Wednesday, March 14, 2012

இலங்கை தமிழ் மக்களும் தமிழ்நாட்டு மாநில கட்சிகளின் குள்ளநரித்தனமும்! - அலசல் கட்டுரை.


இலங்கை தமிழ் மக்களும் தமிழ்நாட்டு மாநில கட்சிகளின் குள்ளநரித்தனமும்! - அலசல் கட்டுரை.

இந்த கட்டுரை எழுத முகநூலே (Face Book) காரணம் (கடந்த இரண்டு வாரங்களாக இலங்கை உள்நாட்டு போரின் கொடூரமான பல படங்கள் என்னை மாதிரி இளகிய மனம் கொண்ட பலரை தூங்கவிடவில்லை).

இரண்டு நாட்களாய் அதிசயம்....அண்ணா திமுக, திமுக, காங்கிரஸ், பாரதீய ஜனதா, கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த பிற கட்சிகளின் கடைசி நேர ஒற்றுமை இந்தியாவை ஆச்சர்ய படவைத்துள்ளது.

காரணம் ஒன்றுமில்லை....ரொம்ப சிம்பிள்.....

சங்கரன் கோயில் இடைத்தேர்தலில் இவர்கள் இலங்கை தமிழர் பிரச்சனையை முன் வைத்து பச்சோந்தி அரசியல் நடத்துவதுதான் காரணம்.
இப்போது கூப்பாடு போடும் இவர்கள் கடந்த மூன்று ஆண்டுளாக எங்கே போனார்கள்?

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்க வற்புறுத்தும் இந்த மதிகெட்ட தமிழ் மந்திரிகள்  ஏன் முன்னதாகவே இந்தியா சார்பில் இந்த தீர்மானத்தை கொண்டுவர வற்புறுத்தி இருக்கலாமே!

அமெரிக்கா, ஜெனீவாவுக்கு தெரிந்த இலங்கை தமிழரின் அவலங்கள் பக்கத்து நாடான நமக்கு தெரியாமல் போனது எப்படி....அல்லது தெரிந்தும் தெரியாமல் இருந்தது எப்படி?

பல வருடங்களாக இந்திய கடல் எல்லையில் தமிழ் மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை கண்டிக்க முடியாத இந்த தமிழ்நாட்டு அமைச்சர்கள் இலங்கையின் உள்நாட்டு பிரச்சனையில் ரொம்பவும் ஆர்வம் உள்ள்வர்கள் போல் நடிக்கிறார்கள். தைரியம் இருந்தால் முதலில் நம்ம ஊர் மீனவர்களுக்கு தீர்வை தந்துவிட்டு அப்புறம் இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கட்டும்.

இந்திய மத்திய அரசும் கஷ்மீரிலும், மணிப்பூரிலும் ஆயிரம் பிரச்சனைகளை வைத்துக்கொண்டு இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்காது என்பதை இந்த அப்பாவி மக்களுக்கு தெரிவிப்பது யார்?

சங்கரன்கோயில் இடைதேர்தல் மட்டும் இல்லையென்றால் "இலங்கையா? அங்கு என்ன பிரச்சனை?" என்று நம்ம ஊர் மந்திரிகள் சமோசா சாப்பிட்டுக்கொண்டே கேட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.


அமெரிக்கா ஏன் இந்த பிரச்சனையை ஊதி பெரிதாக்குகிறது என்பது பல பேருக்கு புரியாமல் இருக்கலாம். அமைதியான தெளிந்த குட்டையை அமெரிக்கா எப்போதாவது விரும்பி யிருக்கிறதா?

குட்டையை கலக்கி குழப்ப வேண்டும் அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு கொடுத்தது போல் நாளை இலங்கைக்கும் சீனா ஆதரவு கொடுத்துவிட்டால் தெற்க்கு ஆசியாவில் அமெரிக்காவின் ஓங்கும் கரம் வெட்டப்படும் என்பதால்...இன்னும் தெளிவாக சொன்னால்...வடிவேலு சொல்வதைப்போல் " நான் ரௌடி...நான் ரௌடி" என்று அவ்வப்போது ஏதாவது செய்தாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது அமெரிக்கா. இலங்கையை பயமுறுத்தி அங்கே ஒரு ரேடாரை நிறுவி, தெற்க்கு ஆசியாவில் அவ்வப்போது சர்க்கஸ் காட்டவேண்டும் என்பது அதன் எண்ணம். இலங்கை மட்டும் அமெரிக்காவின் கைக்கூலியானால் இந்தியாவின் கதி அதோகதிதான். மூன்று பக்க கடலால் பாதுகப்பில்லாமல் இருக்கும் இந்தியா இன்னும் பல ஆயிறம் கோடிகளை பாதுகாப்புக்கு ஒதுக்க வேண்டி வரும் (அதனால் இலங்கை இந்தியாவிடமும், இந்தியா இலங்கையிடமும் நட்பாய் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்).

அப்படி அமெரிக்கா நினைக்கும் நிலை வந்தால் இந்தியாவுக்கும் பிரச்சனைதான். மேலே சீனா, பாகிஸ்தான்...கீழே அமெரிக்கா...அப்புறம் இந்தியாவின் வல்லரசு கனவுக்கு ஆப்புதான்.

கூடவே இந்தியா ஒன்றும் அமெரிக்கா அல்ல....பாகிஸ்தானில் நுழைந்தது போல் இந்தியா இலங்கையில் நுழைய முடியுமா? எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டின் உள்நாட்டு பிரச்சனையில் ஓரளவிற்க்குதான் தலையிட முடியும் என்பதை மன்மோகன் நன்றாகவே அறிவார். காங்கிரஸ் பெருசுகளும் இதை உணறுவர்.

பிறகு என்னதான் தீர்வு? இலங்கை தமிழ் மக்களுக்கு வாழ்வாதாரத்தை எப்படி தறுவது?

பதில் இல்லமல் இல்லை ஆனால் யோசித்து செயல்படவேண்டிய தருணம் இது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்கிற காரியம் அல்ல இது.

அதனால் இந்த தமிழ் நாட்டு மக்களுக்கு இந்த கட்டுரையின் மூலம் தெரிவிப்பது என்னவெனில் முதலில் இந்த பச்சோந்தி அரசியல் செய்யும் கட்சிகளை நம்பாதீர்கள். சங்கரன் கோயில் தேர்தல் வரைதான் இந்த தலைவர்கள் கூப்பாடு போடுவார்கள் என்பது நிஜம்.ஒன்றை மட்டும் செய்யலாம் இந்த மத்திய அரசு. அவை...

1. தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை தமிழ் மக்களுக்கு திருப்பி அளிக்க வற்புறுத்தலாம்.

2. கண்காணிப்பு அமைப்பை ஏற்ப்படுத்தி அவ்வப்போது இலங்கையை கவனிக்கலாம்.

3. ஜெனீவா தீர்மானத்தில் நடுநிலை வகிக்கலாம், இதனால் அமெரிக்காவையும், இலங்கையையும் ஐஸ் வைத்து குளிர்விக்கலாம்.

4. சிறுபான்மை இனத்தவரும், பிழைக்க சென்றவர்களும் உலக நாடுகளில் பலதரப்பட்ட இன்னல்களை சந்திப்பது இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதற்க்கு இலங்கை மட்டும் விதிவிலக்கா என்ன?

5. விடுதலைப்புலிகளை வளர்த்து ஆளாக்கி பின்னர் அதனை அழித்து, இருந்த சுவடே இல்லாமல் ஆக்கியதற்க்கு அமெரிக்காவும் ஒரு முக்கிய காரணம் என்பதை வரலாறு சொல்லும். குழந்தையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் அம்மா...இந்த அமெரிக்க அம்மா!

6. இனப்படுகொலைகளுக்கும், உள்நாட்டு கலவரங்களுக்கும் தூபம் போட்டு அதில் குளிர்காய்ந்தவர்கள் அவர்களின் சுயநலத்திற்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதனை ஆதரிப்பதும் தவறுதான்.

அப்படியானால் நீங்கள் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரானவரா என்று கேட்பது புரிகிறது.

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய தமிழ் மண்ணில்" பிறந்த நான்....மேற்க்கண்ட கட்டுரையில் இந்தியாவின் நிலை எப்படி இருக்கவேண்டும் என்பதை மட்டும் சொல்லி இருக்கிறேன். இலங்கையின் கடைசி நேர கொடுமைகளை காணும்போதெல்லாம் கண்ணீர் விடுகிறேன்.

கடைசியாக இந்த ஜெனீவா தீர்மானத்திற்க்கு பிறகாவது இலங்கை தமிழ் மக்களுக்கு அமைதி கிடைக்கட்டும். இறந்தவர்கள் ஆத்மா சாந்தி பெறட்டும். கூடவே அரசுகளுக்கு எதிரான ஆயுதபோராட்டம் என்றும் அமைதியை தந்ததில்லை இனி தரப்போவதும் இல்லை.No comments:

Post a Comment