Thursday, August 30, 2012

18 வயசு - திரைப்பட விமர்சனம்.
18 வயசு - திரைப்பட விமர்சனம்.

ரேணிகுண்டாவின் மாபெரும் வெற்றிக்குப்பின் இயக்குனர் பன்னீர் செல்வத்தின் அடுத்த படைப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப்பின் வெளிவந்திருக்கும் படம். முதல் பாட நாயகன் ஜானியையே இந்த படத்திலும் விளையாடி இருக்கிறார்.

ரேணி குண்டாவில் பட்டையை கிளப்பிய இந்த டீம் இதில் பாதி கிணறுதான் தாண்டியிருக்கிறார்கள். வித்தியாசமாய் ஆரம்பித்த படம் இடைவேளைக்குப்பின் கொஞ்சம் சறுக்குகிறது. ஆனாலும் வித்தியாசமாக சொல்ல நினைத்த இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.

அப்படியென்ன வித்தியாசமான கதை என்கிறீர்களா?

அம்மாவிடம் ஒட்டாத மகன் அப்பாவிடம் பாசமாய் வளர்கிறான். அம்மாவின் தவறான நடத்தையால் அப்பா தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்ள, பாசத்துக்காக ஏங்கும் இவன் ஆதரவற்ற நாயகியைப்பார்த்து காதல் வயப்பட்டு அம்மாவையும், அம்மாவின் கள்ள காதலனையும் கொன்று விட்டு நாயகியை தூக்கிக்கொண்டு எஸ்கேப் ஆக, துரத்தும் போலீஸிடம் சிக்கினாரா? காதல் கைகூடியதா என்பதை சொல்லும் இரண்டாவது பாதிதான் இந்த படம்.

இதிலென்ன வித்தியாசம் என்கிறீர்களா?

இங்கேதான் இயக்குனரின் சாமார்த்யம். நாயகன் ஜானிக்கு ஒரு வித மன நோய் (ஆமாம்...அதே வாயில் நுழையாத பேர்தான்). பல விலங்குகளின் சப்தங்களை எழுப்பிக்கொண்டு அவைகளைப்போலவே செயலில் வெளிக்காட்டும் வித்தியாசமான நோய்.

ஜானியும் டப்பிங்கில் சொதப்பினாலும் சில இடங்களில் நடிப்பில் கவர்கிறார். அதுவும் விலங்குகளைப்போல, அதன் ஒலிகளை எழுப்பிக்கொண்டு மேனரிசத்தை காட்டும் காட்சிகளில் மிளிர்கிறார். கொஞ்சம் டப்பிங்கிலும், சில காட்சிகளில் நடிப்பில் இன்னும் கொஞ்சம் ஹோம்வர்க் செய்திருக்கலாம். சண்டை காட்சிகளில் அதுவும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அற்ப்புதம். ஜானியும் அவருக்கு ஐடியா கொடுக்கும் மன நிலை பாதித்தவரும் (சத்யேந்த்ரா) காட்சிகளில் நகைச்சுவை இழையோட நடித்திருக்கிறார்கள்.

ரொம்ப வருடங்களுக்குப்பின் சத்யேந்த்ரா காமெடியிலும் காதலுக்கு உதவுவதிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். அவருக்கு ஏற்ற சரியான வேடம்.(முன்பெல்லாம் அடிக்கடி இவரை கோடம்பாக்கத்து ரோடுகளில் சந்திப்பேன். கொஞ்சம் பேசுவோம். ஆனால் பல மாதங்களாக இவரை பார்க்கமுடியவில்லை...காரணம் இப்போதுதான் புரிகிறது). காதல் வாழ்க என்று சொல்வதும், போலீஸ்காரருக்கு சப்போர்ட்டாய் ஜானியை கொல்ல துணிவதும் ஆனால் கிளைமாக்ஸில் சர்ப்ரைஸ் கொடுப்பதும் கலக்கியிருக்கிறார். வாய்ப்புகள் கிடைத்தால் இன்னும் நல்லாவே செய்வார்.

நாயகனின் அம்மாவாக யுவராணி.மகன் மேல் இவருக்கு என்ன வெறுப்பு என்பது புரியவில்லை. கணவர் இறந்த்பின் கூட மகனின் மீது அன்பு காட்டாத அம்மா! இப்படியெல்லாம் இருப்பார்களா?

ஜானியின் நோயை அறிந்து உதவதுடிக்கும் டாக்டர் வேடத்தில் ரோகினி...சொல்லவா வேண்டும் அவரின் அனுபவம் நமக்கு ஆனந்தத்தை தருகின்றது.

நாயகி காயத்ரி புதுமுகம் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லையென்றாலும் முதலிலும் கடைசியிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆதரவற்ற நிலையில் ஜானியை நம்புவதும் ஆனால் ஜானியை பற்றி தெரிந்தபின் சட்டென்று மாறுவதும்....வளர வாழ்த்துக்கள்.

ஜானிக்கு உதவும் நண்பனும், டாப் அப் காதலியும் காமெடிக்கு உதவியிருக்கிறார்கள். அதுவும் அந்த டாப் அப் சிரிப்பு காமெடியின் உச்சம்.

துரத்தும் போலீஸ்காரர் படத்தை ஆர்வத்துடன் பார்க்க செய்திருக்கிறார். அவரின் யதார்த்த நடிப்பு ஏஒன்.

பாடல்கள் அவ்வளவாக ஞாபகத்தில் நிற்க்கவில்லை ஆனால் பிண்ணனி இசை படத்தை விறுவிறுப்பாக்கத்தவரவில்லை. இரண்டு நிமிடமே வரும் ஃபிளாஸ்பேக் அருமை.

ஆக்க்ஷன் டைரக்டர் ராஜசேகரும், சினிமாட்டோகிராஃபி ஷக்தியும் பாராடும்படி உழைத்திருக்கிறார்கள். அதுவும் சண்டை காட்சிகளில் ஆக்க்ஷன் படு ஜோர். இரண்டாவது பாதி எடிட்டிங் கொஞ்சம் கத்திரியை யூஸ் செய்திருக்கலாம்.

வழக்கம்போல் கொஞ்சம் மைனஸ்களும் உண்டு.

சின்ன வயதுகளில் தெரியாத நோய் திடீரென்று எப்படி சீரியஸ் ஆனது என தெளிவாக சொல்லவில்லை.
வித்தியாசமான அம்மா இப்படியும் அம்மாக்கள் இருப்பார்களா? அம்மாவின் பாசமற்ற் தன்மைக்கு தெளிவான விளக்கம் இல்லை.
தேவையில்லாத கடைசி டூயட் பாடல்.
மீண்டும் போலீஸ்காரர்களை தவறாகவே காட்டியிருப்பது. எந்த போலீஸ்காரரும் இப்படி சின்ன பையனை கொல்லத்துடிக்க மாட்டார்.
வித்தியாசமான நோய்கள் இருப்பவர்கள் கொலை செய்கிறார்கள், காதலிக்கிறார்கள் இதைத்தவிர வேறொன்றும் செய்யமாட்டார்களா? இந்த படத்திலும் இப்படியே! இன்னும் கொஞ்சம் வித்தியாசம் இருந்திருக்கலாம்.
கொஞ்சம் ஸ்லோவான இரண்டாவது பாதி. இடைவேளைக்குப்பின் கதையை எப்படி நகர்த்துவது என்பதில் கொஞ்சம் குழம்பியிருப்பது நிஜம்.

மெசேஜ்...

படத்தில் காட்டியிருப்பதை போல் போலீஸ்காரர்கள் இருந்தால் முதலில் அவர்கள் துப்பறிவதை விட குற்றவாளிகளின் மனதை புரிய முயர்ச்சிக்கவேண்டும் என்பதை ஆழமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ஆனாலும், ரேணிகுண்டாவில் மிரட்டிய இயக்குனரும் நடிகரும் இதிலும் சோடைபோக வில்லை.
இந்த பதினெட்டு வயசு... மதிகெட்ட மனசு. பார்க்கலாம் ஒருமுறை!


Monday, August 20, 2012

காணவில்லை


காணவில்லை

என் வீட்டுக்கு பின் புறத்தில்

ஒரு மாதம் முன் குட்டிப்போட்டது 
அம்மா பூனை!

நான்கு குட்டிகளும்

அழகான நிறக்கலவைகளில்
கொழுகொழுவென்று கொஞ்சி விளையாடியது.

மனைவிக்கு குட்டிகளால் இம்சையென்றாலும்

நானும், என் நான்கு வயது மகனும்
அவ்வப்போது எட்டிப்பார்த்து மகிழ்ந்தோம்.

மனைவி வெளியே போகும்போதெல்லாம்

குட்டிகளுக்கு பால் வைத்து நெருக்கமானோம்.

கிணற்றில் ஒன்று விழுந்து இறந்துவிட

தெருநாய் ஒன்றை கவ்வியோட
நான்கு இரண்டானது போன வாரம்.

ஜன்னலில் புகுந்து வீட்டுக்குள் குதிப்பதும்

மியாவ் மியாவ் என்று பாலுக்கு ஏங்குவதும்
மனைவியின் காலுக்குள் கிச்சு கிச்சு மூட்டுவதும்
படுக்கைகளில் தாவி தாவி சண்டையிடுவதும்
மகனை குஷிப்படுத்த, மனைவிக்கு இம்சையானது!

மனைவியும் மகனும் லீவில் ஊருக்கு போய்விட

பூனைகளை விட்டு போகமாட்டாமல் அடம்பிடித்த
மகன் செய்வதறியாமல்...திரும்பிவரும்வரை
பத்திரமாய் பாதுகாக்க சொன்னான்.

காலையும் மாலையும் பால்வைத்து மகிழ்ந்தேன்

சுதந்திரமாய் வீட்டுக்குள் உலவவிட்டேன்
மகன் இல்லாத வெற்றிடத்தை
குட்டிகள் எனக்கு நிரப்பியது.

திடீரென்று

இரண்டு குட்டிகளில் ஒன்றைக்காணவில்லை
அண்ணனுடன் விளையாடி மகிழ்ந்த ஒரு குட்டி
இன்று தனியே வெறித்துப்பார்க்கிறது.

நேற்றுமுதல் 

அந்த ஒரு குட்டியையும் காணவில்லை
காலையில் வைத்த பாலில் எறும்புகளின் கூட்டம்
தனியாய் வந்த அம்மா பூனையும்
வலதும் இடதும் நடந்து கத்தி தீர்க்கிறது.

அதனிடம் எப்படி கேட்பது?

குட்டிகளை காணாது எனக்கும்
தூக்கம் வரவில்லை துக்கம் குறையவில்லை
அடுத்தநாளும் குட்டிகள் வரவில்லை.
இன்றும் வரவே இல்லை!

நாய்கள் கவ்வியிருக்கலாம்

வண்டிசக்கரங்களில் சிக்கி யிருக்கலாம்
வழி தவறி தொலைந்திருக்கலாம்
யாராவது தூக்கி போய் இருக்கலாம்.

நாளை ஊரிலிருந்து மகன் வருவான்

குட்டிகளை காணாது எனை கேட்ப்பான்.
எப்படி சமாளிப்பேன்?

வழிதவறிய குட்டியை நீங்கள் பார்த்தால்

மனமிருந்தால் மறக்காது தெரிவியுங்கள்...விஜயா இல்லை அஜித்தா யார் பெரிய அப்பா டக்கர்? ஆய்வு கட்டுரை.
விஜயா இல்லை அஜித்தா யார் பெரிய அப்பா டக்கர்? ஆய்வு கட்டுரை.

பில்லா படம் ரிலீஸானவுடன் தல அஜித்தின் படத்துக்கும் முகநூலில் மரண அடி கிடைத்தாலும், பல அஜித்தின் ரசிகர்கள் அவரை கன்னாபின்னாவென்று புகழ்ந்தும் தேவையில்லாமல் விஜையை தாக்கியும் கோஷமிட்டது தெரிந்ததே.

அதனால் இருவரில் யார்தான் உண்மையான அப்பா டக்கர் என்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.(ஆராய்ச்சி மாணவர்கள் இந்த கட்டுரையை எனக்கு தெரியாமல் ஆராய்ச்சிக்கு யூஸ் பண்ணினால் நான் கோவிச்சிக்கமாட்டேன், சன்மானமும் வேண்டாம்).

கிட்டத்தட்ட இரண்டு பேருமே சமகாலத்து நடிகர்கள்.சேர்ந்துக்கூட நடித்திருக்கிறார்கள். சில படங்களில் இருவருமே நடிகைகளை நம்பித்தான் படங்களில் நடித்திருக்கிறார்கள் (ரம்பா,யுவராணி,சுவாதி,சங்கவி இவர்களின் கவர்ச்சி நடிப்பில்தான் ரொம்ப காலம் இருவரும் குளிர் காய்ந்து இருந்தார்கள்).

ஆனால் கடந்த 6 7 வருடங்களாக இந்த இரண்டு அப்பாடக்கர் நடிகர்களின் நிலைமையே வேறு. ரஜினி கமலுக்கு அடுத்து விஜய், அஜித் என்றானது காலத்தின் கொடுமை.

ஒருவர் அப்பாவின் நிழலில் வெற்றிகளை தந்தவர் இன்னொருவர் தானே முயன்று வெற்றிக்கண்டவர்(!).

முதலில் இருவரையும் தனித்தனியாக பார்ப்போம்.

விஜய்:

அப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட தன்னுடன் நடித்த கதாநாயகிகளின் கவர்ச்சிகளை நம்பி பல படங்களில் தப்பித்து,பின்னர் பூவே உனக்காகவுக்குப் பிறகு தனக்கு என்ன வரும் என்பதை புரிந்துக்கொண்டு வித்தியாசங்களில் கவனம் செலுத்தாமல் கமர்சியல் ஹீரோவாக மாபெரும் தாய்மார்களின் ஆதரவைப்பெற்று இன்று இளைய தளபதியாக தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஆந்திரா,முக்கியமாய் கேரளாவிலும் அடுத்து பற்பொடி விளம்பரம் மாதிரி, இலங்கை, பர்மா,மலேசியா,சிங்கப்பூர் நாடுகளில் புகழ் பெற்றுவிட்டார்).

மினிமம் கியாரண்டி ஹீரோவாகி பல வருடங்கள் ஆனாலும் தான் நடித்த 52 படங்களில் சுமார் பல படங்களை வெற்றிப்படமாகவும், சில படங்களை பிளாக் பஸ்டர் படங்களாகவும், குறைந்த படங்களை தோல்வி படங்களாகவும் தந்து சாதித்துள்ளார்.

விஜய் தனது அப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்டார்.சில படங்களில் அப்பாவின் துணை இருந்தாலும் இன்று தனித்தே நிற்க்கிறார். அவரின் கேஷுவலான நடிப்பும், காமெடி சென்ஸும், அதிரடி டேன்சும் மக்கள் மத்தியில் தனி இடம் இருக்கிறதென்பதில் மாற்றுக்கருத்து இல்லை.(இவரை பற்றி சொல்லும்போது அப்பாவால் வளர்ந்தவர்....அப்பாவால் வளர்ந்தவர்.... என்று சொல்கிறார்கள்....மிகப் பெரிய டைரக்டர்களான பாரதி ராஜாவால் மனோஜையும், பி வாசு தன் மகன் சக்தியையும், நம்ம சத்யராஜ் சிபியையும்...இன்னும் நிறைய உதாரணங்கள் இவர்களால் கிழிக்க முடிந்ததா? ஆகவே என்னதான் அப்பா உதவி செய்தாலும் சொந்த சரக்கும் முக்கியம் நண்பர்களே!)

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் தொடர்ந்து குருவி,அழகிய தமிழ் மகன்,வில்லு, சுரா என அடுத்தடுத்து ஃபிளாப் கொடுத்தாலும் பின்னர் தொடர்ந்து ஹிட் கொடுத்து இன்றும் டிஸ்ட்ரிபூயூட்டர்களின் தேர்வில் முதல் இடத்தில் இருப்பது நிஜம்.அரசியல்,பொது தொண்டு என்று கொஞ்சம் மனித நேயத்துடனும் நடந்துகொண்டு இருக்கிறார்.

அஜித் :-

அஜித்தை பற்றி சொல்லும்போது எல்லோரும் யாரின் துணை இல்லாமலும் சொந்தமாய் உழைத்து சினிமாவில் முன்னுக்கு வந்தார் என்று இதையேத்தான் சொல்லுகிறார்கள் (அப்போ...ரஜினி, கமல், சியான் விக்ரம்....இவங்க எல்லாம் யார்மூலம் வந்தார்களாம்?)

ஆனால் இந்தியாவின் ஓபனிங்க் கிங் இவர்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.(ஓபனிங்க் கிங் என்று அஜித்தை ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா? ஒரு வாரத்துக்கு அப்புறம் அந்த படம் தியேட்டரில் இருக்காது என்பதால் ஒரு வாரத்துக்குள் எல்லோரும் பார்த்துவிடுவதால்).ஜோக்ஸ் அபார்ட்....உண்மையிலேயே அவர் ஓபனிங் கிங்தான்.

அஜித்தின் திரைப்பட வரலாற்றில் வாலி ஒரு மைல் கல். ஆனால் விஜையை கம்பேர் பண்ணினால் இவரின் வெற்றி சதவிகிதம் ரொம்ப கம்மியே.

பிரியாணி சமைப்பதிலும், பைக்,கார் ரேஸிலும் இவர் கில்லாடி.முக்கியமாய் அழகான தமிழ் ஹீரோக்களில் இவர்தான் டாப். ஆனால் தற்ப்போதைய நரை....கொஞ்சம் டிஸ்ட்ரப் செய்வது நிஜம்.அதனால்தான் தனது தோற்றத்துக்கு ஏற்ற வேடங்களிலும், மல்டி ஸ்டார் படங்களிலும் நடித்து வருகிறார். சத்தமில்லாமல் உதவி செய்வதிலும், மற்ற கலைஞர்களை மதிப்பதிலும் இவர் ஒரு அல்டிமேட் ஸ்டார்.

இளைஞர்களின் ஃபேன் பேஸை கொண்ட அஜித் தன் நற்ப்பணி மன்றங்களை கலைத்தாலும் அவருக்கு இன்னும் மவுஸ் குறையவில்லை என்பது நிஜம். ஆனால் ஒன்மேன் ஷோவாக நடிக்கும் அஜித் இன்னும் கதைகளில் கவனம் செலுத்தினால் நல்லது.

பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்ளாமல் இருப்பது வருத்தமே!.

தளபதியும்,தலெயும் நட்புடந்தான் இருக்கிறார்கள்....இந்த மூளையில்லாத ரசிகர் பட்டாளம்தான் இண்டர்னெட்டிலும், செல்ஃபோன் மெஸேஜிலும் அடித்துக்கொண்டு அலைகிறார்கள்.

விஜய் வருடத்துக்கு அப்படி, இப்படி யென்று இரண்டு மூன்று படங்களில் நடித்து விடுகிறார். ஆனால் அஜித் வருடத்துக்கு ஒரு படம் கூட நடிப்பது இல்லை.

சூழ்நிலைகளை பார்க்கும்போது அஜித் இன்னும் மூன்று நான்கு வருடங்கள்தான் நடிப்பார். ஆனால் விஜய் தாத்தாவாகும் வரை கதாநாயகனாகவே நடித்துக்கொண்டிருப்பார் என கோலிவுட் பட்சி சொல்கிறது.

கடைசியாய் இருவரில் யார் பெரியவர் என்று ஆராய்ந்து பார்த்தால் இந்த கட்டுரையின் தலைப்பில் யார் பெயர் முதலில் வருகிறதோ அவரையே சொல்லலாம்.

வேலை வெட்டி இல்லாமல் நான் இந்த கட்டுரையை எழுதவில்லை. இனிமேலாவாது மொக்க படங்களுக்கும்,வேலைக்காகாத ஹீரோவுக்காகவும், உங்களின் ஃபேவரைட் ஹீரோ என்பத்ற்க்காக வக்காலத்து வாங்காதீர்கள். நல்ல் அப்டங்களை வரவேற்ப்போம்....அது எந்த ஹீரோவின் படமாக இருந்தாலும் சரி.

இதில் மாற்றுக்கருத்து இருப்பவர்கள் தங்களின் கருத்தை தெரிவிக்கலாம். உங்களின் கருத்துக்கள் மிதிக்கப்படும்....சாரி.....மதிக்கப்படும்!

அட்ட கத்தி - விமர்சனம்.
அட்ட கத்தி - விமர்சனம்.

முதல்முறை கொஞ்சம் தயக்கத்துடன் விமர்சனம் எழுதுகிறேன். காரணம் எங்கள் ஓவியக் கல்லூரி மாணவரின் இயக்கம் என்பதாலும் நடுநிலமை தவறாமல் எழுதவேண்டும் என்கிற பயமும்தான் காரணம்.

அட்ட கத்தி - வித்தியாசமான பெயர். இந்த பெயரை ஆராய்ந்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வழக்கத்தில் உள்ள வார்த்தை. அதாவது சும்மா பீலா, உதார், வெட்டி பில்டப் விட்டுக்கொண்டு அலையும் ஆட்களை அட்ட கத்தி என்றழைப்பார்கள். (ஒன்றுக்கும் வேலைக்காகாதவர்கள் மற்றவர்கள் முன் ஓவராய் பீத்திக்கொள்பவர்கள்)....தலை சுற்றுகிறதா.....

இந்த படத்தில் நாயகன் தான் அட்ட கத்தி. அதுவும் பார்க்கும் பெண்களையெல்லாம் காதலிக்கும் ஹீரோ கடைசியில் ஒவ்வொரு காதலும் நம் நாயகனை கவுக்க....பரிதாபமாக அடுத்த பெண்ணை தேடும் இளவயசு கல்லூரிக்காதல்தான் இந்த படம்.

பல படங்களில் நாம் பார்க்கும் நாயகன் பத்துப்பேரை அடிப்பான்....ஒரு பெண்ணை நோட்டம் விட்டால் அந்த பெண் அப்படியே நாயகணை துரத்தி துரத்தி காதலிப்பாள்.சாதாரணமான நம்மால் செய்யாததை செய்பவன்தான் ஹீரோ. ஆனால் இந்த ஹீரோ படம் பார்ப்பவர்களின் யதார்த்தமான நிஜ பதிவு. இந்த படத்தின் நாயகனின் நிலைதான் நம் பலபேருக்கு நடந்திருக்கும் என்பதுதான் இந்த படத்தின் வெற்றி.( நானும் என் பழைய 22A பேருந்தின் நினைவலைகளை நினைக்க தவறவில்லை).

தினமும் சென்னைக்கு புற நகரில் இருந்து பஸ்ஸில் வரும் கல்லூரி மாணவனாக தினா வேடத்தில் அசத்தியிருக்கிறார் புதுமுகம் தினேஷ். தனது கேஷுவலான நடிப்பில் கவர்கிறார். அதுவும் ஒரு காட்சியில் கோபத்தை வரவைக்க அவரின் அலம்பல்கள் நம்மை கொள்ளைகொள்கிறார். நண்பர்கள் மத்தியில் தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்ள உதார் விடுவதிலாகட்டும், கராத்தே மாஸ்டரிடம் அடி வாங்கிவிட்டு அழுவதிலாகட்டும், தாவணிகளை பார்த்தால் வழிவதிலாகட்டும், திடீரென்று "தலை"யாய் காலரை தூக்கிவிட்டு கெத்து காட்டுவதிலும் தமிழுக்கு அடுத்த நல்ல நடிகர் ரெடி.

ரெண்டு மூணு நாயகிகள் வந்தாலும் கடைசியில் வந்து ஆப்பு அடிக்கும் பெங்களூர் தக்காளி நந்திதா மிளிர்கிறார். ஆனாலும் அந்த டுவின்ஸ் ஜோடிகள் அருமை. கலக்கலான நடிப்பும் அருமை.

கதையென்று பெரிதாக ஒன்றும் இல்லையென்றாலும் படம் பார்ப்பவர்களை தங்களின் ஜாலியான பழைய நினைவுகளுக்குள் கொண்டு செல்வதில் இயக்குனர் ரஞ்சித் தனித்து நிற்க்கிறார். இப்படித்தான் ஹீரோ இருக்க வேண்டும் என்பதற்க்கு பதில் இப்படியும் ஹீரோக்கள் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார். வெங்கட் பிரபுவின் சீடரான ரஞ்சித் அவரைப்போலவே முதல் படத்தில் இளைஞர்களை கவர்ந்திருக்கிறார்.

சாதாரண வழக்கு மொழிகளிலும், கல்லூரிமானவர்களின் கலாட்டாக்கள் நிறைந்த வாழ்க்கையையும் அழகாய் படம் பிடித்திருக்கிறார். இன்னும்... கதாநாயகனின் அப்பா அடிக்கும் லூட்டிகளில் சிரிப்புக்கு பஞ்சமில்லை.

முக்கியமாக சொல்லவேண்டிய இன்னொரு விஷயம் அந்த கானாப்பாடல்கள்....இப்போது பேருந்துகளில் அவ்வளவாக இந்த மாதிரி பாடல்கள் இல்லையென்றாலும் பத்து வருடங்களுக்கு முன்பு வரை பேருந்துகளில் கல்லூரி மாணவர்களின் கானாப்பாடல்களுக்காகவே பொது மக்கள் கூட்டம் இருக்கும். படத்தில் நான்கு கானாப் பாடல்கள் கேட்பதற்க்கு இனிமை(அதுவும் அந்த ஆடிப்போனா ஆவணி).

யதார்த்தமான ஒளிப்பதிவும், ஆர்ட் டைரக்க்ஷனே தெரியாத ஆர்ட் டைரக்ஷனும்(நண்பர் ராமலிங்கம்), மிதமான இசையும்(சந்தோஷ் நாராயணன்) படத்தின் சிறப்புக்கு உதவி செய்துள்ளார்கள்.

ஞானவேல் ராஜாவின் திறமையான அக்ரெசிவ் மார்க்கெட்டிங் உத்தியில் இந்த "அட்ட கத்தி" "தங்க கத்தியாக" சாத்தியம் உண்டு.

மைனஸ்:

படம் கொஞ்சம் மெதுவாகவே நகர்வதால் அவ்வப்போது சலிப்பு வருவது நிஜம்.பஸ், காதல், பாடல் என்று பலமுறை தொடர்ந்து அடிக்கடி காட்டுவதால் புதிதாய் ஒன்றும் கவரவில்லை.

எந்த பெண்ணும் ஏன் நாயகனை வெறுக்க வேண்டும், ஏன் வெறுத்தார்கள் என்பது கடைசிவரை தெரியவில்லை. அப்படி வெறுக்கும் அளவுக்கு  நாயகன் மோசமாகவும் இல்லை. நாயகன் கொஞ்சம் காமெடியன் ஆகிவிட்டாரோ என நினைக்க தோன்றுகின்றது.

பன்ச்:

இந்த காதலும் காதலை சார்ந்த அட்ட கத்தி பலரின் நினைவலைகளை துளைக்கும் என்பதில் சந்தேகமில்லை....ஆனாலும் இன்னும் ஆழமாக மனதை துளைத்து நெருடவில்லை என்பது நிஜம்.

Sunday, August 12, 2012

மதுபானக்கடை - விமர்சனம்மதுபானக்கடை - விமர்சனம்


சனிக்கிழமை என்பதால் சரக்கு ஞாபகத்தில் இந்த படத்திற்க்கு போனேன். ஆனால் உண்மையிலேயே ஆல்கஹால் கலக்காத அமிர்தம்தான் இந்த மதுபானக்கடை.

மிகுந்த சிரமத்துக்கு இடையில் பல கட்டுகளுடன் வந்திருக்கும் "A" சர்டிஃபிகேட்டுடன் வந்திருக்கும் படம்.அரசுக்கு எதிராகவும், சமூக அவலங்களையும் காட்டினால் இப்படித்தான் செர்டிஃபிகேட் கொடுப்பார்களோ?

பலகால இந்திய சினிமா வரலாற்றில் மொத்தப்படமும் ஒரே ஒரு லொகேஷனலில் எடுக்கப்பட்ட ஒரு சில படங்களில் இந்தப்படமும் என்று. அதுவும் அழுக்கான, அருவெறுப்பான, அசிங்கம் மிகுந்த இடமான டாஸ்மாக் பாரில் நடக்கும் இரண்டுநாள் கதைதான் இந்த படம்தான். அதுவும் காந்தி ஜெயந்திக்கு முதல்நாள் வரை நடக்கும் கதை. முக்கியமாக தமிழ் திரைப்பட வரலாற்றில் முழுக்க முழுக்க புது முகங்களை கொண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.

ஒரே ஒரு பாரில்(Bar) நடக்கும் கதையை வெறும் குடிகாரர்களையும், டாஸ் மாக் வேலையாட்களை கொண்டு இப்படி சலிக்காத படத்தைக்கொடுக்க முடியுமா?

கொடுத்திருக்கிறார் இந்த இயக்குனர். தமிழ்நாட்டின் முக்கால் பகுதி வருமானத்தை கொடுக்கும் அவலங்கள்தான் இந்த மதுபானக்கடை.

அழகான லொகேஷன்கள் இல்லை, பல வண்ண பெண்கள் இல்லை, கவர்ச்சிப்பாடல்கள் இல்லை, வெளிநாட்டு பாடல்கள் இல்லை, அதிரும் சண்டைகள் இல்லை, ஆர்ப்பரிக்கும் வசனங்கள் இல்லை, கமர்ஷியல் கலாட்டாக்கள் இல்லை...இப்படி ஆயிரம் இல்லை இல்லை என்று சொன்னாலும் இந்த படத்தில் அதையும் தாண்டி ஆயிரம் இருக்கின்றது.

கதைஎன்று ஒன்றும் இல்லை டாஸ்மாக் பாரில் நடக்கும் நிகழ்வுகள்தான் கதை. டிப்டாப்பாக ஆங்கிலம் பேசி காசு கடன்வாங்கி குடிக்கும் சாப்ட்வேர் அல்லக்கை, கவர்மண்ட் ஆசிரியர், போலீஸ் ரைட்டர்( காலில் விழும் காட்சிகள் அபாரம்), அரசியல் அப்பாடக்கர், மனநலம் பாதித்தவர், பாடியே கோட்டர் அடிக்கும் பெருசு,கள்ள சரக்கை கலக்கும் பார் முதலாளி, ஓனர் மகளையே காதலிக்கும் பார் அட்டெண்டர்,காதலுக்கு உதவும் நண்பன், இறுதியில் கிளர்ந்து எழும் சாக்கடைகளை கிளீன் செய்யும் தொழிளாளி மற்றும் லஞ்சம் வாங்கும் போலீஸ் என அத்தனையும் ஒரு குண்டாவில் ஊற்றி சரியான கலவையில் பரிமாறப்பட்ட் இந்த காக்டெய்ல் உண்மையிலேயே தேவாமிர்தம்தான்.

இரண்டுகாட்சிளில் வரும் பருவ காதலாகட்டும், நண்பன் காதலை கண்டித்தாலும் கடைசியில் அவனுக்கு உதவும் நண்பனும், காலை கடை திறக்கும் முன்னே கடைமுன் புலம்பும் சாதாரண குடிமகன் ஆகட்டும் இங்கே யதார்த்தத்தின் கலவைகள் ஏராளம்.

இழையோடும் நகைச்சுவை, சலிக்காத காட்சிகள், யதார்த்த வசனங்கள் என அத்தனையும் ஒவ்வொரு சுவை.

அழுக்கான பாரில் கேமரா அழகாய் நகர்கிறது(சுமீ பாஸ்கரன்), பாடல்களில் சமூகம் விமர்சிக்கப்படுகிறது, ஆர்ட் டைரக்ஷன் கன கச்சிதம் (வினோ). பணம் கொழிக்கும் வியாபார்த்தின் அழுகிய பக்கங்கள் இங்கே பார்வைக்கு காட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தில் எல்லோரும் அறிமுகம்தான். முழுக்க முழுக்க அறிமுகங்களை கொண்டு இவ்வளவு சிறப்பான நடிப்பை வாங்கிய இந்த குழுவுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்,கைத்தட்டலாம்.

மைனஸ்:

எல்லாமே பிளஸ்தான். ஆனாலும் எனக்கு கண்ணில் பட்ட நெருடல்கள் சில.

இரண்டு காட்சி காதல்களில் காதலை விட காமம் தான் அதிகம். ஆனாலும் (இந்த படத்திலும் பெரிய பணக்கார பெண் ஏழையைத்தான் காதலிக்கிறாள்). ஆனாலும் டாஸ்மாகில் வேலைசெய்யும் ஆண்களை காதலிப்பார்களா தெரியவில்லை.

குடிப்பவர்கள் எல்லோரும் ஏழைகள், மனக்கவலைகளுக்காகத்தான் குடிக்கிறார்கள் என்பது ஒத்துக்கொள்ள முடியவில்லை. சந்தோஷத்திற்க்காகவும் அளவாய் குடிப்பவர்களும் இருக்கின்றார்கள்.

படமே பாரில்தான்(Bar) எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் புகைப்பிடிக்கும் காட்சிகளில் மட்டும் "புகை உடலுக்கு கேடு" என்கிற வாசகத்தை போடுகிறார்கள்.மொத்தமாக படம் முழுதும் அந்த வாசகத்தை போட்டிருக்கலாம் போலே.

குடிப்பதை சொல்லிய இயக்குனர் அதனால் வரும் ஆபத்தை ஒரே ஒரு காட்சியிலாவது சொல்லியிருக்கலாம்.

வித்தியாசமான படங்களை என்றும் ஆதரிக்கும் இந்த தமிழ் சமூகம் இந்த படத்தையும் ஆதரிக்கும்.யாருமே சொல்லத்தயங்கிய கதையை தைரியமாய் எடுத்த இயக்குனர்/ தயாரிப்பாளருக்கு(கமலக்கண்ணன்) வாழ்த்துக்கள்.

"மதுபானக்கடை கமர்சியல் ஆல்கஹால் கலக்காத காக்டயில் எனர்ஜி டிரிங்க்".