Monday, March 26, 2012

மாண்புமிகு அம்மா ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம்.


 மாண்புமிகு அம்மா ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம்.
(இந்த கடிதம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புடிக்காது, காரணம் ஒரே ஒரு முறை "மாண்புமிகு அம்மா" என குறிப்பிட்டதால்)!

இந்த கடிதத்தை எழுதுவதின் நோக்கம் அம்மாவின் விஷன் 2023 என்கிற தொலைநோக்கு திட்டமே.

அப்படி என்ன இருக்கின்றது இந்த திட்டத்தில்.....

அனைவருக்கும் வீடுகள், தடையில்லா மின்சாரம், உயரிய கல்வி இப்படி பல தொலைநோக்கு பார்வைகள் கொண்ட சுமார் 15 லட்சம் கோடிகளுக்கு திட்டத்தை தீட்டி இருக்கிறார்.

அதெல்லாம் சரிதான்.....இந்த 11 வருட திட்டம் சரிதானா? ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஆட்சிமாறும்போது இந்த 11 வருட திட்டம் எப்படி சாத்தியம் என்பது எனக்கு புரியவில்லை, இதற்க்கு காரணம் இந்த அம்மாவேதான். கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்ப்பட்ட பல நல்ல திட்டங்கள் இவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே காலாவதியாகிவிட்ட நிலையில் இந்த அம்மாவின் 11 வருட திட்டம் மட்டும் விதிவிலக்கா என்ன?

இவையெல்லாம் உண்மையிலேயே தொலைநோக்கு திட்டங்கள்தானா இல்லை மக்களை திசைதிருப்ப அளிக்கப்படும் கவர்ச்சி திட்டங்களா என்பது கீழே படித்தால் உங்களுக்கு புரியும் என் நினைக்கிறேன் அம்மாவே.

சமச்சீர் கல்வியிலும், அண்ணா நூலகத்திலும் மற்றும் புதிய சட்டசபை கட்டிட நிலையிலும் அம்மா உங்களின் சறுக்கல்கள் தெரிந்ததே. அப்படியிருக்க இந்த 11 வருட திட்டத்தை அடுத்து வரும் ஆட்சி கவனிக்குமா? (ஒருவேளை அடுத்த 15 ஆண்டுகளை ஆளப்போகிறேன் என்கிற உங்கள் மன தைரியமா?).

சரி இந்த உங்களின் திட்டம் சாத்தியமா? அதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை இப்போது பார்ப்போம்.

முதலில் ஏன் இந்த 11 வருட தொலைநோக்கு பார்வை? ஏன் ஐந்து ஆண்டுகள் தொலை நோக்கு திட்டத்தை முதலில் வெளியிட்டிருக்கலாமே!. அதன் செயல்லாக்கத்தை பொறுத்து கால நீட்டிப்பு செய்யலாமே?

தொலை நோக்கு திட்டங்களை தீட்டும்முன் இப்போது இருக்கும் திட்டங்கள் நன்றாக நடக்கிறதா என்பதை முதலில் நீங்கள் கவனிக்க வேண்டும்.

நம் மக்களுக்கு முதலில் என்ன தேவை இருக்க இடம்,உடுக்க உடை,உண்ண உணவு அதன் பிறகுதான் எல்லாமே. உங்களின் தொலை நோக்கு திட்டம் அத்தியாவிசய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் கீழே நான் குறிப்பிடப்போகும் குறைகளை களையாவிடில் எந்த தொலைநோக்கு திட்டங்களும் தொல்லை தரும் திட்டங்களாகத்தான் போகும்.

உண்ண உணவு :

அனைவருக்கும் உணவு குறைந்த விலையில் கிடைக்க வேண்டும். ஆனால்...
சுமார் 30,00,000 மேற்ப்பட்ட போலி ரேஷன் கார்டுகளை முதலில் கண்டறிந்து அவைகளை நீக்க வேண்டும்.
மாதம் சுமார் 30 முதல் 40 டண் அரிசிகள் எல்லையோரங்களில் கடத்தப்படுகிறதே அதை தடுக்க வேண்டும். விளைவிக்கப்பட்ட உணவு பண்டங்களை சரியாக பராமரித்து பாதுகாக என்ன செய்திருக்கிறீர்கள்.
கஷ்டப்பட்டு பயிர்செய்யும் விவசாயிக்கு உழைப்புக்கொண்டான கூலி கிடைக்க வேண்டும். இடைத்தரகர்களாய் இருக்கும் பண முதலை புரோக்கர்களை ஒழிக்க வேண்டும். நேரடியாக தனது விளைச்சல்களை விற்க்கும் நிலை விவசாயிக்கு வரவேண்டும்.
விவசாய விளைநிலங்கள் கார்பொரேட் கம்பெனிகளின் விலை நிலங்களாவதும், ரியல் எஸ்டேட் கட்டடங்களாவதும் குறைய வேண்டும்.
தைரியமிருந்தால் மேல் கூறிய செயல்களை நீங்கள் உங்கள் தொலைனோக்குபார்வையில் காணுங்கள்.

உடுத்த உடை :

பன்னாட்டு அதிகார படையெடுப்புகளில் இங்கே இன்னாட்டு சிறுதொழில்கள் நசுக்கப்பட்டு நலிவடைந்து இருகின்றன. ஆடை நெய்பவன் அவன் மானம் என்று காக்கப்ப்டுகிறதோ அன்றுதான் உண்மையான தொலை நோக்கு திட்டம் நிலைபெறும்.
பெரிய கார்பொரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திரமும், சலுகைகளும் இன்னாட்டு சிறுதொழில் நிறுவனக்களுக்கும் கிடைக்கவேண்டும்.
ஏற்றுமதி செயல்பாடுகளில் உள்ள நடைமுறை திட்டங்களை சுலபமானதாக்கி உள்ளூர் பொருள்களுக்கு வெளிச்சந்தையையில் வாய்ப்புகிடைக்க செய்யவேண்டும்.
தமிழ்நாட்டு சிறப்பு பொருள்களுக்கு அரசே தனது செல்வாக்கின் மூலம் தொழில் விருத்திக்கான ஆக்கச்செயல்களை செய்து தரவேண்டும்.
இதை செய்யுமா உங்கள் அரசு.

ஒளிரும் மின்சாரம் :

மின்சாரமில்லையேல் உலகம் இருண்டுவிடும் என்பது உண்மை. மக்களின் அத்தியாவிசய தேவையான மின்சார தட்டுப்பாட்டால் தவிக்கும் தமிழகம் எப்படி 2023 ல் முதல் தர மாநிலமாக மாறும்?

நாட்டின் முதுகெலும்பான விவசாயிக்கு மின்சாரம் இல்லை. சிறுதொழில் செய்பவர்களுக்கு மின்சாரம் இல்லை, கல்வி கூடங்களில் மின்சாரம் இல்லை, அலுவலகங்களில் மின்சார இல்லை. என்னதான் செய்வது?

அணு உலைக்கு செலவழித்த பணத்தில் மாற்று முறை மின்சாரம், மின்சார வாரியம் மறு சீரமைப்பு மற்றும் மின் திருட்டு தடுப்பு ஆகியவற்றுக்கு செலவிட்டு ஊக்கப்படுத்தியிருந்தால் இந்த நேரம் தமிழகம் ஒளிர்ந்திருக்கும் மற்ற மாநிலங்களுக்கும் தமிழ் நாட்டிலிருந்து மின்சாரம் ஏற்றுமதி செய்திருக்கலாம்.

கட்டவிழ்ந்த கல்வி :

தொலைநோக்கு திட்டத்திற்க்கு முதலில் நாட்டில் இளைஞர்கள் அவசியம். இளைஞர்களை உருவாக்க கல்வித்துறையில் மாற்றம் அவசியம் தேவை. அரசியல் வாதிகளால் பாதி கல்வி நிலையங்கள் பணம் கொழிக்கும் வியாபார நிறுவனங்களாகிவிட்ட இந்த நிலையில் தரமான கல்வி சாமானிய ஏழை மாணவர்களுக்கு எப்படி கிடைக்கும். சலுகைகளால் கொழிக்கும் இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் அரசாங்க சட்டத்திட்டங்களை  சரியாக நடைமுறைப்படுத்துகிறதா?

கடந்த பல ஆண்டுகளாக பெற்றோர்களுக்கும், கல்வி கூடங்களுக்கும் இருக்கும் கல்வி கட்டண குளறுபடிகளை இதுவரை எந்த அரசும் கண்டுகொண்டதாக நினைவில் இல்லை. காரணம் அனைவர்க்கும் தெரிந்ததே... பண முதலைகளின் கைகளில் அரசு எந்திரங்கள்!

பந்தைய குதிரைகளாகிவிட்ட இன்றைய மாணவர்கள் செய்முறை இல்லாத நமது பாடத்திட்டங்களால், வாழ்க்கை அறிவை சொல்லாத பாடத்திட்டங்களால் பாடங்க்களை ஒப்புவிக்கும் ரோபோக்களாகி உள்ளனர்.

கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி படிப்புகளுக்காக ஏழை மாணவன் வங்கிகளில் கல்வி கடனுக்காக அலையும் இந்த அவலம் உங்களுக்கு புரியவில்லையா? உங்களின் தொலை நோக்கு திட்டங்கள் எந்த வகையில் இந்த பிரச்சனைகளுக்கு உதவ போகின்றது என்பது புரியவில்லை.

இருக்க இடம் :

உங்கள் தொலியை நோக்கு திட்டத்தில் வரும் காலங்களில் குடிசைகள் அற்ற நகரங்களை உருவாக்குவதாய் சொல்லி இருக்கின்றீர்கள். ஆனால் 80 சதவீத கிராமங்கள் குடிசைகளில் தான் வாழ்கிறது என்பதை மறந்துவிட்டீர்கள் அம்மா.

அரசாங்கத்தின் தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கும் முன்னே இரண்டு அடிகள் பூமிக்கு அடியில் புதைவது நம்ம ஊரில் மட்டும்தான் நடக்கிறது அம்மா. இதிலிருந்தே தெரியவில்லையா அரசாங்க அலுவலர்களின் செயல்பாடுகள்.

பல கோடி கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி பண முதைலைகளால் பல அடுக்கு மாடிகளாய் வானை முட்டுகின்றன. வாய்தா வாய்தா (உங்களைப்போல்தான்) வாங்கி இன்னும் பல விதி மீறல்களில் ஈடு பட்டு வருகின்றனர். கடுமையான சட்டங்கள் இல்லாததாலும் பணம் படைத்தவர்களுக்கு சட்டம் வளைந்து கொடுப்பதாலும் பாதிக்கப்படுவதும் அரசின் கஜானாவும் அதனால் ஏற்ப்படும் வரிச்சுமையும்தான். இதை கவனிப்பீர்களா அம்மா?

முக்கியமாக நீங்கள் கட்டும் வீடுகளிலாவது கழிப்பறை வசதியுடன் கட்டுங்கள்.

மும்பைக்கு அடுத்து மிகப்பெரிய குடிசைகளைக்கொண்ட சென்னையை உங்களின் ஒரே ஒரு திட்டத்தால் மாற்றிவிட முடியும் என்பது பகல் கனவு. கூவமும் குடிசைகளும் சென்னையின் இரு கண்கள் உங்களின் திட்டங்களுக்கு சரியான செயல்பாடுகள் இல்லாவிட்டால் அம்மா நீங்கள் ஆவீர்கள் சும்மா!

போக்கு வரத்து :

மெட்ரோவுக்காக சென்னை பாதைகள் குறுகிப்போன இந்த நேரத்தில் உங்களின் மோனோ ரயிலும் முளைக்க ஆரம்பித்திருக்கின்றது. நான்கு வருடங்களாக மெட்ரோ வருமா வராதா என்கிற அலைகழிப்பில் சாமாநியர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. தயவு செய்து உங்களின் மோனோவாவது மெட்ரோ திட்டம் முடிந்தபின் ஆரம்பிக்கலாமே?

முதலில் நீங்கள் போடும் தார் சாலைகளின் தரமாவது கவனிக்கப்படட்டுமே!

முடிந்தால் நகரங்களில் ஆட்டோக்களுக்காவது சரியான கட்டணத்தை நிர்ணயம் செய்யுங்கள். தைரியம் இருக்கின்றதா உங்களுக்கு?

அரசாங்க ஊழியர் :

அரசியல் கட்சிகளின் சங்கங்களாக செயல்படும் அரசாங்க அலுவலகங்கள் லஞ்சம் இல்லாத நிலையை அடைவது எப்போது? காவல் துறையிலும், சட்டத்துறையிலும் இருக்கும் ஓட்டைகளையும், நிர்வாக சீர்கேட்டினையும் கூடவே கவனிக்கப்படவேண்டிய  கட்டாயத்தில் உங்கள் அரசு இருக்கின்றதம்மா.

கருப்பு பணங்களை வெள்ளையாக்குங்கள். கருப்பு பணத்திற்க்கு துணை போகிறவர்களை தண்டியுங்கள்.

தயவு செய்து இனி இலவசங்கள் வேண்டாம். இயன்றவரை நாங்கள் உழைத்து உண்போம்.

கடைசியாக உங்களின் "தொலைநோக்கு" திட்டம் தொல்லை தரும் திட்டமாக இல்லாமல் "தொல்லை நீக்கும்" திட்டமாக இருக்கும் என நம்புகின்றேன். தனிமனிதனின் குறைகளை எந்த அரசு செவி சாய்த்து கேட்கின்றதோ அந்த அரசே என்னை பொறுத்தவரை நல் அரசு. இப்போது சொல்லுங்கள் உங்கள் அரசு எப்படி?

நன்றி,
இப்படிக்கு,
அப்பாவி தமிழன்.


 

No comments:

Post a Comment