளாஸ்பேக் அருமை.

ஆக்க்ஷன் டைரக்டர் ராஜசேகரும், சினிமாட்டோகிராஃபி ஷக்தியும் பாராடும்படி உழைத்திருக்கிறார்கள். அதுவும் சண்டை காட்சிகளில் ஆக்க்ஷன் படு ஜோர். இரண்டாவது பாதி எடிட்டிங் கொஞ்சம் கத்திரியை யூஸ் செய்திருக்கலாம்.

வழக்கம்போல் கொஞ்சம் மைனஸ்களும் உண்டு.

சின்ன வயதுகளில் தெரியாத நோய் திடீரென்று எப்படி சீரியஸ் ஆனது என தெளிவாக சொல்லவில்லை.
வித்தியாசமான அம்மா இப்படியும் அம்மாக்கள் இருப்பார்களா? அம்மாவின் பாசமற்ற் தன்மைக்கு தெளிவான விளக்கம் இல்லை.
தேவையில்லாத கடைசி டூயட் பாடல்.
மீண்டும் போலீஸ்காரர்களை தவறாகவே காட்டியிருப்பது. எந்த போலீஸ்காரரும் இப்படி சின்ன பையனை கொல்லத்துடிக்க மாட்டார்.
வித்தியாசமான நோய்கள் இருப்பவர்கள் கொலை செய்கிறார்கள், காதலிக்கிறார்கள் இதைத்தவிர வேறொன்றும் செய்யமாட்டார்களா? இந்த படத்திலும் இப்படியே! இன்னும் கொஞ்சம் வித்தியாசம் இருந்திருக்கலாம்.
கொஞ்சம் ஸ்லோவான இரண்டாவது பாதி. இடைவேளைக்குப்பின் கதையை எப்படி நகர்த்துவது என்பதில் கொஞ்சம் குழம்பியிருப்பது நிஜம்.

மெசேஜ்...

படத்தில் காட்டியிருப்பதை போல் போலீஸ்காரர்கள் இருந்தால் முதலில் அவர்கள் துப்பறிவதை விட குற்றவாளிகளின் மனதை புரிய முயர்ச்சிக்கவேண்டும் என்பதை ஆழமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ஆனாலும், ரேணிகுண்டாவில் மிரட்டிய இயக்குனரும் நடிகரும் இதிலும் சோடைபோக வில்லை.
இந்த பதினெட்டு வயசு... மதிகெட்ட மனசு. பார்க்கலாம் ஒருமுறை!


No comments:

Post a Comment