Friday, April 20, 2012

ஓக்கே ஓக்கே - திரைப்பட விமர்சனம்.


ஓக்கே ஓக்கே - திரைப்பட விமர்சனம்.


இந்த படத்தை பார்த்து நான் அழுதுவிட்டேன். ஆமாம் இது காமெடி படம்தானே என கேட்கிறீர்களா? ஓவராய் குலுங்கி குலுங்கி சிரித்ததால் கண்களில் நீர் வந்துவிட்டது என்பதைத்தான் இப்படி சொன்னேன்.


பயங்கரமான ஹீரோ எண்ட்ரி, பரபரப்பான காட்சிகள், நாலு ஃபைட், குத்து சாங், ஓவர் செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட் மற்றும் நெருக்கமான காதல் காட்சிகள் என மசாலா படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இல்லாத ஒரு ஜாலியான மசாலா படம். 


என்னதான் கதை :-


இந்த கதையை சொல்ல எனக்கு பக்கம் பக்கமாக எழுத தேவையில்லை. இரண்டு வரிகள் போதும்.


தியேட்டரில் கிழிய கிழிய வெட்டி வேலை செய்யும் டிக்கெட் கிழிக்கும் கதாநாயகன் உதயநிதி கண்டதும் காதல் கொள்கிறார் போலீஸ் கமிஷ்னரின் மகளான ஹன்ஷிகாவை.
இதற்க்கு உதயநிதியின் உயிர் தோழரான சந்தானம் ஹெல்ப் செய்கிறார்.முதலில் வெறுக்கும் ஹன்ஷிகா பின்னர் ஒத்துக்கொள்கிறார்.  கடைசியில் ஒரு ஊடல் கிளைமேக்ஸில் சுபம்.


முதலில் படத்தின் கதாநாயகனை பற்றி சொல்வோம். ரொம்ப நாள் ஆச்சு சார் இந்தமாதிரி ஒரு சிரிப்பு படம் பார்த்து. சந்தானம் அட்வைஸ் கொடுக்குறார், சிரிக்க வைக்கிறார். ஒரு டையலாக்கை கேட்டு சிரிக்குமுன் அடுத்த சிரிப்பு டையலாக் வருவதால் எல்லோரும் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள். நெற்றியில் கொஞ்சம் சந்தனத்துடன் சந்தானம் பழம் மாதிரி தெரிந்தாலும் அவரின் டைமிங்க் சென்ஸ்சில் சந்தானம் அனுபவம் வாய்ந்த கிழம்.


ஜானவாச காரிலும், ஃபிளைட்டிலும் பின்னர் சரக்கு அடிக்கும் நேரங்களில் காமெடி தூள். தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் எல்லோரும் பஸ்சில் போரமாதிரி ஆடி ஆடி குலுங்கி குலுங்கி சிரிப்பதால் சில நேரங்களில் நாம் தியேட்டரில்தான் இருக்கிறோமா என்கிற ஃபீல் வருகிறது.


அடுத்ததாக கதாநாயகி, நீங்க சின்னத்தம்பி குஷ்பு மாதிரி இருக்கீங்க என்று சொன்னவுடன் ஹன்ஷிகாவின் எக்ஸ்பிரசன்ஸ் சூப்பர். படம் முழுக்க முகத்தாலேயே நடிக்கிறார்.
ஆனால் பெரிதாய் ஒன்றும் சொல்லும்படி காட்சிகள் இல்லை. தனக்கு பார்த்த மாப்பிள்ளையுடன் ரெஸ்டாரண்ட்டில் நடக்கும் கூத்து ஏ ஒன்!
அடுத்ததாக காமெடியன் பற்றி பார்ப்போம்....ஆமாம் சந்தானம் ஹீரோ என்றால் உதநிதிதான் இந்த படத்தின் காமெடியன். சும்மா கையை காலை பாடல்களில் ஆட்டுகிறார், ஹன்ஷிகாவைப்பார்த்து வழிகிறார், மோந்துபார்த்து சரக்கடித்த ஃபீல் கொடுக்கிறார். அவ்வளவுதான். ஆனாலும் தன் சொந்த படத்தில் தன்னை நம்பாமல் சந்தானத்தையும், டைரக்டர் ராஜேஷையும் நம்பி படமெடுத்த விஷயம் தெரிஞ்ச புரடயூசர் இவர். அடக்கி வாசித்திருந்தாலும் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறத்து." நீ நல்லா வருவ!". முதல் படத்தில் நடித்த சூர்யாவை விட பெட்டரா பண்ணியிருக்கீங்க சார்.


படிப்பில் பாசாகவில்லையென்றாலூம் நடிப்பில் பாசாகியிருக்கும் அம்மாவாக சரண்யா, நல்லவரா கெட்டவரா தெரியாத டெபுடி கமிஷ்னராக வரும் ஷிண்டே, ஃபிளைட்டில் வரும் சினேகா, தேவையில்லாமல் கிளைமாக்ஸில் வரும் ஆர்யா (போர்யா!), ஆண்டிரியா....ஊறுகாக்கள் அங்கங்கே....படம் முழுக்க!


இயக்குனர் ராஜேஷ்....முந்தைய இரண்டு படங்களின் கதையை சார்ந்து மூன்றாவது படத்தை எடுத்த இயக்குனரின் தைரியத்தை பாராட்டலாம். இரண்டரை மணிநேரமும் கவலைகளை மறந்து சிரித்துவிட்டு வரலாம். ஆனால் எல்லா படத்திலும் பெண்களை இப்படி கேவலமாக சித்தரிப்பதை நிறுத்த வேண்டும். நடிக்க தெரியாத கதாநாயகனை அந்த குறை தெரியாதவாறு காட்டின உங்க திறமையே திறமை சார். முடிஞ்சா ஒயின் ஷாப் சீன் இல்லாமே ஒரு படம் எடுங்க சார். 


பாடல்கள், ஒளிப்பதிவு, பின்னணி இசை எல்லாமே ஓக்கே! கிளைமாக்ஸில் ஆர்யா வருவதால் உங்க அடுத்தப்படத்தின் நாயகன் அவரேவா?


மொத்தத்தில் லாஜிக் இல்லாத காமெடி மேஜிக் இந்த OK OK.


ஒன்லைன் விமர்சனம்...


ஒரு கல் ஒரு கண்ணாடி
ஒரு ஃபூல் ஒரு பெண் பின்னாடி!


Thursday, April 19, 2012

தமிழ் திரைப்படத்துறையும் கறுப்பு பண மறைப்புத்துறையும்.

தமிழ்  திரைப்படத்துறையும்  கறுப்பு பண மறைப்புத்துறையும்.


எல்லாவயதினரையும் மகிழ்விக்கும் அல்லது சலிப்படைய செய்யும் இந்த திரைப்படத்துறை நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே இருக்கிறது. எத்தனையோ கோடிகளை இழந்தாலும் இன்னும் மஞ்சப்பைகளுடன் விவசாய நிலங்களை விற்றும் விளைச்சல் பணங்களை கை அக்குளில் சுமந்துக்கொண்டு கோடம்பாக்கம் வரும் கிராமத்து அப்புராணி பண்ணைகளும், அய்யாக்களும் வந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.


ஊரிலிருந்து வரும் அப்பாவிகளை அமுக்க, இங்கே கதைகளுடனும் கனவுகளுடனும் காத்திருக்கும் அப்பாடக்கர்கள் கோடம்பாக்கத்திலும்,வளசர வாக்கத்திலும் மற்றும் சாலிகிராமத்திலும் சல்லடை போட்டு தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.


பணக்கார மைனர்கள் மாட்டிவிட்டால்...லாட்ஜுகளில் ரூம் போட்டு புட்டி, குட்டிகளுடன் இங்கே கதைகள் அலசி மேயப்படும். ஊர்நாட்டான்களை கவர கன்னிகளுடன் சில மாமா மானேஜர்கள் வகைவகையாய் டெக்னிக்குகளை கையில் வைத்துக்கொண்டு செல்போன் கையுமாய் அலைபாய்கிறார்கள்.


எல்லாம் சரி....வருடத்துக்கு 150 படங்கள் ரிலீசானால் அதில் 6 அல்லது 7 படங்கள்தான் வெற்றிபெறும். இப்படியிருக்க எந்த தைரியத்தில் இவர்கள் இந்த தொழிலுக்கு வருகிறார்கள்?


படம் வெளியான மறுநாளே டெர்ரா ஹிட், மகத்தான வெற்றி, சூப்பர் டூப்பர் ஹிட், தாய்மார்களின் பேராதரவோடு மாபெரும் வெற்றி, மிரட்டல் வெற்றி இப்படி பல வார்த்தை ஜாலங்கள் பத்திகைகளில் பார்த்திருக்கிறோம். டிவிக்களில் தினம் ஒரு பேட்டிகளுடன் கவர்ச்சிக் கூட்டங்கள் தாராளம்.


ஆனால் திரை மறைவில் என்னதான் நடக்கிறது?


உண்மையிலேயே இவ்வளவு கோடிகள் நஷ்டமாகிறதா? அல்லது நஷ்டமானதாக கணக்கு காட்டுகிறார்களா? என்னதான் இதில் உள்குத்து என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.


ஒரு பிரபலமான கதாநாயக நடிகர் கதாநாயகி மற்றும் சூப்பர் ஹிட்டுகளை தரும் ஒருவர் இயக்க தமிழ் படம் தயாராகிறது என்று வைத்துக்கொள்வோம்.


முதலில் செலவுகள்....


கதாநாயகன் சம்பளம்    1,00,00,000
கதாநாயகி சம்பளம்          :  40,00,000
டைரக்டர் சம்பளம்           :  50,00,000
வில்லன் சம்பளம்           :  40,00.000
இசையமைப்பாளர் சம்பளம்  :  30,00,000
மொத்த புரடக்க்ஷன் செலவு  : 2,00,00,000
மற்ற செலவுகள்            :  50,00,000
எதிர்பாரா செலவுகள்        :  20,00,000
புரமோஷன்/ விளம்பரம்     :  50,00,000


மொத்த செலவுகள்   : 5,80,00,000


மொத்த செலவுகள் சுமார் 6 கோடிகள். இந்த ஆறுகோடிகளுடன் படம் ஆறுமாத தயாரிப்பில் ஆகும் செலவுகள் வட்டியுடன் 7 கோடிகள் என் வைத்துக்கொள்வோம்.


படத்தின் வரவுகளைப் பார்ப்போம்....


இசை வெளியீட்டு வரவு: 25,00,000


டிவி/ சாட்டிலைட் வரவு : 50,00,000


அடுத்ததாக ஒரு முக்கியமான, பொதுவாக கணக்கில் காட்டப்படாத வரவு....


மேற்கூறிய படம் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க சுமார் 200 தியேட்டர்களில் வெளியாகிறது என வைத்துக்கொள்வோம்.


பொதுவாக ஒரு படம் சுமார் 15 நாட்கள் கிட்டத்தட்ட 70% முதல் 80% மக்கள் கூட்டங்களால் ஓடுகிறது என வைத்துக்கொள்வோம்.


200 தியேட்டர்கள், ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் வீதம், 40 ரூபாய் டிக்கெட் செலவில், சுமார் ஒரு காட்சிக்கு 500 பேர் பார்க்கிறார்கள் என வைத்துக்கொண்டால்....
15 நாட்களில் 200 தியேட்டர்களில் வரும் வருமானம்... கணக்கு போட்டால் தலை சுற்றுகிறது நண்பர்களே....


தியேட்டர்களில் வருமானம் : 24,00,00,000/- கோடிகள். (அம்மாடி..இப்பவே கண்ணை கட்டுதே!)


ஆமாம்... 24 நான்கு கோடிகள். படம் சுமாராக (வெறும் 15 நாட்கள்) ஓடினாலே இவ்வளவு வருமானம். இவ்வளவுதானா இதுமட்டுமல்லாது இந்த படம் நன்றாக ஓடினால் டப்பிங் ரைட்சும் உண்டு (கிட்டத்தட்ட 50 லட்சம் வரை).


7 கோடிகள் செலவு போனால் மிஞ்சுவது 17 கோடிகள் லாபம். இப்போது சொல்லுங்கள் படம் 50 நாட்கள் ஓடினாலும் நஷ்டம் என்று கணக்கு காட்டுகிறார்களே....அது உண்மைதானா?


அரசுக்கு இவர்கள் சரியான கணக்கை காட்டுகிறர்களா? அல்லது சரியான டாக்ஸ் கட்டுகிறார்களா? கடவுளுக்கே வெளிச்சம்.


இதற்கு என்னதான் தீர்வு? அரசாங்கம் இந்த துறையை கண்காணிக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் நிலை வேறு...காரணம் தமிழ்நாட்டின் பல முதலமைச்சர்கள் திரைப்படத்துறையை சார்ந்து வந்தவர்கள். பல புரடியூசர்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள்.


உங்களின் கருப்பு பணங்களை வெள்ளையாக ஒரே வழி திரைப்படம் எடுப்பதுதான் என்பதை பலர் அறிவார்கள்.


இந்த திரைப்படத்துறையில் மறைமுகமாக நடக்கும் கோடிக்கணக்கான கருப்பு பண பரிவர்த்தனைகள் நாட்டில் பல தீய செயல்களுக்கு காரணங்களாக அமைகின்றன(இந்தி திரைப்படத்துறை தாவூத் நம்பி இருப்பது எல்லோரும் அறிந்ததே).


மாநிலத்தின் முதலமைச்சர்களுக்கு பாராட்டு விழா, வெளிநாட்டில் கலை விழா என்று அரசாங்க்கதின் செல்லப்பிள்ளைகளாகிவிட்ட இந்த திறைப்படத்துறையினர் இத்த்னை கோடிகளை கொள்ளையடிப்பது மட்டுமல்லாது அரசின் வரிச்சலுகைகளையும் பெற்று கொழுத்துதான் இருக்கின்றனர். அரசியலின் பினாமிகள் என்று கூட இந்த துறையிலிருப்பவர்களை சொன்னால் அதில் தவறில்லை!


ஆனால் உண்மையிலேயே படத்தயாரிப்பாளர் சம்பாதிகிறாரா? அல்லது டிஸ்ட்ரிபியூட்டர் சம்பாதிக்கிறாரா? இல்லை தியேட்டர் ஓனர் சம்பாதிக்கிறாரா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.


அப்படியென்றால் ஏன் கிட்டத்தட்ட 100க்கு மேற்ப்பட்ட தியேட்டர்கள் மூடப்படுகிறது என்று கேட்பது புரிகிறது. மூடப்படும் தியேட்டர்கள் பல ஒன்று மிகப் பழைய தியேட்டர்களாக இருக்கும் அல்லது புதிய டெக்னாலஜிக்கு மாறாத ஊர் பக்கம் இருக்கும் கொட்டகைகளாய் இருக்கும். இன்னொன்றையும் கவனியுங்கள் மள்டிஃபிளக்ஸ் என்கிற பன்னாட்டு கம்பெனிகள் நாளொரு கிளைகளை தொடங்கிகொண்டுதான் இருக்கிறார்கள்.


பெரிய நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் கொடுக்கப்படும் சம்பளங்களில் பாதிதான் நமக்கு செய்திகளாக வருகின்றன...திரை மறைவில் நடைபெறும் கருப்பு பண வர்த்தனைகள் யாருக்கும் தெரியாமலேயே போய்விடுவதுண்டு( பெரிய கதாநாயகன் கோடிகள் சம்பளத்துடன் தனக்கு செல்வாக்கு உள்ள ஏரியாக்களின் ரைட்ஸ்சையும் அமுக்கி விடுகிறான்). திரைகளில் கதாநாயகங்களாய் தீமைகளையும்,தீயவர்களையும் அழிப்பவர்களாய் இருப்பவர்கள் திரைக்குப்பின் பக்க அயோக்கியர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர்களுக்கும், திரைத்துறை வாரிசுகளுக்கும் சிவப்பு கம்பளம் விரிக்கும் இந்த திரை உலகம் அத்தி பூத்தார்ப்போல் மற்றவர்களுக்கும் அவ்வப்போது வாழ்வளிப்பதில் கொஞ்சம் மகிழ்ச்சிதான். அதேபோல் பெண்களை வைத்து கார்பொரேட் விபச்சாரமும் நன்றாகவே நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.


ஆனாலும் என்னதான் கொள்ளைகள் நடந்தேறினாலும் பல ஆயிரக்கணக்கான வேலையாட்களின் வாழ்வாதாரமாக இந்த துறை இருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சிதான்.


கிட்டத்தட்ட வருடத்திற்க்கு சுமார் 600 முதல் 800 கோடிகள் புரளும் இந்த மாஸ் மீடியாவில் அரசின் கண்காணிப்பு இல்லாததால் இங்கே அராஜகங்கள் ஏராளம். அடுத்த முறை படம் நஷ்டம் என்று செய்தி வந்தால் நம்பாதீர்கள்...அது அவர்களின் ஏமாற்று வேலை என்பதில் எள்ளளவும் உண்மையில்லை.


அதையும் தாண்டி சொந்த காசில் படங்களை தியேட்டரில் ஓடவைக்கும் அவலமும் இங்கே நடக்கத்தான் செய்கிறது.


திரைப்பட நாயகர்களை கடவுளாக நினைக்காமல் சொந்த வீட்டுக்காக கொஞ்சம் உழைக்க வேண்டும் இன்றைய இளைஞர்கள். 


கடைசியாக...இந்தியாவில் பணக்காரர்களுக்கு வெண்ணையும், ஏழைகளுக்கு சுண்ணாம்பும் கிடைப்பது ஒன்றும் ஆச்சிரியமில்லை. அப்படித்தான் திரைத்துறை பலகாலங்களாக வெண்ணையைத்தான் திருடி தின்றுக்கொண்டிருக்கிறது!


குறிப்பு : இந்த கட்டுரையை பற்றிய உங்களின் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன். சினிமாத்துறையை சார்ந்தவர்கள் தயவு கூர்ந்து உங்களின் விமர்சனங்களை அனுப்புங்கள். அரோக்கியமான விவாதங்களை ஆதரிக்கிறேன்).


Thursday, April 12, 2012

இரு பக்க நாணயம்
இரு பக்க நாணயம்

பக்கத்து தெரு கோயிலில் திருவிழா.

கோயில் கருவறையில்....
உயிரற்ற கற்சிலைக்கு
பால் அபிஷேகம்
தேன் அபிஷேகம்
பழம் அபிஷேகம்
கூடவே பணமபிஷேகம்.

எல்லாம் முடிந்து
பட்டுபுடவை சாத்தி ஆராதனைகள் வேறு!

கோயில் வாசலில்...
உயிருள்ள ஏழைகள்
கிழிந்த ஆடைகளுடன்
கையில் அலுமினியத்தட்டுகள்!


Sunday, April 8, 2012

பூனை குட்டி

பூனை குட்டி


காலையில் கேட்ட மெல்லிய ஒலி

கேட்ட திசையை தேடியபோது...

பக்கத்து கிணற்றில் கேட்டது மரண ஓலம்.

நேற்றுவரை பின்வாசலில் துள்ளி  திரிந்த

பூனைக்குட்டி ஒன்றின் பரிதாப சறுக்கல்

பாதிநேரக் கதறலுக்குப்பின் செய்வதறியாத

வெள்ளைத்தாய் பரிதவிப்பாய்....

சகோதரனைக் காணாத மற்ற குட்டிகள்

பால்குடிக்க முட்டி மோதின தாயை!

கயிற்றுத்தொட்டியை கிணற்றில் இறக்கி

கால்மணிநேர போராட்டத்தில்

மூன்றுமுறை பாதிவரை  கைத்தூக்கி

இருட்டு கிணற்றில் தவறவிட்டேன்.

எனக்கு தெரிந்த பாஷையில்

குட்டிப் பூனையுடன் கதறித்தீர்த்தேன்.

கருணையில்லாத நான் பார்க்காத கடவுள்

இந்த முறையும் என்னை ஏமாற்றினான்.

கொஞ்ச நேரத்தில் அடங்கிப்போனது அந்த ஆத்மா.

எப்படி சொல்வேன் அம்மா பூனைக்கு

என்ன சொல்லி புரியவைப்பேன்

மகன் இறந்துபோன செய்தியை?

நாளை சகோதரனை காணாமல் தேடும்

குட்டிகளுக்கு யார் சொல்லுவார் தகவலை?

பிறப்பதும் இறப்பதும் உலக இயற்க்கை - ஆனால்...

கண்முன் நடக்கும் இழப்பு காலக் கொடுமை!

அறிவுகெட்ட கடவுளே...

என்ன பாவம் செய்தது இந்த

பாவப்பட்ட பூனைக்குட்டி?


3 - விமர்சனம் - 3 Movie Review


3 - விமர்சனம்


அப்பன்களின் பெயரை வைத்துக்கொண்டு வாரிசுகள் பலர் களத்தில் குதித்துவிட்ட காலம் இது. மாமனார் தயாரிக்க கணவர் நடிக்க சூப்பஸ்டாரின் மகள் இயக்கிய குடும்ப படம். சகலாகலா வல்லவரின் மகளும் ரொம்ப நல்ல ஒத்துழைப்பு கொடுக்க, வெளிவந்து ஓடி கொண்டிருக்கும்(!) படம்தான் இந்த 3.


வாயில் நுழையாத வித்தியாசமான நோயில் விழுந்த தனுஷின் மூன்றாவது படம் என்று நினைக்கிறேன். மெண்டலாக நடிப்பதில் தனுஷுக்கு நிகர் தனுஷ்தான்.


இந்த இந்திய "டைருடக்கர்கள்" வித்தியாசமான வியாதியை காட்டுகிறார்களே தவிர ஒரு படத்திலாவது அந்த நோய்க்கான தீர்வை சொல்லியிருக்கிறார்களா? இதுவரை சொல்லியதாய் எனக்கு நினைவில் இல்லை. இவர்கள் அடுத்த லெவலுக்கு இப்போது போகப்போவதில்லை!


கதை.....


தனுஷின் மரணத்திலிருந்து தொடங்குகிறது கதை.மூன்று பருவங்களில் நடக்கும் கதை. தனுஷ் பள்ளி மாணவனாகவும், கல்லூரி மாணவனாகவும் மற்றும் கணவனாகவும் கலக்கி நடித்திருக்கும் படம். சுருதியை காதலிக்கும் தனுஷ் அவளை ஃபாலோ செய்து காதலித்து, சுருதியின் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்து, திடீரென்று வரும் பைபோலா டிஸ்ஆர்டர் (Bipolar Disorder) நோயால் இறப்பதுதான் கதை.


கதையில் வரும் முதல் பாதியில் நல்ல கலகல...அப்புராணியாய் சுருதியை நோட்டம் விடும்போதும், தொடர்ந்து பாலோ செய்து அவளை காதலில் விழ வைப்பதிலும் நல்ல ஸ்கோர் செய்கிறார். அதென்னமோ தெரியலே ஸ்கூல் பையன்மாதிரியே இருப்பது தனுஷுக்கு ரொம்ப பிளஸ். இரண்டாவது பாதியில் டாமியை கொல்லுவதிலும், நண்பனை அடிப்பதிலும் அசத்தும் தனுஷ் "மயக்கமென்ன" படத்தின் பாதிப்பிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பது தெளிவாய் தெரிகிறது. 


சிவகார்த்திகேயனின் காமெடி சென்ஸ் ஃபிரஷ்ஷாக இருக்கிறது. சந்தானத்துக்கு நல்ல போட்டி. காதலிப்பவர்களிடையே மாட்டிக்கொண்டு முழிக்கிறார். இரண்டாவது பாதியில் மாயமாகிறார்.


உண்மையில் இந்த படத்தின் கதாநாயகன் சுருதிதான். உலகநாயகனின் வாரிசு என்றால் சும்மாவா? சில இடங்களில் பின்னுகிறார்,பல இடங்களில் மின்னுகிறார். தனுஷுடன் நெருக்கத்தில் நெருக்குகிறார். சொக்கும் சொந்த குரல் அழகோ அழகு!


படத்தில் செண்டிமெண்ட் ராசிக்காக தனுஷின் அப்பாவாக இளையதிலகம் பிரபு. நடிக்க அவ்வளவு வாய்ப்பு இல்லை.பானுப்பிரியா,ரோகினி பழைய பட்டாளங்கள் வந்து போகின்றனர்.
இயக்குனாரக அவதாரமெடுத்திருக்கும் ஐஸ்வர்யா தன் தங்கை டைரக்டர் ஆவதர்க்குள் தான் டைரக்டர் ஆகவேண்டும் என்று அவசரமாய் படமெடுத்து இருக்கிறார்.முதல் பாதியில் கலக்கிய இவர் இரண்டாவது மீதியில் கலங்கியிருக்கிறார். ஆனாலும் ரொம்ப தைரியம்....இருக்காதா பின்னே...ஒரு மனைவியாக கணவரின் முதலிரவு காட்சியை இன்னொரு பெண்ணுடன் படமெடுப்பது அவ்வளவு ஈசியா என்ன?( எல்லாம் கலை சேவைதான்!).


டேன்ஸ் பாரில் கல்யாணம் முதலிரவில் டீஷர்ட் ஜீன்ஸ் என இந்த காலத்து மாணவர்களுக்கு ஏகப்பட்ட ஐடியாக்கள். ஆனால் இரண்டாவது பாதியில் சில காட்சிகளில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை நிரூபித்து இருக்கிறார் இயக்குனர். எனக்கென்னமோ நிஜத்தில் தனுஷுக்கு சுருதிமேல் ஒரு "இது", அதனால் ஐஸ்வர்யா கோபம் என்பதெல்லாம் படத்தின் வெற்றிக்காக ஐஸ்வர்யாவால் உருவாக்கபட்ட பப்ளிசிட்டி ஸ்டண்ட்டோ என் நினைக்கத்தோன்றுகிறது.


பாடல்களில் "நீ பார்த்த விழிகள்" இதம். கொலவெறி பாடலை உண்மையிலேயே கொலைவெறி படுத்தியிருக்கிறார்கள் பல ஆண்டு தமிழ் திரைப்படவரலாற்றில் எடுக்கப்பட்ட சுமாரான நடன அமைப்புக்கொண்ட பாடல் இதுவாகத்தான் இருக்கும். ஒய் திஸ் கொலவெறி மாஸ்ட்டர்?


பயங்கரமான நோய் வீட்டுக்கும், சுருதிக்கும் மற்றும் யாருக்கும் தெரியாமல் போனதும், வாய்பேசாத சுருதியின் தங்கை திடீரென்று பேசுவதும் நம்ம தமிழ் படங்களில் தான் நடக்கும். தற்கொலையை ஊக்குவித்த இயக்குனரை பாராட்ட மனம் வரவில்லை. மாணவக்காதலை சொன்ன இயக்குனரும் ஒரு மாணவ இயக்குனர் என்பதையே இது காட்டுகிறது. அடுத்த முறை சமூகத்துக்கு உருப்படியான படத்தை கொடுங்க. நோயை சொன்னவர்கள் தீர்வை தவறாக சொல்லிவிட்டனர் என்பது நிஜம்.


மொத்தத்தில்... இந்த 3 மயக்கமென்ன பார்ட் 2.


பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!