Friday, March 9, 2012

"அய்யாசாமியின் அருள்வாக்கும் ஆறுநாள் பொருள் சேர்ப்பும்" - நிஜக்கட்டுரை

"அய்யாசாமியின் அருள்வாக்கும் ஆறுநாள் பொருள் சேர்ப்பும்" - நிஜக்கட்டுரை.

ரெண்டு மாசமாக டைம் சரியில்லை என்பதால் என் நண்பர் (அட...நம்புங்க சார்!) பக்கத்தில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்றார்.

உள்ளே போய்விட்டு வந்தவர் அடுத்தமுறை என்னையும் வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். ஒன்றுமே புரியாமல் கூடவே சென்றேன். நண்பர் என்னை அழைத்த காரணம் இப்போதுதான் புரிந்தது.

இருட்டாய் இருந்த அறை....ஆங்காங்கே மஞ்சளும், குங்குமும் கொட்டிக்கிடந்தன. எலுமிச்சை பழங்கள் சிதறி இருந்தன.
0 வாட் பல்புக்கு கீழே சுமார் 20 முதல் 30 சாமி போட்டோக்கள். சாமிகளுக்கு அடியில் சிவந்த கண்களுடன் நம்ம ஆ"சாமி".

கூட இருந்த அஸிஸ்டண்ட் எங்களை அழைத்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சாமி அருள்வாக்கு சொல்லுவார், சனிக்கிழமை காலை வந்து டோக்கன் வாங்கிடுங்க என்றார்.

டோக்கனுக்கு எவ்ளோ ஆகும்? என கேட்ட என்னை நக்கலாக பார்த்துவிட்டு அது "ஃப்ரீ" என்றார்.

இந்த காலத்தில் அப்படியும் ஒரு சாமியாரா? பணமே எதிர்ப்பார்க்காத ரொம்ப நல்லவர் என நினைத்துக்கொண்டேன்.

சரியாய் சனிக்கிழமை ஆஜராகி ஃப்ரீ டோக்கனும் வாங்கிவிட்டோம். நண்பர் சனிக்கிழமை இரவு தூங்காமல் சாமியாரிடம் தன் கஷ்டங்களை சொல்ல நோட்ஸ் எடுக்கத்தொடங்கினார்.பின்னர் மனப்பாடமும் செய்யத்தொடங்கினார்(ஏதும் மறக்காமல் இருக்கணும் இல்லே).

எப்பவுமே லீவு நாளில் குளிக்காத நண்பர் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே பயபக்தியுடன் குளித்து பட்டை நாமம் போட்டு ரெடியானார். லீவுநாள் மத்தியானத்துக்கு மசாலாவாகும் கோழி தப்பித்தது.
ஐந்து மணிக்கெல்லாம் ரெடியாகி பைக்கில் கோயிலுக்கு போனோம். ஒரு ஈ, காக்கா கூட காணவில்லை. கோயிலும் பூட்டியிருந்தது. நேரம் ஆக ஆக ஒவ்வொருத்தராய் வர ஆரம்பித்தார்கள். கோயில் திறந்தவுடன் முன்னாடி போய் உட்கார்ந்துக்கொண்டோம்.

ஆறு மணிக்கு சாமியார் வந்தார். பூஜையை ஆரம்பித்தார். கருவறையில் பூஜையை முடித்துவிட்டு தன் இருக்கையில் உட்கார்ந்தார். கூடவே வந்த அசிஸ்டெண்ட் வாங்க டோக்கன் நெம்பர் 1 என்று சத்தம் போட்டார்.

எங்களின் டோக்கன் நம்பர் 7 என்பதால் என்ன நடக்கிறது என்பதை பார்த்தோம். ஆனால் கையில் கேரி பேக்கை வைத்திருந்தார்கள். பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டபோது என்னப்பா இது...ஒண்ணும் வாங்கலையா? என்றார்.
நண்பர் ஓடிப்போய் அசிஸ்டெண்ட்டிடம் கேட்டபோது ஒரு லிஸ்ட்டை கொடுத்தார்.

ஓம் அம்மன் துணை!

எலுமிச்சை பழம் 2
வெத்தலை பாக்கு
பெரிய ஊதவத்தி 2
கற்பூரம் இரண்டு கட்டு
பூ மாலை
வாழை பழம் 2
தட்ஷனை 50 ரூ

என்று இருந்தது.

நானும் நண்பரும் வெளியே வந்தவுடன் கோயில் வாசலில் பூஜை சாமானாப்பா? என்றாள். தலையை ஆட்டிவிட்டு பொருட்களை வாங்கினோம். மொத்த பில் 88 ரூ. பூ மட்டும் இரண்டு முழம் 30 ரூவாவாம்!

ஏழாவது டோக்கன் வர நண்பர் கொஞ்சம் பக்தி கலந்த பயத்துடன் சாமியாரிடம் போய் உட்கார்ந்தான். பூ,பழங்களை வாங்கிய சாமி தட்ஷனை எங்கே தம்பீ என்றார்.

கையில் 100 ரூபாயை கொடுத்தவுடன்....சொல்லு என்ன பிரச்சனை?

நண்பர் கஷ்டங்களை சொல்ல...நாலு மாசமா வேலையில்லை சாமீ, குடும்பத்திலே பிரச்சனை சாமீ, பணக்கஷ்டம் சாமீ...

தம்பீ ஒவ்வொண்ணா சொல்லுங்க....

சரி தம்பி என்று சொல்லி எலுமிச்சைபழத்தில் கற்பூரம் ஏற்றி நண்பருக்கு இடமிருந்த வலம் மூன்று சுத்து சுத்திவிட்டு. குங்குமத்தை நெற்றியில் அப்பிவிட்டு சின்ன சாமிகிட்டே கேளுங்கே மீதியை சொல்லுவாறு என் சொல்லி அடுத்த ஆளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.

அஸிஸ்டண்ட்டிடம் போய் நின்றோம். அடுத்து ஒரு சின்ன சீட்டை கொடுத்தார்.

அதில்...

ஓம் அம்மன் துணை!

100 கி இலுப்பை எண்னை
100 கி வேப்ப்பெண்ணை
100 கி கடலெண்ணை
100 கி நல்ல்லெண்ணை
100 கி தேங்காய் எண்ணை

எலுமிச்சை பழம் 2
வெத்தலை பாக்கு
பெரிய ஊதவத்தி 2
கற்பூரம் இ கட்டு
பூ மாலை
வாழை பழம் 2
தட்ஷனை 100 ரூ

என்று இருந்தது. வரும் செவ்வாய் கிழமை காலையில் திரும்பவும் வருமாறு சொன்னார்.தலையை சொறிந்துகொண்டு வீட்டுக்கு வந்தோம்.

அடுத்த முறை எனக்கு நண்பனுடம் செல்ல விருப்பமில்லாததால் நான் செல்லவில்லை. ஐந்து நாட்களை கழித்து நண்பனை எதேச்சையாக சந்தித்தேன்.

என்னப்பா...கோயிலில் சோலி எல்லாம் முடிந்ததா, பிரச்சனை தீர்ந்ததா என கேட்டேன்.

அவனும் இரண்டு பக்கமும் தலை ஆட்டினான். அதை முடிந்ததாக எடுப்பதா இல்லை முடியவில்லை என எடுப்பதா தெரியவில்லை. பின்னர் கொஞ்சம் புலம்பினான்...

கடைசியில் ஒன்று மட்டும் எனக்கு புரிந்தது.

அவரிடம் வரும் பக்தர்களை வாரம் மூன்று முறை வரச்சொல்வார்கள்.

முதல் முறை செல்லும்போது கிட்டத்தட்ட 150 ரூபாய் செலவு (தட்சனை சேர்த்து),
இரண்டாவது  முறை செல்லும்போது கிட்டத்தட்ட 350 ரூபாய் செலவு (தட்சனை சேர்த்து),
மூன்றாவது முறை செல்லும்போது கிட்டத்தட்ட 250 ரூபாய் செலவு (தட்சனை சேர்த்து)!

மனப்பிரச்சனை,பணப்பிரச்சனை, உடம்பில் வலி, நோய் மற்றும் எல்லா வித பிரச்சனைகளுக்கும் ஒரே மாதிரியான டிரீட்மெண்ட் தான். ஒரு எலுமிச்சை பழம், சூடம் ஏற்றி தலையில் வைத்து கோயிலை சுற்ற வேண்டும்.

ஒரு ஆளுக்கு வாரத்தில் மூன்று முறை ஆன செலவு 750 ரூபாய். அப்படியானால் சுமார் 25 பேருக்கு மாதத்தில் ஆகும் செலவு 18750 ரூபாய். அப்படியானால் ஒரு மாதத்திற்க்கு அருள்வாக்கு அய்யாசாமியின் வருமானம் 75000 ரூபாய்.

இவையெல்லாம் போக பக்தர்கள் கொடுக்கும் பழங்கள், கற்பூரம், எண்னை மற்றும் அகர் பத்திகளை திருப்பி கடைகளுக்கு விற்ப்பதால் வரும் வருமானம் சுமார் 10 ஆயிரம் ரூபாய். பூஜை தட்டில் விழும் பணத்தை சேர்த்தால் அது தனி....கூடவே கோயிலில் மாதா மாதா சம்பளம் வேறு ...அப்பப்பா இப்பவே கண்ணை கட்டுதே!

இதில் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு லீவாம், எத்தனை பணம் கொடுத்தாலும் அவரை பார்க்கமுடியாது என்பது முக்கியமான தகவல்.

இந்த அருள்வாக்கு அய்யாசாமி சென்னை ஐடி கம்பெனி மானேஜர்களை விட அதிகம் சம்பாதிக்கிறார் என்பது மட்டும் நிஜம். ஐ கிளாஸ் முதல் லோ கிளாஸ் வரை பலவித கஸ்டமர்கள் இவருக்கு உண்டு. கையில் டச் ஸ்கிரீன் மொபைலை தட்டிக்கொண்டு காரில் பிசியாக சுத்துகிறார்.

நம்பி போகிறவர்களுக்கு பிரச்சனைகள் தீர்ந்தால் நல்லது. இல்லை என்றால் அருள்வாக்கு அய்யாசாமியை சொல்லி தவறில்லை. மூட நம்பிக்கை மனிதர்களைத்தான் திருத்த வேண்டும். 

1 comment: