Saturday, March 17, 2012

"நீலகிரியின் மண்ணின் மைந்தர்கள் - படகர்கள்"."நீலகிரியின் மண்ணின் மைந்தர்கள் - படகர்கள்".

படகு மக்களுக்கு நான் எழுதியிருப்பவை தெரிந்தவையாக இருக்கலாம். சாதாரணமானதாகவும் இருக்கலாம். ஆனால் இந்த கட்டுரையின் நோக்கம் நம் சிறப்பை மற்றவர்களும் அறியவேண்டும் என்பதற்க்காக எழுதப்பட்ட தொகுப்பு.

எதனையோ கட்டுரைகள் எழுதிவிட்டேன்.என்னை பெற்ற ஊரைப்பற்றியும் நான் சின்ன வயதுகளில் வாழ்ந்து திரிந்த இடங்களைப்பற்றியும் மற்றும் என் பழமை மாறாத சமூகம் பற்றியும் எழுத வில்லையென்றால் எப்படி?

பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எங்களின் தாய் மொழி தமிழ்தான், ஆனாலும் வீடுகளில் நாங்கள் பேசும் பாஷைக்கு படுகு எனப்பெயர். ஆமாம் நீலகிரியில் சுமார் 85 சதவீத மக்கள் வாழும் படுகர் இனத்தைப்பற்றித்தான் சொல்லபோகிறேன்.

வடகர்(வடக்கில் இருந்து வந்தவர்கள்) எனும் சொல் நாளடைவில் திரிந்து படகர் ஆனாதாக நினைக்கிறேன்.

பலனூறு ஆண்டுகளுக்கு முன் மைசூரை ஆண்ட முஸ்லீம் மன்னரின் தொல்லைகள் அதிகமாக, அதில் ஒரு பிரிவினர் தனியாகப் பிரிந்து மைசூருக்குப் பக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டு மலைகளில் குடிபெயர்ந்தனர். நாளடைவில் சமூகம் வளர்ந்து சுமார் 500க்கும் மேற்ப்பட்ட சிறு சிறு ஊர்களாய் பிரிந்து ஆங்காங்கே இருக்கும் மலைகளில் வாழத்தொடங்கினர். பழக்க வழக்கங்களில் கன்னடத்து சாயலும் கொஞ்சம் தமிழும் கலந்து அதை படகு என ஆக்கி பேச்சுவாக்கில் மட்டும் இன்றளவும் மொழி வளர்ந்து வருகின்றது. மொழி எழுத்து வடிவில் கொண்டுவர முயற்சித்தும் அது இன்றுவரை வெற்றிபெறவில்லை.
குடிபெயர்ந்தவுடன் மூதாதையர்களின் வாழ்க்கை சுலபமானதாக இருக்கவில்லை. முன்னதாகவே இந்த நீலகிரி மலைகளில் இருந்த மற்ற மலைஜாதிமக்கள் (குறும்பர், தொதவர்,தோடர் மற்றும் கோத்தர்) இவர்களால் நிறைய இன்னல்களை சந்தித்தாலும் தங்களது அமைதியான போக்காலும் உதவும் பண்புகளாலும் மற்றவர்களால் மரியாதையாக நடத்தப்பட்டனர். நாளடைவில் அனைவரும் தனித்தனி குழுக்களாய் வழ ஆரம்பித்தனர். ஆனாலும் இன்று நீலகரி மாவட்டத்தில் படகர்களும், கோத்தர்கள்,தொதவர்களும் மட்டுமே வாழ்கின்றனர். மற்ற இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து போனது காலத்தின் கொடுமை.

காய்கறிகள், தானியங்கள்,தேயிலை தோட்டங்கள் மற்றும் பசுக்கள் இவைகள் தான் படுகர்களின் வாழ்வாதாரங்களாய் இருந்தது. ஆனால் இன்று தேயிலை தோட்டங்களால் வருமானம் இல்லாமல் பணக்கார வெளி மாநிலத்தவர்க்கு விற்று விவசாயம் செய்ய வழியில்லாது எங்கள் சமூகத்து பல இளைஞர்கள் இன்று திருப்பூரிலும், கோயமுத்தூரிலும் துணிக்கடைகளிலும் தொழிற்சாலைகளிலும் குறைந்த சம்பளங்களில் கொத்தடிமைகளாய் இருக்கின்றனர் என்பது அவலம்.

அனைத்து இந்து கடவுள்களையும் அல்லாது எங்களின் குலக்கடவுள் எத்தை(பாட்டி), ஹிரியோடைய்யா எனும் குலதெய்வங்களும் உண்டு.பக்தியிலும், அன்பிலும் இயற்கையுடனும் ஒன்றி வாழ்ந்த எங்கள் மக்கள் நாகரிக மாற்றத்தால் உலகெங்கிலும் சிறந்து விளங்கி சமூகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.எத்தனை வளர்ச்சிகள் வந்தாலும் இன்னும் தங்களது கலாச்சாரத்தை மறக்காமல் இருப்பது மனதிற்க்கு மகிழ்ச்சியே. விதியாசமான பாரம்பரிய உடையை உடுத்தி திருவிழா காலங்களில் எங்களின் நடனம் வெகு சிறப்பு வாய்ந்தது. உலகிலேயே எவ்வளவு நேரம் ஆடினாலும் சோர்வு வராத நடனம் எங்களுடைய நடனம் மட்டுமே.
எங்கள் படுக மக்களின் சில உன்னதமான கலாச்சார குறிப்புகள் கீழே காணலாம்.

1. எங்கள் பகுதிகளை (சீமை) நான்காகப் பிரித்து, ஒவ்வொரு சீமையிலும் சுமார் 100 முதல் 200 சிறு சிறு ஊர்களாய் வாழ்ந்து வரும் எங்கள் சமூகம் இதுவரை எந்த விஷயத்திற்க்காகவும் எங்களுக்குள் சண்டை போட்டதில்லை.

2. பெண் எடுத்து பெண் கொடுக்க ஒவ்வொரு சீமையிலும் குறிப்பிட்ட கட்டுபாடான ( மொறை) சம்பிரதாயங்களை( பின்பற்றி வருகிறோம். இதன் படி ஒரு ஊரில் இருக்கும் ஆண்மகன் தனக்கு முறையுள்ள 10 முதல் 15 ஊர்களில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய முடியும். மற்ற ஊர்களில் இருக்கும் அனைது பெண்களும் அக்கா தங்கை எனும் முறைப்படுவர்.

3. ஜாதகம் பார்ப்பதோ, வரதட்சனை கேட்கும் பழக்கமோ இல்லாத மக்கள். அதிகமான விவாகரத்துக்களும் நடக்காத சமூகம். ஏன் பிச்சை எடுப்பவர் இல்லாத சமூகம் என்பது தனிச்சிறப்பு.

4. முகம் தெரியாத மூன்றாவது ஆள் ஊருக்குள் வந்தால் அவர்களை அழைத்து விசாரித்து சரியான தகவலை தந்து தேனீர் கொடுத்து அனுப்பும் விருந்தோம்பல் பழக்கம் உலகச்சிறப்பு.

5. கல்யாணம்,குழந்தை பிறப்பு,விபத்து,மரணம் இந்த மாதிரி எந்த சுப துக்க காரியங்கள் நடந்தாலும் குடும்பத்துடன் வந்து மொய் குடுத்து உதவும் பழக்கம் இன்றும் உண்டு. பல நல்ல, கெட்ட காரியங்கள் கஷ்டப்படும் குடும்பங்களின் கடைசிநேர செலவுகளுக்கு இந்த பணம் உதவும் என்பதில் வேறு கருத்து இல்லை. முக்கியமாக மரண வீடுகளில் பெண்கள் அனைவரும் தலையோடு தலை சேர்த்து (மண்டை கொடோது) துக்கத்தை பகிர்ந்து இரவு முழுக்க உடலின் அருகில் ஊரே திரண்டு பஜனை பாடல்கள் பாடி மறுநாள் உடலை அடக்கம் செய்து ஆத்மாவை சாந்தி செய்வது வரவேற்க்கவேண்டிய கலாச்சாரம்.

6. 99 சதவீத பிரச்சனைகள் போலீஸ்டேஷனுக்கோ, நீதிமன்றத்திற்க்கோ செல்லாமல் ஊர் பஞ்சாயத்திலேயே சுமூகமாய் முடிந்துவிடுவது கட்டுபாடுகளின் உச்சம்.

7. சமீபத்தில் ஏற்ப்பட்ட நிலச்சரிவுகளில் பல ஊர்கள் பாதிக்கப்பட, இதைக்கண்டு தவித்த மக்கள் பல ஊர்களிலிருந்து லாரிகளில் வந்து பண உதவிகளையும் பொருளுதவிகளையும் தந்து துன்பத்தில் பங்கெடுத்தது எங்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி.

8. வயதில் பெரியவர்கள் யாரைப்பார்த்தாலும் ஆசீர்வாதம் (அரிசிவி) வாங்கும் பழக்கம் இன்னும் ஊர்களில் இருப்பது மகிழ்ச்சி. கல்யாண நிகழ்வுகளிலும் , சந்தோஷ காலங்களிலும் "ஓ அவ்கோ" எனும் ஒலியை ஒருசேர எழுப்பி கொண்டாடுவது அருமையோ அருமை.

9. குறுகிய சமூகமாய் இருந்தாலும் பல திறமை வாய்ந்த இளைஞர்கள் பலர் நாட்டில் உயர் உதவிகளிலும், விளையாட்டு மற்றும் கலை துறைகளிலும் சிறந்து விளங்குவதிலும் எங்களுக்கு சந்தோஷமே.

10. வருடம் ஒருமுறையாவது திருவிழாக்களில் மொத்த குடும்பமும் தாத்தா,பாட்டி,சித்தப்பா,அண்ணி,மாமா....என எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடி பாரம்பரிய அவரை குழம்பையும், துப்பதிட்டு எனும்( நெய் பலகாரம்) த்தையும் உண்டு மகிழ்வது கண்கொள்ளா காட்சி.ஆனால் இன்றைய சில குறைகள்...

1. பலகாலங்கள் இயற்க்கையுடனும், விவசாயத்தையும், தேயிலை தோட்டங்களையும் நம்பி வாழ்ந்த மக்கள் இன்று பணத்திற்க்காக தோட்டங்களை தாரைவார்த்து கொடுத்து எங்கள் சமூகம் பிழைக்க இன்னொரு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து செல்வதில் எங்களுக்கு வருத்தமே.

2. நீலகிரியின் பசுமைகளை காக்க தவறியதால் காட்டில் வாழ்ந்த குரங்குகளும், காட்டு எருமைகளும் ஊருக்குள் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. அதிலும் எங்கள் வீட்டு சமயல் அறைகளில் குரங்குகள் பசியை தீர்த்துக்கொள்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்த முறை ஊருக்கு சென்றபோது சிறுத்தை புலிகளால் ஊரில் ஒரு நாயை கூட காண முடியவில்லை. ஆங்காங்கே வைத்திருக்கும் செல்ஃபோன் டவர்களால் சிட்டுக்குருவிகளைக்கூட காணவில்லை.

3. சுற்றுலா தலங்கள் ஆகிவிட்ட ஊட்டியும் குன்னூரும் பணக்காரர்களின் ஆக்கிரமிப்புகளால் அழிந்து மலையரசி இன்று தன் அழகை இழந்து கூனிக்கிடக்கிறாள். ஆக்கிரமிப்புகளிலிருந்து மலையும் மக்களும் காக்கப்படவேண்டும். இயற்க்கையோடு ஒண்டி வாழ்ந்த மக்கள் இன்று கொஞ்சம் ஒதுங்கி இருப்பதும் கவலையே. "மாஸ்டர் பிளான்" திட்டத்தை வரைமுறைப்படுத்த்வேண்டும்.

4. நகரங்களில் மக்களின் மனசை மாற்றிய மதமாற்ற கும்பல் இப்போது நீலகிரியையும் மெதுவாய் அண்ட ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இதற்க்கெல்லாம் அசரப்போவதில்லை எங்கள் படகு சமூகம்.

5. கம்ப்யூட்டர் வேலைகளாலும், திடீர் வசதிகளாலும் இன்றைய படுக இளைஞர்களும், இளைஞ்சிகளும் பாதைமாறாமல் இருப்பது நலம். காக்கப்பட வேண்டிய கலாச்சாரங்கள் காக்கப்படவேண்டியது மிக அவசியம்.

6. பெற்றோர்கள் படுக குழந்தைகளுக்கு சமூகத்தின் தனித்துவத்தை சொல்லித்தர தவறி விட்டனர் மற்றும் பல பழமையான எங்களின் பாரம்பரிய நிகழ்வுகளும், விளையாட்டுகளும் குழந்தைகளுக்கு சொல்லித்தராமல் இருப்பது வருந்தத்தக்க விஷயம்.

7. குன்னூரிலும், தேனலை ஹட்டியிலும் திடீரென்று முளைத்திருக்கும் முதியோர் காப்பகம் என்னை அதிர்சிக்குள்ளாக்கியிருக்கிறது. வேண்டாமே நம் சமூகத்தில் இப்படி பட்ட அவலங்கள்.

8. பாரம்பரிய நம் உணவுகளை எரிகியிட்டு (கோதுமை களி), பத்த அக்கி போன்றவற்றை மறந்து வருவது கவலை தருகிறது..

எது எப்படியோ இந்தியாவில் கிட்டத்தட்ட பலனூறு மொழிகளும், பல ஆயிரம் இனங்களும் அழிந்து போயிருக்கின்றன. இன்னும் பல இனங்கள் அழியும் தருவாயில் தவித்துக்கொண்டிருக்கின்றன. அந்த இடத்தில் நம் படகு மொழியும், மக்களும் இருந்துவிடக்கூடாது என்பது என் எண்ணம்.

விடுபட்ட நிகழ்வுகளை சொல்லுங்கள்.....நிஜங்களாய் இருப்பின் நிறைய பகிர்வோம். நம் கலாச்சாரத்தை காப்போம்.


நன்றி,


www.bluehillsbook.blogspot.com9 comments:

 1. Nice.. ஆனைவரும் அரிந்த விஷயமே.. காப்பாற்றுவதற்கு வழி தெரியவில்லை..

  ReplyDelete
 2. The Badaga poople in the age group of 30 to 60 years can definitely make a revolution to regain this community strength I believe. First thing is the initiation. Poonaiku Yar Mani Kattuvadhu?

  ReplyDelete
 3. வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது தவறு. மேலும் மைசூரிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட கதையும் தவறே. நன்றாக ஆராய்ந்து பார்த்தால் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் பல கிராமங்களில் வாழும் நாம் கோத்தர்கள், தொதவர்கள், குறும்பர்கள், இருளர்கள் போல அதே மலைவாசிகள் தான். நம் மொழியும் தனி மொழி தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதே என் கருத்து.

  ஒவ்வொரு படுகனும் தன் இனம் அழியாமல் காக்கவேண்டுமெனில் அவரவர் சொந்த ஊரில் தங்கள் மூதாதையார்களின் சொத்துக்களை அழிக்காமல் விற்காமல் வைத்திருப்பது மட்டுமல்லாது அவரவர்க்கென ஊரிலெயே வீடு கட்டி அவ்வப்போது வந்து செல்லவேண்டும். வயதான காலத்தில் நம் ஊர்களை விட வேறெங்கும் சிறந்த பாதுகாப்பும் அரவணைப்பும் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. நம் கலாச்சாரமும் மிகவும் சிறந்த ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.

  ReplyDelete
 4. மஞ்சூர் ராஜா - தங்களின் தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 5. அருமையான கட்டுரை. ஆனால் பழைமையும் இயற்கை சார்ந்து தங்கள் வாழ்வியலையும் அமைத்துக்கொண்ட ஒரு இனத்தின் வரலாற்றை இந்த அளவுக்குச் சுருக்கமாக சொல்வது சரியல்ல, நிச்சயமாகவே இதுகுறித்து மேலும் ஏராளமான தகவல்கள் இருக்கும். அவற்றையெல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டும். கேரளத்தின் அரயர்கள் என்று சொல்லப்படுகிற பழங்குடி மக்களின் வாழ்வியலைச் சொல்லும் “சின்ன அரயத்தி” என்ற நாவலை நான் அண்மையில் மொழியாக்கம் செய்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. இதன் மலையாள மொழியிலான நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பென்குயின் பதிப்பகம் வெளியிட்டது. பல்வேறு விருதுகளையும் இந்த நாவல் பெற்றது.

  ReplyDelete
 6. நன்றி, குளச்சல் மு யூசுஃப் அவர்களே....

  நீங்கள் சொன்னதை எழுதி வடிவமைக்க விரைவில் ஆவன செய்கிறேன்.

  ReplyDelete
 7. வணக்கம்... நம் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்..

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் விரைவில் தொகுக்கிறேன்

   Delete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete