Sunday, June 24, 2012

சகுனி - விமர்சனம்.
சகுனி - விமர்சனம்.

என்ன மாமா சௌக்கியமா?

தொடர்ந்து பல வெற்றிகளை கொடுத்த அழகான சிரிப்பால் தாய்மார்களின் ஆதரவை கொண்ட நம்ம மச்சா கார்த்தி நடித்த படம். கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு பின் வெளிவரும் படம்.சுமார் 1150 தியேட்டர்களில் உலக அளவில் வெளியிடப்பட்ட படம். மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பையும், ஆர்வத்தையும் கமல்,ரஜினி, ஸ்ரீதேவி வசனத்துடன் விளம்பரங்களில் கொஞ்சம் சர்ச்சையை உண்டாக்கிய படம் இந்த சகுனி.

மகாபாரதத்தில் சகுனி சாணாக்கியத்தனமாய் லாஜிக்குடன் காய் நகர்த்துவான். ஆனால் இந்த சகுனி நம் காதில் லாஜிக் இல்லாமல் பூ சுற்றுவான். அதுவும் பரபரப்பாக இருக்க வேண்டிய இரண்டாவது பாதியில் லாஜிக்காவது கூஜிக்காவது!

என்னதான் கதை.....

தனது பாரம்பரிய வீட்டை காக்க முதலமைச்சரை நாடுகிறான் நாயகன். முதலமைச்சர் கையை விரிக்க கந்து வட்டி பொம்பளை ரவுடியை மேயராகவும், வேலைக்காகாத சாதி கட்சி தலைவரை முதலமைச்சராகவும் ஆக்குகிறான் நாயகன் (அட நம்புங்க சார்). அரசியல் படமாக எடுத்து அரசியலை பயங்கராமாக கலாய்த்திருக்கிறார்கள். அரசியல் என்பது இவ்ளோ ஈசியானதா? தெரியாமல் போய்விட்டதே!

தமிழ் பட வரலாற்றில் மூன்றே மூன்று சீன்களில் வரும் கதாநாயகியை இப்போதுதான் காண்கிறேன். படம் மொத்தமே 10 நிமிடம் கூட வருவதில்லை கதாநாயகி, பாடல்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஒரு நாலு டயலாக்குதான் பேசுகிறார். ம்ம்ம்...நல்ல அறிமுகம்.கமலாக கார்த்தியும், ரஜினியாக சந்தானமும் கலக்கலான அறிமுகம் முதல் பாதியில் சந்தானம்தான் ஹீரோ. வயிறு புண்ணாக சிரிக்க வைக்கிறார். எத்தனை படத்தைதான் இப்படி காமெடியால் தூக்கி நிறுத்துவார் என்று தெரியவில்லை.

கார்த்திக்கு கல்யாணத்துக்கு பிறகு வெளிவரும் படம்.கொஞ்சம் கேர் ஃபுல்லாக இருந்திருக்க கூடாதா கார்த்தி.

கந்து வட்டி ரவுடியாக வரும் ராதிகா, வித்தியாசமான வேடம் அவரின் பங்குக்கு வழக்கம்போல் கலக்கல்தான். ஆனால் ஊர் பேர் தெரியாத நாயகனை நம்பி எப்படி ஒரே சீனில் அரசியலில் நிற்க்க ஒத்துக்கொள்கிறார் என்று தெரியவில்லை. தாதாவுக்கு அரசியல் தொடர்பு இல்லாமலா இருக்கும்?

சாமியாராக நாசர்....மக்கள் பணத்தை கொண்டு கடைசியில் மக்களுக்கே கொடுக்கும் வகையில் நல்லவராய் வந்து போகிறார்.

சாதி கட்சி தலைவராக பெருமாள் அப்பாவியாக நல்லவராக முதன் முதலாய் நடித்திருக்கிறார். சிரிப்பை மாற்றக்கூடாதா சார்?

திடீர் வில்லியாகும் நாயகனின் அத்தை ரோஜா, வந்து போகிறார். பிரகாஷ் ராஜின் கீப்பாக கிரண்.

முக்கிய வில்லன் பிரகாஷ்ராஜ்...வழக்கம்போல் கதாநாயகனால் நடு மண்டையை சொறிகிறார்.சத்தம் போடுகிறார். அவ்வளவே!

கௌரவ நடிப்பில் அனுஷ்கா, ஆண்ட்ரியா...தேவையா?

பாடல்களில் அவ்வளவாக புதிதாய் ஒன்றும் இல்லை.ஓளிப்பதிவு சொல்லும் படியாக ஒன்றும் இல்லை.இதுவரை பார்த்த படங்களில் வெறும் சாதாரண ஒளிப்பதிவு இதுவே....மாஸ் ஹீரோவுக்கு(!) இவ்வளவுதானா?

முதல் பாதியிலும் கதை சொன்ன விதத்திலும், காமெடியிலும் கலக்கிய இயக்குனர் தயாள் பின் பாதியில் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கிவிட்டார்.

ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது,
ஓவர் மாஸ் சகுனிக்கு சேராது.

மொத்தத்தில் இந்த சகுனி வெறும் மங்குனி.

இதே மாதிரி கதைகளில் கார்த்திக் நடித்தால் அவருக்கு "சங்கு இனி"!

Sunday, June 17, 2012

தூண்டல்!தூண்டல்!

பசி என்று அழுகையில்
பாசமாய் பாலூட்டிய அம்மா

தவழ்ந்து நடக்க முயன்றபோது
தாவி வந்து கை கொடுத்த அப்பா

அடிக்கடி என் பொய் அழுகையை நிறுத்த
அஞ்சி பைசா ஜீனி மிட்டாய் லஞ்சம் தந்த அண்ணன்

பள்ளிக்கூட பரீட்ச்சையில் பாசாக
பேப்பரை காட்டிய பக்கத்து நண்பன்

கண்டவுன் காதல் வந்ததை
காலத்தே சொன்ன காதலி

வேலைக்கு ஆள் வேண்டும் என்று
வேதனைக்கு புள்ளிவைத்த பக்கத்து வீட்டு மாமா

இப்படி...

எல்லாவற்றுக்கும் அடுத்தவரை
நம்பி வளர்ந்து வாழும் என்னை பார்த்து

இன்று மனைவி புலம்புகிறாள்...

"சரியான மரமண்டையை கட்டிவச்சுட்டாங்களே!"

எப்படி புரியவைப்பேன்
தூண்டினால்தான் நான் துலங்குவேன் என்று!


தைரிமானவராக இருந்தால் இந்த உண்மைக் கதையை படியுங்கள்.


தைரிமானவராக இருந்தால் இந்த உண்மைக் கதையை படியுங்கள்.முதலில் இது கற்ப்பனை கதை அல்ல...உண்மைக்கதை.


ஒரு 8 அல்லது 9 வருடத்துக்கு முன் நடந்த நிஜக் கதை.சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். (இதை காப்பி அடிப்பதோ, என் அனுமதி இல்லாமல் சுடுவதோ தண்டனைக்குறிய செயல். இதன் காப்பிரைட் உரிமை முழுக்க முழுக்க என்னுடையதே). பெயரும் தொழிலும் மாற்றப்பட்டுள்ளன.

மலைப்பிரதேசத்தில் உள்ள கிராமம் எங்களுடையது. தினமும் ஊட்டிக்கு வேலைக்கு சென்றுவிட்டு ஊர் திரும்புவேன்.

நான் மார்க்கெடிங்கில் வேலை செய்கிறேன். அதனால் வீட்டுக்கு வர நேரம் காலம் கிடையாது. ஊருக்கு கடைசி பஸ் 8 மணிக்கு ஒன்று உள்ளது.

அதற்க்கு பிறகு பக்கத்து ஊருக்குத்தான் பஸ் உண்டு. அங்கிருந்து எங்கள் ஊருக்கு இரண்டு மலைகளை கடந்து ஒற்றையடி காட்டுப்பாதை வழியாக வரவேண்டும்.

மூன்று நாட்கள் வேலைக்ககாரணமாக கோயமுத்தூருக்கு சென்றிருந்தேன். அதனால் நான் ஊரில் இல்லை. அப்பொல்லீலாம் மொபைல் போனும் அவ்வளவாக கிடையாது.

கோயமுத்தூரிலிருந்து திரும்பி வரும்போது  மணி 10 ஆகிவிட்டது. எங்கள் ஊரின் கடைசி பஸ்ஸும் போய்விட்டதால் பக்கத்தில் உள்ள ஊரின் கடைசி பஸ்ஸில் வந்து இறங்கினேன்.

நேரம் கிட்டத்தட்ட 10.30 மணி ஆகிவிட்டது. பஸ்ஸில் என்னுடைய ஊர்க்காரர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடி பார்த்தேன்.என் கெட்ட நேரம் யாரும் இல்லை.

வேறு வழியில்லாமல் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். பயம் போக ஒரு பழைய பாடலை பாடிக்கொண்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தேன்.கை கால்கள் பயத்தில் நடுங்கினாலும் மனதை தேற்றிக்கொண்டு ஓடினேன்.இருட்டில் எல்லாமே பார்க்க பயமாகத்தான் இருந்தது.

10 நிமிடங்கள் நடந்திருப்பேன். நிலா வெளிச்சத்தில் மெல்லிய வெளிச்சம், ஒற்றையடிப்பாதை கொஞ்சம் மங்கலாக தெரிந்தது.

எனக்கு முன் ஏதோ நிழலாடியது. சட்டென்று பயம் வந்தாலும் சுதாகரித்துக்கொண்டு உற்றுப்பார்த்தேன். யாரோ எனக்கு முன் நடந்துக்கொண்டிருந்தார்கள்.

யாரது? மெதுவாய் கேட்டேன்.

அந்த உருவம் திரும்பி என்னை பார்த்தது.

யாரு ராமுவா? என்னை பார்த்து கேட்டது.

அட...குமாரண்ணே...நீங்களா....

குமார் அண்ணனை பார்த்தவுடன் எனக்கு பயமெல்லாம் போய்விட்டது.

என்ன அண்ணே இந்த நேரத்துலே என கேட்டேன்?

இல்லப்பா ஸ்கூல்லே கொஞ்சம் வேலை என்றார். அவர் ஸ்கூலில் ஆல் இன் ஆல் அளகு ராஜாவாக இருக்கிறார். ஸ்கூல் அட்டெண்டர்.

நிம்மதி பெருமூச்சு விட்டேன். இனி கவலை இல்லை பயமில்லாமல் வீடு போய் சேரலாம்.
குமார் அண்ணன்,குடும்பத்தை பற்றி பேசத்தொடங்கினார். மனைவி பாவம் என்றார். மகளுக்கு ஒரு ஜாம்பெண்ட்ரி பாக்ஸ் வாங்கணும் என்றார்.(ஊரில் ஏதாவது வேண்டுமென்றால் என்னிடம்தான் சொல்வார்கள், காரணம் சுமார் 3 அல்லது 4 பேர் தான் நகரத்துக்கு வேலைக்கு வருகிறோம் என்பதால்).

ராமு நாளைக்கு ஊட்டியிலிருந்து ஜாம்பெண்ட்ரி பாக்ஸ் வாங்கி கொடுப்பா...பணம் அப்புறமாய் தர்ரேன். என்றார்.

சரிங்கண்ணே நாளைக்கு வாங்கிக்கொடுக்குறேன்.என்றேன்.

ஸ்கூலில் ரொம்ப வேலை வாங்குகிறார்கள் என்றார். எல்லாம் என் பொண்ணுக்காகத்தான் உழைக்கிறேன் என்று சொன்ன போது அவரில் குரல் தழுதழுத்தது.

பொண்ணை எப்படியாவது நல்லா படிக்க வைக்கணும்.அவளும் நல்லா படிக்கிறா என்றார் பெருமையுடன்.

ஊர் பக்கம் வந்துவிட்டோம். ஊரின் மின்சார லைட்டு கம்பங்கள் கண்ணில் பட தொடங்கிவிட்டன.

ராமு நீ போய்கிட்டே இரு நான் இதோ டாய்லெட் போய்ட்டு வந்துடரேன். என்று குமார் அண்ணன் பக்கத்தில் நின்றுக்கொண்டார். ஊரில் எல்லாம் டாய்லெட் போவதெல்லாம் அந்த சோலையில்தான்.

ராமூ நாளைக்கு ஜம்பெண்ட்ரி பாக்ஸ் மறந்துராதே என்றார்.

நானும் ஊர் பக்கத்தில் வந்துவிட்டதால் சரிண்ணே என்று சொல்லி வேகமாய் வீட்டுக்கு வந்தேன்.

மனைவி தூங்காமல் காத்து இருந்தாள். கை கால் களை கழுவி விட்டு சாப்பிட உட்கார்ந்தேன்.

மூன்று நாளாய் ஊரில் இல்லாததால் என்னென்னே நடந்தது ஊரில் எனக்கேட்டேன்.

பக்கத்து வீட்டு மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்றாள். அப்புறம் மேல் வீட்டு அண்ணன் எனக்கு தர வேண்டிய பணத்தை திருப்பி தந்ததை சொன்னாள்.

நானும் சாப்பிட்டு முடித்தேன்.

அய்யோ...மறந்துட்டேங்க....நம்ம ஸ்கூல் அட்டெண்டர் அண்ணா குமார் முந்தா நேத்து ஆர்ட் அட்டாக்கில் செத்துட்டாங்க என்றாள்...

எனக்கு உடம்பு முடிகள் அனைத்தும் கம்பியாய் குத்திட்டு நின்றது. உடம்பு சில்லென்று....ஆனாலும் வேர்த்தது!

மீதிக்கதையை சொல்ல இன்னும் மூன்று மாதங்களாவது ஆகும்.

 

Saturday, June 9, 2012

நானும் என் புகாரி கேக்கும்!

நானும் என் புகாரி கேக்கும்!

கல்லூரியில் படிக்கும்போது மாதம் அப்பாவிடமிருந்து 550 ரூபாய் வரும் (நான் தான் ஹாஸ்டலில் அப்பாவிடமிருந்து அதிகம் பணம் வாங்கும் மாணவர்களில் ஒருவன் என்பது வேறு விஷயம்). மெஸ் பில், பஸ் பாஸ் மற்றும் இதர செலவுகள் போக ஒரு மாத பாக்கெட் மணியே எங்களுக்கு 100 ரூபாய்தான்.

கல்லூரி நேரம் போக மவுண்ட்ரோடில் இருக்கும் தினபூமி பத்திரிகை ஆஃபீஸில் பார்ட்டைம் லே அவுட் ஆர்ட்டிஸ்ட்டாக சுமார் இரண்டு வருடம் வேலைப்பார்த்தேன்.அங்கே வாரச்சம்பளம் 270 ரூபாய் (1995-ல்).

மவுண் ட்ரோடில் பாட்டா ஷோரூமுக்கு எதிரில் இருக்கும் புகாரி பேக்கரியை தாண்டிதான் தினமும் தினபூமி வேலைக்கு செல்வேன். புகாரியில் இருக்கும் கேக்கு வகைகள் மிகப்பிரமாதமான சுவைக்கொண்டவை என கேள்விப்பட்டதுண்டு. ஒவ்வொரு முறையும் கண்ணாடிக்குள் உள்ள கேக்குகளை பார்த்துக்கொண்டு செல்வேன்.

இந்த சனிக்கிழமை சம்பளம் வாங்கிவிட்டு கேக்கை சாப்பிட வேண்டும் என நினைத்துக்கொள்வேன்.

சனிக்கிழமை கவரில் சில்லரையுடன் சம்பளக்கவர் வாங்கிக்கொண்டு வேகமாய் புகாரிக்கு சென்று கேக்கை காட்டி விலையை விசாரித்தேன்.

8 ரூபாய் என்று சொன்னார்கள். எனக்கு மூச்சு அடைத்தது. காரணம் வாரம் ஒருமுறை சாப்பிடும் அடையார் பவனில் ஒரு ஃபுல் மீல்ஸ் 13 ரூபாய்தான்.

வேண்டாமென்று திரும்பி வந்துவிடுவேன்.

அடுத்த நாள் புகாரியை தாண்டும்போது மறுபடியும் அந்த வெள்ளை கேக் நினைவுக்கு வரும்.சரி இந்த வாரம் சாபிடலாம் என்று நினைப்பேன்.

அடுத்த வாரமும் சம்பளம் வாங்கிவிட்டு புகாரி போவேன். மீண்டும் இரண்டுமனதாய் சாப்பிடாமல் திரும்பி வருவேன்.

நீங்கள் நம்ம மாட்டீர்கள் இப்படியே வாரா வாரம் சாப்பிடாமலே திரும்பி வருவேன்.

இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. அந்த கேக்கை மட்டும் நான் சாப்பிட முடியவில்லை, பொருளாதாரம் இடமளிக்க வில்லை.

பின்னர் கல்லூரி முடிந்து வேலைக்கு சென்றுவிட்டேன். புகாரியை மறந்தும்போனேன். பின் இரண்டு வருடம் கழித்து பெங்களூர் சென்றுவிட்டேன்.

கிட்டதட்ட 8 வருடம் கழித்து பெங்களூர், ஹைதராபாத் அங்கெல்லாம் வேலைப்பார்த்து சென்னைக்கு மனைவி, மகனுடன் திரும்பி வந்தேன்.

முதல் காரியமாக ஒரு சனிக்கிழமை புகாரிக்கு குடும்பத்துடன் சென்றேன்.

குறிப்பிட்ட அந்த வெள்ளை கேக்கை காட்டி ஆர்டர் செய்து குடும்பத்துடன் சுவைத்து மகிழ்ந்தேன். நான் மட்டும் மூன்று கேக் தின்றேன்.அன்று 6 ரூபாய்க்கு விற்ற ஒரு கேக் இன்று 38 ரூபாய்.

என் மகன் என்னை ஆச்சர்யமாக பார்த்தான்."கேக்கே சாப்பிடாத அப்பா இன்று இப்படி சின்ன பையன் மாதிரி சாப்பிடுகிறாரே" என்று என்னிடம் கேட்டே விட்டான்.

ஆனால், என் மகனுக்கும், மனைவிக்கும் தெரியாது எனக்கும் அந்த கேக்குக்கும் உள்ள உறவு.

இன்று பிஸ்சா, பர்கர்,கிரெடிட் கார்ட் என்று வாழ்ந்தாலும்...அன்றைய காலங்களை இன்றும் மறக்காமல் வாழ்வது ஒரு சுகம்தான்.

புகாரி கனவு எனக்கு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து நனவானதில் மகிழ்ச்சியே!

PROMETHEUS.......3D திரைப்பட விமர்சனம்.
PROMETHEUS.......3D திரைப்பட விமர்சனம்.

ரொம்ப நாள் கழித்து ஒரு ஆங்கில படம் புரமோத்தியஸ் 3டி யில் சதயத்தில் பார்த்தேன்.

கதை ஏலியன் பட வரிசைகளில் 20 வருடங்களுக்கு முன்பிருந்து நம்மை அசத்திய ரிட்லி ஸ்காட்டின் அடுத்த பிரமாண்டம். இதுவரை நான் பார்த்த ஆங்கில படங்களில் இதுதான் மிகம்பிரமாண்டம் அதாவது அவதார் படங்களை தூக்கி சாப்பிடும் படம்.

என்னதான் கதை. சில விஞ்சானிகள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இருக்கும் சில குகை ஓவியங்களை பார்க்கிறார்கள். அவை இன்ன பிற ஓவியங்களுடன் ஒத்துப்போகிறமாதிரி இருப்பதால் மனிதர்களை இன்னொரு வர்க்கத்தினர்தான் (வேற்றுகிரகத்தினர்) உருவாக்கியிருக்கிறார்கள், அவர்கள் வேறொரு கிரகத்தில் வாழ்ந்துக்கொண்டிருப்பதாக முடிவுக்கு வந்து அவர்களை தேடி அவர்களை பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு குழு புறப்படுகிறது. அவர்களின் கதி என்ன என்பதை ஒரு ஓவியத்திலிருந்து ஆரம்பித்து கடைசியில் தனது ஏலியன் படத்தின் ஆரம்பமாய் முடித்திருக்கிறார் இயக்குனர். ஆக்கம், மரணம் இவற்றை ஆராயும் படம். முழுக்கதை சொன்னால் சரியாய் இருக்காது.மிகச்சிறந்த் நடிப்புகள், மனித ரோபோக்களின் (ஹூமனாய்ட்) அனாயசமான யதார்த்தம் ததும்பும் நடிப்புகள், பிரமாண்டமான கதை களம், நிஜமா இல்லை அனிமேஷனில் உருவாக்கப்பட்டதா என் வியக்கும் காட்சி அமைப்புகளும், லொகேஷன்களும், என முழுக்க முழுக்க உங்களை கட்டாயம் இந்த படம் அசத்தும். இதுவரை நான் பார்த்த 3டி படங்களில் இந்த அளவுக்கு நம்மை உள்வாங்கி படத்துடன் ஒன்றவைக்கும் 3டி படம் வந்ததில்லை. முன் லேயரில் தெரியும் காட்சிகள் பிரகாசமானதாகவும் தூரம் செல்ல செல்ல காட்சிகளின் நிறம் (கிரேடிங்) மாற்றி இருப்பதும் டெக்னிக்கலாய் மைல்கல்.

ஏலியன் படங்களில் ஏலியன்களை உருவாக்கிய எங்கள் ஜாதி, ஓவியர் ஜிகெர் (H.R. Giger) இதிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளார். இவரின் கற்ப்பனைதிறனில் உருவாக்கிய ஓவியம்தான் இந்த கதைக்கு தூண்.ஓவியர் என்கிற முறையில் பெருமைகொள்கிறேன்.

நூறு சதவீத படம் விண்வெளியிலும் மற்ற கிரகத்திலும் நடப்பதால் எது உண்மையான லொகேஷன், எது ஆர்ட் டைரக்க்ஷன் அல்லது மேட் பெயிண்டிங் என்பதை கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்.

முக்கியமாக குழுவின் தலைவியாக வரும் கதாநாயகியின் நடிப்பு என்ன சொல்வது. வார்த்தைகள் இல்லை. ஒரு காட்சியில் தன் வயிற்றுக்குள் இருக்கும் ஏலியனை தன்னைத்தானே அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் காட்சியில் யாருமே அவள் அரை குறை ஆடையுடன் இருப்பதை மறந்து ஒன்றிப்போகும் காட்சி ஒன்று போதும் அவளின் நடிப்புக்கு.

ஹூமனாய்ட் ஆக இரண்டு கதா பாத்திரங்கள் முழுக்க ரோபோவாகவும் இல்லாமல், மனிதர்களாகவும் இல்லாமல் மனித ரோபாக்களாய் நடித்திருப்பது.நடிப்பின் உச்சம். காரணம்... அதிக முகபாவங்கள் இல்லாமல் கதைக்கு தேவையான முக்கியமான பாத்திரங்களை சரியாக செய்திருப்பதே அதற்க்கு காரணம்.

துவக்க காட்சியின் பிரமாண்டம், விண்கலன்களின் வடிவமைப்பு, காஸ்ட்யூம், நிகழும் இடம் என அனைத்துமே டைரக்டரின் அசாத்திய திறமைக்கு சான்று.படத்தில் பிண்ணனி இசையும், சினிமாட்டோகிராஃபியும் இரண்டு கண்கள்.

படத்தில் காமெடி இல்லை, குழப்பமான பல டையலாக்குகள் இல்லை, மயிர் கூச்செரியும் ஆக்க்ஷன் இல்லை ஆனாலும் உங்களை சீட்டின் நுனியில் உட்காரவைக்கிற படம்.
"A" முத்திரையுடன் வந்திருப்பதால் குழந்தைகளுக்கு இடமில்லை. மல்டிஃபிளக்ஸ் தியேட்டரில் பாருங்கள் சீட்டின் அடியில் சவுண்ட் மிக்சிங்க் உங்களை ஆச்சர்ய படவைக்கும்.

படத்தில் சில குறைகள் முதலில் வரும் அருவிக்காட்சி எதற்கென்றே புரியவில்லை, இறுதியில் வரும் ஏலியனால் படத்தில் முடிவும் சரியாக சொல்லப்படவில்லை,பல ஆயிரம் ஆண்டுகளுக்குபின்னும் உயிர் இருப்பதாஉ காட்டப்படும் தலைகள்....

ஆனாலும், புரோமோத்தியஸ் அதாவது வேற்றுகிரகத்துக்கு கூட்டிசெல்லும் விண்கலம் என்கிற அர்த்தம் கொண்ட இந்த படம் கட்டாயம் பார்க்க வேண்டிய அதும் 3டியில் பார்க்கவேண்டிய படம்.

5 க்கு 4 ஸ்டார்கள் கொடுக்கலாம்.

இந்த பிரமோத்தியஸ் பயணம் மறக்கமுடியாத சினிமாப்பயணம் என்பது நிஜம்.