Monday, March 26, 2012

மாண்புமிகு அம்மா ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம்.


 மாண்புமிகு அம்மா ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம்.
(இந்த கடிதம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புடிக்காது, காரணம் ஒரே ஒரு முறை "மாண்புமிகு அம்மா" என குறிப்பிட்டதால்)!

இந்த கடிதத்தை எழுதுவதின் நோக்கம் அம்மாவின் விஷன் 2023 என்கிற தொலைநோக்கு திட்டமே.

அப்படி என்ன இருக்கின்றது இந்த திட்டத்தில்.....

அனைவருக்கும் வீடுகள், தடையில்லா மின்சாரம், உயரிய கல்வி இப்படி பல தொலைநோக்கு பார்வைகள் கொண்ட சுமார் 15 லட்சம் கோடிகளுக்கு திட்டத்தை தீட்டி இருக்கிறார்.

அதெல்லாம் சரிதான்.....இந்த 11 வருட திட்டம் சரிதானா? ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஆட்சிமாறும்போது இந்த 11 வருட திட்டம் எப்படி சாத்தியம் என்பது எனக்கு புரியவில்லை, இதற்க்கு காரணம் இந்த அம்மாவேதான். கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்ப்பட்ட பல நல்ல திட்டங்கள் இவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே காலாவதியாகிவிட்ட நிலையில் இந்த அம்மாவின் 11 வருட திட்டம் மட்டும் விதிவிலக்கா என்ன?

இவையெல்லாம் உண்மையிலேயே தொலைநோக்கு திட்டங்கள்தானா இல்லை மக்களை திசைதிருப்ப அளிக்கப்படும் கவர்ச்சி திட்டங்களா என்பது கீழே படித்தால் உங்களுக்கு புரியும் என் நினைக்கிறேன் அம்மாவே.

சமச்சீர் கல்வியிலும், அண்ணா நூலகத்திலும் மற்றும் புதிய சட்டசபை கட்டிட நிலையிலும் அம்மா உங்களின் சறுக்கல்கள் தெரிந்ததே. அப்படியிருக்க இந்த 11 வருட திட்டத்தை அடுத்து வரும் ஆட்சி கவனிக்குமா? (ஒருவேளை அடுத்த 15 ஆண்டுகளை ஆளப்போகிறேன் என்கிற உங்கள் மன தைரியமா?).

சரி இந்த உங்களின் திட்டம் சாத்தியமா? அதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை இப்போது பார்ப்போம்.

முதலில் ஏன் இந்த 11 வருட தொலைநோக்கு பார்வை? ஏன் ஐந்து ஆண்டுகள் தொலை நோக்கு திட்டத்தை முதலில் வெளியிட்டிருக்கலாமே!. அதன் செயல்லாக்கத்தை பொறுத்து கால நீட்டிப்பு செய்யலாமே?

தொலை நோக்கு திட்டங்களை தீட்டும்முன் இப்போது இருக்கும் திட்டங்கள் நன்றாக நடக்கிறதா என்பதை முதலில் நீங்கள் கவனிக்க வேண்டும்.

நம் மக்களுக்கு முதலில் என்ன தேவை இருக்க இடம்,உடுக்க உடை,உண்ண உணவு அதன் பிறகுதான் எல்லாமே. உங்களின் தொலை நோக்கு திட்டம் அத்தியாவிசய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் கீழே நான் குறிப்பிடப்போகும் குறைகளை களையாவிடில் எந்த தொலைநோக்கு திட்டங்களும் தொல்லை தரும் திட்டங்களாகத்தான் போகும்.

உண்ண உணவு :

அனைவருக்கும் உணவு குறைந்த விலையில் கிடைக்க வேண்டும். ஆனால்...
சுமார் 30,00,000 மேற்ப்பட்ட போலி ரேஷன் கார்டுகளை முதலில் கண்டறிந்து அவைகளை நீக்க வேண்டும்.
மாதம் சுமார் 30 முதல் 40 டண் அரிசிகள் எல்லையோரங்களில் கடத்தப்படுகிறதே அதை தடுக்க வேண்டும். விளைவிக்கப்பட்ட உணவு பண்டங்களை சரியாக பராமரித்து பாதுகாக என்ன செய்திருக்கிறீர்கள்.
கஷ்டப்பட்டு பயிர்செய்யும் விவசாயிக்கு உழைப்புக்கொண்டான கூலி கிடைக்க வேண்டும். இடைத்தரகர்களாய் இருக்கும் பண முதலை புரோக்கர்களை ஒழிக்க வேண்டும். நேரடியாக தனது விளைச்சல்களை விற்க்கும் நிலை விவசாயிக்கு வரவேண்டும்.
விவசாய விளைநிலங்கள் கார்பொரேட் கம்பெனிகளின் விலை நிலங்களாவதும், ரியல் எஸ்டேட் கட்டடங்களாவதும் குறைய வேண்டும்.
தைரியமிருந்தால் மேல் கூறிய செயல்களை நீங்கள் உங்கள் தொலைனோக்குபார்வையில் காணுங்கள்.

உடுத்த உடை :

பன்னாட்டு அதிகார படையெடுப்புகளில் இங்கே இன்னாட்டு சிறுதொழில்கள் நசுக்கப்பட்டு நலிவடைந்து இருகின்றன. ஆடை நெய்பவன் அவன் மானம் என்று காக்கப்ப்டுகிறதோ அன்றுதான் உண்மையான தொலை நோக்கு திட்டம் நிலைபெறும்.
பெரிய கார்பொரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திரமும், சலுகைகளும் இன்னாட்டு சிறுதொழில் நிறுவனக்களுக்கும் கிடைக்கவேண்டும்.
ஏற்றுமதி செயல்பாடுகளில் உள்ள நடைமுறை திட்டங்களை சுலபமானதாக்கி உள்ளூர் பொருள்களுக்கு வெளிச்சந்தையையில் வாய்ப்புகிடைக்க செய்யவேண்டும்.
தமிழ்நாட்டு சிறப்பு பொருள்களுக்கு அரசே தனது செல்வாக்கின் மூலம் தொழில் விருத்திக்கான ஆக்கச்செயல்களை செய்து தரவேண்டும்.
இதை செய்யுமா உங்கள் அரசு.

ஒளிரும் மின்சாரம் :

மின்சாரமில்லையேல் உலகம் இருண்டுவிடும் என்பது உண்மை. மக்களின் அத்தியாவிசய தேவையான மின்சார தட்டுப்பாட்டால் தவிக்கும் தமிழகம் எப்படி 2023 ல் முதல் தர மாநிலமாக மாறும்?

நாட்டின் முதுகெலும்பான விவசாயிக்கு மின்சாரம் இல்லை. சிறுதொழில் செய்பவர்களுக்கு மின்சாரம் இல்லை, கல்வி கூடங்களில் மின்சாரம் இல்லை, அலுவலகங்களில் மின்சார இல்லை. என்னதான் செய்வது?

அணு உலைக்கு செலவழித்த பணத்தில் மாற்று முறை மின்சாரம், மின்சார வாரியம் மறு சீரமைப்பு மற்றும் மின் திருட்டு தடுப்பு ஆகியவற்றுக்கு செலவிட்டு ஊக்கப்படுத்தியிருந்தால் இந்த நேரம் தமிழகம் ஒளிர்ந்திருக்கும் மற்ற மாநிலங்களுக்கும் தமிழ் நாட்டிலிருந்து மின்சாரம் ஏற்றுமதி செய்திருக்கலாம்.

கட்டவிழ்ந்த கல்வி :

தொலைநோக்கு திட்டத்திற்க்கு முதலில் நாட்டில் இளைஞர்கள் அவசியம். இளைஞர்களை உருவாக்க கல்வித்துறையில் மாற்றம் அவசியம் தேவை. அரசியல் வாதிகளால் பாதி கல்வி நிலையங்கள் பணம் கொழிக்கும் வியாபார நிறுவனங்களாகிவிட்ட இந்த நிலையில் தரமான கல்வி சாமானிய ஏழை மாணவர்களுக்கு எப்படி கிடைக்கும். சலுகைகளால் கொழிக்கும் இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் அரசாங்க சட்டத்திட்டங்களை  சரியாக நடைமுறைப்படுத்துகிறதா?

கடந்த பல ஆண்டுகளாக பெற்றோர்களுக்கும், கல்வி கூடங்களுக்கும் இருக்கும் கல்வி கட்டண குளறுபடிகளை இதுவரை எந்த அரசும் கண்டுகொண்டதாக நினைவில் இல்லை. காரணம் அனைவர்க்கும் தெரிந்ததே... பண முதலைகளின் கைகளில் அரசு எந்திரங்கள்!

பந்தைய குதிரைகளாகிவிட்ட இன்றைய மாணவர்கள் செய்முறை இல்லாத நமது பாடத்திட்டங்களால், வாழ்க்கை அறிவை சொல்லாத பாடத்திட்டங்களால் பாடங்க்களை ஒப்புவிக்கும் ரோபோக்களாகி உள்ளனர்.

கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி படிப்புகளுக்காக ஏழை மாணவன் வங்கிகளில் கல்வி கடனுக்காக அலையும் இந்த அவலம் உங்களுக்கு புரியவில்லையா? உங்களின் தொலை நோக்கு திட்டங்கள் எந்த வகையில் இந்த பிரச்சனைகளுக்கு உதவ போகின்றது என்பது புரியவில்லை.

இருக்க இடம் :

உங்கள் தொலியை நோக்கு திட்டத்தில் வரும் காலங்களில் குடிசைகள் அற்ற நகரங்களை உருவாக்குவதாய் சொல்லி இருக்கின்றீர்கள். ஆனால் 80 சதவீத கிராமங்கள் குடிசைகளில் தான் வாழ்கிறது என்பதை மறந்துவிட்டீர்கள் அம்மா.

அரசாங்கத்தின் தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கும் முன்னே இரண்டு அடிகள் பூமிக்கு அடியில் புதைவது நம்ம ஊரில் மட்டும்தான் நடக்கிறது அம்மா. இதிலிருந்தே தெரியவில்லையா அரசாங்க அலுவலர்களின் செயல்பாடுகள்.

பல கோடி கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி பண முதைலைகளால் பல அடுக்கு மாடிகளாய் வானை முட்டுகின்றன. வாய்தா வாய்தா (உங்களைப்போல்தான்) வாங்கி இன்னும் பல விதி மீறல்களில் ஈடு பட்டு வருகின்றனர். கடுமையான சட்டங்கள் இல்லாததாலும் பணம் படைத்தவர்களுக்கு சட்டம் வளைந்து கொடுப்பதாலும் பாதிக்கப்படுவதும் அரசின் கஜானாவும் அதனால் ஏற்ப்படும் வரிச்சுமையும்தான். இதை கவனிப்பீர்களா அம்மா?

முக்கியமாக நீங்கள் கட்டும் வீடுகளிலாவது கழிப்பறை வசதியுடன் கட்டுங்கள்.

மும்பைக்கு அடுத்து மிகப்பெரிய குடிசைகளைக்கொண்ட சென்னையை உங்களின் ஒரே ஒரு திட்டத்தால் மாற்றிவிட முடியும் என்பது பகல் கனவு. கூவமும் குடிசைகளும் சென்னையின் இரு கண்கள் உங்களின் திட்டங்களுக்கு சரியான செயல்பாடுகள் இல்லாவிட்டால் அம்மா நீங்கள் ஆவீர்கள் சும்மா!

போக்கு வரத்து :

மெட்ரோவுக்காக சென்னை பாதைகள் குறுகிப்போன இந்த நேரத்தில் உங்களின் மோனோ ரயிலும் முளைக்க ஆரம்பித்திருக்கின்றது. நான்கு வருடங்களாக மெட்ரோ வருமா வராதா என்கிற அலைகழிப்பில் சாமாநியர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. தயவு செய்து உங்களின் மோனோவாவது மெட்ரோ திட்டம் முடிந்தபின் ஆரம்பிக்கலாமே?

முதலில் நீங்கள் போடும் தார் சாலைகளின் தரமாவது கவனிக்கப்படட்டுமே!

முடிந்தால் நகரங்களில் ஆட்டோக்களுக்காவது சரியான கட்டணத்தை நிர்ணயம் செய்யுங்கள். தைரியம் இருக்கின்றதா உங்களுக்கு?

அரசாங்க ஊழியர் :

அரசியல் கட்சிகளின் சங்கங்களாக செயல்படும் அரசாங்க அலுவலகங்கள் லஞ்சம் இல்லாத நிலையை அடைவது எப்போது? காவல் துறையிலும், சட்டத்துறையிலும் இருக்கும் ஓட்டைகளையும், நிர்வாக சீர்கேட்டினையும் கூடவே கவனிக்கப்படவேண்டிய  கட்டாயத்தில் உங்கள் அரசு இருக்கின்றதம்மா.

கருப்பு பணங்களை வெள்ளையாக்குங்கள். கருப்பு பணத்திற்க்கு துணை போகிறவர்களை தண்டியுங்கள்.

தயவு செய்து இனி இலவசங்கள் வேண்டாம். இயன்றவரை நாங்கள் உழைத்து உண்போம்.

கடைசியாக உங்களின் "தொலைநோக்கு" திட்டம் தொல்லை தரும் திட்டமாக இல்லாமல் "தொல்லை நீக்கும்" திட்டமாக இருக்கும் என நம்புகின்றேன். தனிமனிதனின் குறைகளை எந்த அரசு செவி சாய்த்து கேட்கின்றதோ அந்த அரசே என்னை பொறுத்தவரை நல் அரசு. இப்போது சொல்லுங்கள் உங்கள் அரசு எப்படி?

நன்றி,
இப்படிக்கு,
அப்பாவி தமிழன்.


 

Sunday, March 25, 2012

அபிராமி மெகா மகால் - ஒரு அலுப்பு பயணம்.
அபிராமி மெகா மகால் - ஒரு அலுப்பு பயணம்.(இந்த கட்டுரையில் வரும் சம்பவங்கள் என் சொந்த கருத்து. நன்மை தீமைகளுக்கு நானே பொறுப்பு. மக்களின் பொதுநலத்தை கருதி இதை எழுதி இருக்கிறேன். நம்புவதும் நம்பாததும் அவரவர் சொந்த விருப்பம்).

கடந்த பல வருட சென்னை வாழ்க்கையில் திடீரென்று பல மல்டிஃபிளக்ஸ் தியேட்டர்களும் மல்டிஃபிளக்ஸ் மால்களும் முளைத்துவிட்டது. மும்பை மற்றும் பெங்களூருக்கு அடுத்தப்படியாக ஐனாக்ஸ், ஃபேம், சத்யம் சினிமாஸ், ஸ்கை வாக், மாயாஜால்,எக்ஸ்பிரஸ் அவென்யூ மற்றும் அபிராமி மெகா மால் இப்படி பல. வெளிநாட்டு கலாச்சாரத்தின் அடுத்த படையெடுப்புகள்.

முன்பெல்லாம் திரையரங்குகளில் படம் பார்க்க ஒருவர் போனால் 40 லிருந்து 50 ரூபாய் டிக்கெட்டும் இருபது ரூபாய் வரை இடைவேளைகளில் காப்பி,பப்சுக்கும் செலவாகும். ஆனால் இந்த மல்டிபிளக்ஸ் மால்கள் வந்தவுடன் ஒருவர் படம் பார்க்க 300 லிருந்து 400 வரை செலவாகிறது. வெளி உணவுகள் எடுத்துச் செல்ல அனுமதியும் இல்லை. படம் பார்ப்பது மட்டுமல்லாது நம் வீட்டு ஷாப்பிங்க்கையும் முடித்து விட்டு வந்துவிடலாம்.

சென்னையில் கிட்டத்தட்ட எல்லா மல்டிஃபிளக்ஸ்களையும் பார்த்தாயிவிட்டது. ரொம்ப நாள் ஆசையில் குடும்பத்துடன் அபிராமி மெகா மால் சென்றேன். பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களையும் அபிராமி ராமநாதனின் பல நிகழ்ச்சி பேச்சுக்களை கேட்டவன் என்பதால் மிக அதிகமான எதிர்ப்பார்ப்புடன் சென்றேன்.

வீட்டிலிருந்து புரசைவாக்கம் சென்றதும் மெகா மால் மெகாவாய் கண்ணில் பட்டது. படிகளில் ஏறி போனதும் மிகக்குறுகிய வரவேற்ப்பு வாசல் என்னை வரவேற்றது. வார நாட்களை குடும்பத்துடன் நிம்மதியாய் கழிக்கலாம் என்று சென்ற எங்கள் குடும்பத்தவர்க்கு நிற்பதற்க்கு கூட இடமில்லாத அபிராமி மெகா மாலை பார்த்தவுடன் ஆச்ச்ர்யப்பட்டேன்.....நில்லுங்கள்.... நிற்பதற்க்கு இடமில்லாத கூட்டமா என கேட்க வேண்டாம்!

அத்தனையும் கடைகள் கடைகள்....கடைகள்....தியாகராய நகரின் ரோடுகளை மறைத்துகொண்டிருக்கும் நடைபாதை வியாபாரிகளைப்போல் அபிராமி மால் முழுவதும் எண்ணிலடங்கா சின்ன சின்ன கடைகள்.

நம்ப மாட்டீர்கள் மாடிகளுக்கு செல்ல ஆறு பேர் வரை செல்லும் லிஃப்டும் மேலொருவர் ஏற கீழே ஒருவர் இறங்கும் இரண்டடி அகலம் கொண்ட படிகள்....

இவ்வளவு பெரிய மாலில் இவ்வளவு சிறிய படிக்கட்டுகளா? ஏதிர்பாராத அவசர காலங்களில் எப்படி இந்த படிகளை உபயோகப்படுத்த முடியும்? என் கண்ணில் ஒரே ஒரு அவசர கால வழி தென் பட்டது ஆனால் அவசரத்துக்கு இருவர் சேர்ந்து பயன் படுத்தக்கூடிய நிலையில் அந்த வழி இல்லை என்பது சோகம்.
எங்கையுமே மின்கசிவை தடுக்கும் ஃபயர் எக்ஸ்சிங்க்யூஷர் சிலிண்டர்களை பார்க்கவே இல்லை.

ராமநாதன் நல்ல வியாபாரத்தந்திரம் கொண்டவர் இருனூறுக்கு மேற்ப்பட்ட பெட்டி கடைகளை அங்கே அமைத்து நல்ல லாபம் பார்க்கிறார் என்பது நிஜம். ஆனால் சரியான பாதுகாப்பில்லாத ரோட்டிற்க்கு மிக அருகில் இருக்கும் இந்த கட்டிடத்திற்ற்கு அரசு எப்படி அனுமதி அளித்தது என்பது எனக்கு புரியவில்லை. பெரிய பெரிய கட்டிடங்களுக்கு முன்னால் சிறிய நிலத்தை "இது பொதுமக்களுக்கான திறந்த வெளி பூங்கா" என்று பத்தடிக்கு பத்தடியாவது சாதித்துவிட்டதாய் போர்டு போடும் பழைய மேயர் இந்த இடத்தை கவனித்தார என்பது புரியவில்லை.

நடப்பதற்க்கு கூட இடம் இலாததால் அது மல்டிபிளக்ஸ் ஞாபகத்தை எங்களுக்கு தரவில்லை மாறாக ஒண்டிக்குடித்தன வீடுகளுக்கு போன தலைவலியைத்தான் தந்தது.

மற்ற மல்டிபிளக்ஸ்களுக்கு போனவர்கள் அபிராமி மெகா மாலை என்ன வென்று சொல்வார்கள் என்பது எனக்கு நன்றாக புரிந்தது. குழந்தைகளுக்கான விளையாட்டு என்று சொல்லி அங்கே அடிக்கப்படும் கொள்ளைகள் அப்பப்பா....சொன்னால் புரியாது.

சரி...அங்குதான் அப்படி சாப்பிடவாவது போகலாம் என்று கீழ் தளத்திற்க்கு வந்தால் இன்னும் கொடுமை. சுமார் பத்திற்க்கு மேற்ப்பட்ட உணவகங்கள் இருப்பதால் மெனு கார்டை மாற்றி மாற்றி காட்டி வெறுப்பேற்றுகிறார்கள். நெருக்கமாய் பல கடைகள் இருப்பதால் பல சாப்பாட்டு சுவைகள் அந்த ஏசி அறைக்குள் பரந்து இருப்பதால் உண்மையிலேயே நிம்மதியாக சாப்பிடும் எண்ணம் வரவே இல்லை. சாப்பாட்டு விலைகளும் கொள்ளை விலை. தண்ணீர் பாட்டில் தான் வாங்க வேண்டும் என்பது தனி சட்டம். கழிவறை வசதிகள் கூட கீழ்தளத்தில் மட்டும் உண்டு அப்படியொன்றும் சுத்தமாக இல்லை.

எனக்கு தெரிந்த வரை மற்ற மால்களில் இருக்கும் இடவசதியும், காற்றோட்டமும் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் இங்கு இல்லை என்பது நிஜம். காரில் போகாததால் பார்க்கிங் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. புதிதாய் இந்த மாலுக்கு போகிறவர்கள் போகாமல் இருப்பது நலம். முன்பே போனவர்கள் இனி போக மாட்டார்கள் என்பது நிஜம். "அப்பா மெதுவா வீட்டுக்கு போலாம்" என்று சொல்லும் என் மகன் பத்துமுறைக்கு மேல் கேட்டுவிட்டான் "வீட்டுக்கு போலாம்பா" வார இறுதி நாள் மாலையை அழகாக கழிக்க நினைத்த நாங்கள் வியர்க்க விறுவிறுக்க அசதியாய் வெளியே ஓடி வந்தோம். கடைசியாய் இது "மெகா மால் நம்மை மெகா ஃபூல் ஆக்கும்"Monday, March 19, 2012

காணவில்லை


காணவில்லை


காலையிலிருந்து கையில்
அரிசியுடன் காத்துக்கிடக்கிறேன்
முற்றத்திலும் கொஞ்சம்
கோதுமையை தூவி இருக்கிறேன்
ரொம்ப நேரமாகியும் ஒன்றைக்கூட காணவில்லை.

எங்கே போனது....
என் சிட்டுக்குருவிகள்?

சிட்டுக்குருவிகளை பார்க்காமல்
வாசலை வெறித்தபடி
பால் சாப்பிட மறுக்கும்
என் குழந்தையை
எப்படி சமாதானப்படுத்துவது?


Sunday, March 18, 2012

என்ன சொல்கிறது பட்ஜெட் 2012 - ஒரு அலசல்.
ஒரு வழியாய் பட்ஜெட் தாக்கல் செய்ய பட்டுவிட்டது. டிவிக்களில், பத்திகைகளில் பலவிதமானவர்களின் விமர்சனங்க்களும் வரிசையாய் வந்துக்கொண்டிருக்கின்றது.

இந்திய சரித்தரத்தில் ஒரு கட்சியின் பட்ஜெட்டை எதிர்கட்சியோ, மற்ற கட்சிகளோ ஆதரித்ததாக சரித்திரம் இல்லை. விஷயமே தெரியாமல் இது மக்களுக்கு எதிரான பட்ஜெட், சாமானியர்களுக்கு உதவாத பட்ஜெட், என இப்படி விதவிதமான கருத்துக்கள் மைக்குகள் முன் சொல்லப்படும். இந்தமுறையும் அப்படித்தான்.

இந்த பட்ஜெட்டால் மக்களுக்கு சுமை கூடும், ஏழைகள் கஷ்டப்படுவார்கள் என்று நம் அம்மா ஜெ அவர்கள் சொன்னபோது இதுதான் இந்த ஆண்டின் சிறந்த காமெடியாக எனக்குப்பட்டது. விலை ஏற்றத்தை பற்றி யார் கூறுகிறார்கள் பாருங்கள் மக்களே!

வழக்கம் போல் அத்வானி "ஆம் ஆத்மி" பட்ஜெட் இல்லை என்றார்.

ஆனால் மௌன குரு மன்மோகன் தன் திரு வாய் திறந்து நாட்டை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும் பட்ஜெட் என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

அப்படி என்னதான் சொல்கிறது பட்ஜெட்?

2012 பட்ஜெடில் ஒரு ரூபாயில் எவ்வளவு வருமானம் வருகிறது எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதை சுலபமாக விளக்கலாம்.

ஒரு ரூபாயில் வரவுகள்...

உலகவங்கி/மற்ற நாடுகள் பெறப்படும் கடன் 29 பைசா, திட்டம் சாரா வரவுகள் 2 பைசா, வரிகள் இல்லாத வரவு மூலம் 9 பைசா, சேவை வரிகள் மூலம் வரவு  7 பைசா,
கலால் வரிகளின் மூலம் 11 பைசா, சுங்க வரிகளின் மூலம் 10 பைசா, வருமான வரிகளின் மூலம் 11 பைசா, கார்பொரேஷன் வரிகள் 21 பைசா.

ஒரு ரூபாயில் செலவுகள்...

மாநிலங்களுக்கான திட்டங்களுக்காக செலவு 7 பைசா, மத்திய அரசின் திட்டங்களுக்காக செலவு 22 பைசா, செலுத்தவேண்டிய வட்டி செலவு 18 பைசா
பாதுகாப்புக்காக செலவு 11 பைசா, மாநிய செலவு 10 பைசா, திட்டம் சாரா செலவுகள் 11 பைசா, மாநிலங்களுடன் பங்கிடும் வரிகள்,கலால் வரிகள் 17 பைசா,
திட்டமிடப்படாத செலவுகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 4 பைசா, கடன் செலவு 29 பைசா.

ஆக ஒரு ரூபாய் வரவு இருந்தால் ஒரு ரூபாய் 29 பைசா செலவாகிறது.

இந்தியாவின் பட்ஜெட்டை பற்றி சொல்ல வேண்டுமானால் இப்படி சொல்லலாம். சாதாரண நடுத்தர குடும்பம் மாத செலவுகளுக்காக மாதம் 5000 ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் அவர்களால் வாங்கிய கடனை சேர்த்து 3800 ரூபாய் மட்டும் கிடைக்கிறது என்றால் அந்த  குடும்பத்தின் நிலை என்னவோ அந்த நிலைதான் நம்ம பட்ஜெட்.

முகர்ஜியின் இந்த பட்ஜெட்டில் பல வரிகளை விதித்து மக்களை இன்னும் கஷ்டத்தில் ஆழ்த்தியிருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தனி நபர் வருமான வரி உச்ச வரம்பை 1.80 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தி சுமார் 3500 ரூபாய் வரை சேமிக்க வைத்த இந்த பட்ஜெட் மறைமுகமாக பல ஆயிரம் கோடிகளை வரிகளாய் மக்களுக்கு சுமத்தி இருக்கிறார்.

பட்ஜெட் வந்தவுடன் முதல் கேள்வி...எதன் விலை குறையும் எதன் விலை அதிகம் என்பதுதான்.

LCD TV, விலைகுறையும்.

மற்ற எல்லாமே விலை அதிகமாகும். அதுவும் பாவம் இந்த பீடியும் சிகரெட்டும் வருடா வருடம் விலையை உயர்த்தி கூடிய சீக்கிரம் தங்கத்துக்கு சமமான விலைக்கு வந்தால் கூட ஆச்சிரியமில்லை.

வரவு எட்டணா செலவு பத்தணா ஆகிவிட்ட நிலையில் எப்படி சம்மாளிப்பது?

சுலபமான தீர்வு இங்கேயே உண்டு. மக்கள் வரிகட்டவில்லையென்றால் நடவடிக்கை எடுக்கும் சட்டம் அரசியல் வாதிகள் போடும் திட்டங்கள் சரியான இடங்களில் போய் சேருகிறதா என்பதை கண்காணிக்க சட்டம் இங்கு இல்லை. கையில் இருக்கும் தண்ணீர் அரசியல் வாதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும், இடைத்தரகர்களையும் கடந்து மக்களுக்கு வந்து சேருவதற்க்குள் எல்லாம் காலியாகி இரண்டு மூன்று சொட்டுகள்தான் கிடைக்கும்.இதுதான் இன்றைய நிலை.
(உதாரணம் இன்ஃபோசிஸ் நந்தன் நீல்கேனியின் திட்டத்திற்க்காக கடந்த 4 ஆண்டுகளாக பல்லாயிரம் கோடிகள் ஒதுக்குகிறார்கள், இந்த பட்ஜெட்டிலும் சிறப்பு அட்டக்கான இந்த திட்டத்திற்க்காக மேலும் ஒதுக்கியிருக்கிறார்கள்...ஆனால் இதுவரை இந்த நான்கு ஆண்டுகளாக என்ன நடக்கிறது என்பதும் புரியவில்லை திட்டத்தின் நிலை என்ன என்பதும் தெரியவில்லை.)

மற்ற கட்கிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு வேறுபாடு உண்டு. மற்ற கட்சிகளில் ஒருத்தர் அல்லது இருவர் மட்டுமே அறிவு ஜீவிகளாய் இருப்பார்கள். ஆனால் காங்கிரஸ் பெருசுகள் பலர் அறிவு ஜீவிகளாய் இருப்பதால் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்.

வசதியிருப்பவர்களுக்கு சல்யூட் அடிக்கும் அரசு இயந்திரம் சாமானியர்களை கண்டுகொள்வதில்லை என்பது நிஜம். வங்கியில் 50,000 ரூபாய் கடன் வாங்கிவிட்டு கட்டாதவரை பேப்பரில் படம் போட்டு அசிங்கப்படுத்தும் இந்த அரசு பல ஆயிரம் கோடிகளை லபக்கிய பண முதலைகளை சுதந்திரமாக உலவ விட்டுள்ளது.

அதேபோல் சலுகைகளை பெற இந்த பன்னாட்டு கார்பொரேட் நிறுவனங்கள் நடத்தும் பேரங்களுக்கு அனுமதி கொடுத்தபின் அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து நடைமுறைபடுத்தவேண்டும். (பல ஏக்கர் நிலங்களையும் சலுகை மின்சாரத்தையும் பெற்றுக்கொண்டு பல ஆயிரம் பேருக்கு வேலைதருவதாய் சொல்லும் பன்னாட்டு நிறுவனங்கள்,ஏழைகளுக்கு 25% இலவச சிகிச்சை தருவதாய் சொல்லும் ஃபைவ் ஸ்டார் தனியார் மருத்துவமனைகள், ஏழை மாணவர்களுக்கு இடம் தருவதாய் சொல்லும் தனியார் கல்வி நிலையங்கள் இப்படி பல திட்டங்கள் கண்காணிக்கப்படுவதில்லை)

நாட்டில் அரசின் கவனத்திற்க்கு வராமல் அல்லது அரசு கண்டுகொள்ளாமல் தலைமறைவில் செயல்படும் மிகப்பெரிய கருப்பு பண பரிவர்த்தனைகளை தடுத்தால் பாதி சுமை குறையும்.

ஆயிரம் ஆயிரமாய் சம்பளம் வாங்கும் குடிமகன்கள் பிப்ரவரி மாதம் வந்தால் எப்படி டேக்ஸ் கட்டாமல் தப்பிப்பது என நினைக்கும் மனநிலை முதலில் மாறவேண்டும்.

விவசாயத்துக்கான சிறந்த திட்டங்களை வகுத்து நாட்டில் உணவும்,பண்டங்களும் தன்னிறைவு கிடைக்க செய்து பாதி சுமைகளை குறைக்கலாம்.

சினிமாத்துறை, கட்டுமானத்துறை, கல்வித்துறைகளில் நடக்கும் கொள்ளைகளையும் கணக்கில் வராத முதலீடுகளையும் தடுத்து நிறுத்த வழிமுறைப்படுத்த்வேண்டும்.

நிறைய தேவைப்படும் மின்சாரம்,குடினீர்,பெட்ரோல்,சமையல் எரிவாயு இவைகளுக்கு பதில் மாற்று ஏற்பாடுகளை உருவாக்கும் ஆராய்ச்சிகளுக்கு அரசு உதவவேண்டும்.

லஞ்சம் வாங்குவோர், வரியேய்ப்பு செய்வோருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் வேண்டும். ஊழல் செய்த பணங்களை திரும்ப வாங்கினாலே பாதி கடன் அடையும்.

35 ரூபாயில் வாழலாம் என்று கூறும் மாண்டேக் சிங் போன்றவர்கள் திட்ட கமிஷனில் இருந்தால் எப்படி நல்ல பட்ஜெட் வரும்?

என்று ஏழைகள் சொந்த வீடுகளுக்கு போகிறார்களோ, ஏழை மாணவனுக்கு சுலபமாய் கல்வி லோன் கிடைக்கிறதோ, விவசாயின் உழைப்புக்கு சரியான கூலி கிடைக்கிறதோ,
மேலே சொன்ன இருக்க இடம், படிக்க கல்வி, உண்ண உணவு, உடுத்த உடை கிடைக்கும் தீர்வை சொல்வதுதான் உண்மையான நல்ல பட்ஜெட்.

என்னதான் பட்ஜெட் போட்டாலும் மாசக்கடைசியில் காசில்லாமல் கடைசியில் தலையை சொறிந்துக்கொண்டு நண்பனிடம் கை நீட்டுவது நமக்கு புதிதா என்ன. இந்தியாவும் அப்படித்தான் தன்னிறைவு ஆகும் வரை இந்த பட்ஜெட் கையை(காங்கிரசை) கடிக்கும் பட்ஜெட்டாகத்தான் இருக்கும். அடுத்த முறையாவது ஒரு இளைஞன் பட்ஜெட்டை போடட்டுமே.    

வடிவேலுவின் பாஷையில் சொன்னால் இந்திய மக்கள் ரொம்ப நல்லவங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க!


Saturday, March 17, 2012

"நீலகிரியின் மண்ணின் மைந்தர்கள் - படகர்கள்"."நீலகிரியின் மண்ணின் மைந்தர்கள் - படகர்கள்".

படகு மக்களுக்கு நான் எழுதியிருப்பவை தெரிந்தவையாக இருக்கலாம். சாதாரணமானதாகவும் இருக்கலாம். ஆனால் இந்த கட்டுரையின் நோக்கம் நம் சிறப்பை மற்றவர்களும் அறியவேண்டும் என்பதற்க்காக எழுதப்பட்ட தொகுப்பு.

எதனையோ கட்டுரைகள் எழுதிவிட்டேன்.என்னை பெற்ற ஊரைப்பற்றியும் நான் சின்ன வயதுகளில் வாழ்ந்து திரிந்த இடங்களைப்பற்றியும் மற்றும் என் பழமை மாறாத சமூகம் பற்றியும் எழுத வில்லையென்றால் எப்படி?

பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எங்களின் தாய் மொழி தமிழ்தான், ஆனாலும் வீடுகளில் நாங்கள் பேசும் பாஷைக்கு படுகு எனப்பெயர். ஆமாம் நீலகிரியில் சுமார் 85 சதவீத மக்கள் வாழும் படுகர் இனத்தைப்பற்றித்தான் சொல்லபோகிறேன்.

வடகர்(வடக்கில் இருந்து வந்தவர்கள்) எனும் சொல் நாளடைவில் திரிந்து படகர் ஆனாதாக நினைக்கிறேன்.

பலனூறு ஆண்டுகளுக்கு முன் மைசூரை ஆண்ட முஸ்லீம் மன்னரின் தொல்லைகள் அதிகமாக, அதில் ஒரு பிரிவினர் தனியாகப் பிரிந்து மைசூருக்குப் பக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டு மலைகளில் குடிபெயர்ந்தனர். நாளடைவில் சமூகம் வளர்ந்து சுமார் 500க்கும் மேற்ப்பட்ட சிறு சிறு ஊர்களாய் பிரிந்து ஆங்காங்கே இருக்கும் மலைகளில் வாழத்தொடங்கினர். பழக்க வழக்கங்களில் கன்னடத்து சாயலும் கொஞ்சம் தமிழும் கலந்து அதை படகு என ஆக்கி பேச்சுவாக்கில் மட்டும் இன்றளவும் மொழி வளர்ந்து வருகின்றது. மொழி எழுத்து வடிவில் கொண்டுவர முயற்சித்தும் அது இன்றுவரை வெற்றிபெறவில்லை.
குடிபெயர்ந்தவுடன் மூதாதையர்களின் வாழ்க்கை சுலபமானதாக இருக்கவில்லை. முன்னதாகவே இந்த நீலகிரி மலைகளில் இருந்த மற்ற மலைஜாதிமக்கள் (குறும்பர், தொதவர்,தோடர் மற்றும் கோத்தர்) இவர்களால் நிறைய இன்னல்களை சந்தித்தாலும் தங்களது அமைதியான போக்காலும் உதவும் பண்புகளாலும் மற்றவர்களால் மரியாதையாக நடத்தப்பட்டனர். நாளடைவில் அனைவரும் தனித்தனி குழுக்களாய் வழ ஆரம்பித்தனர். ஆனாலும் இன்று நீலகரி மாவட்டத்தில் படகர்களும், கோத்தர்கள்,தொதவர்களும் மட்டுமே வாழ்கின்றனர். மற்ற இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து போனது காலத்தின் கொடுமை.

காய்கறிகள், தானியங்கள்,தேயிலை தோட்டங்கள் மற்றும் பசுக்கள் இவைகள் தான் படுகர்களின் வாழ்வாதாரங்களாய் இருந்தது. ஆனால் இன்று தேயிலை தோட்டங்களால் வருமானம் இல்லாமல் பணக்கார வெளி மாநிலத்தவர்க்கு விற்று விவசாயம் செய்ய வழியில்லாது எங்கள் சமூகத்து பல இளைஞர்கள் இன்று திருப்பூரிலும், கோயமுத்தூரிலும் துணிக்கடைகளிலும் தொழிற்சாலைகளிலும் குறைந்த சம்பளங்களில் கொத்தடிமைகளாய் இருக்கின்றனர் என்பது அவலம்.

அனைத்து இந்து கடவுள்களையும் அல்லாது எங்களின் குலக்கடவுள் எத்தை(பாட்டி), ஹிரியோடைய்யா எனும் குலதெய்வங்களும் உண்டு.பக்தியிலும், அன்பிலும் இயற்கையுடனும் ஒன்றி வாழ்ந்த எங்கள் மக்கள் நாகரிக மாற்றத்தால் உலகெங்கிலும் சிறந்து விளங்கி சமூகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.எத்தனை வளர்ச்சிகள் வந்தாலும் இன்னும் தங்களது கலாச்சாரத்தை மறக்காமல் இருப்பது மனதிற்க்கு மகிழ்ச்சியே. விதியாசமான பாரம்பரிய உடையை உடுத்தி திருவிழா காலங்களில் எங்களின் நடனம் வெகு சிறப்பு வாய்ந்தது. உலகிலேயே எவ்வளவு நேரம் ஆடினாலும் சோர்வு வராத நடனம் எங்களுடைய நடனம் மட்டுமே.
எங்கள் படுக மக்களின் சில உன்னதமான கலாச்சார குறிப்புகள் கீழே காணலாம்.

1. எங்கள் பகுதிகளை (சீமை) நான்காகப் பிரித்து, ஒவ்வொரு சீமையிலும் சுமார் 100 முதல் 200 சிறு சிறு ஊர்களாய் வாழ்ந்து வரும் எங்கள் சமூகம் இதுவரை எந்த விஷயத்திற்க்காகவும் எங்களுக்குள் சண்டை போட்டதில்லை.

2. பெண் எடுத்து பெண் கொடுக்க ஒவ்வொரு சீமையிலும் குறிப்பிட்ட கட்டுபாடான ( மொறை) சம்பிரதாயங்களை( பின்பற்றி வருகிறோம். இதன் படி ஒரு ஊரில் இருக்கும் ஆண்மகன் தனக்கு முறையுள்ள 10 முதல் 15 ஊர்களில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய முடியும். மற்ற ஊர்களில் இருக்கும் அனைது பெண்களும் அக்கா தங்கை எனும் முறைப்படுவர்.

3. ஜாதகம் பார்ப்பதோ, வரதட்சனை கேட்கும் பழக்கமோ இல்லாத மக்கள். அதிகமான விவாகரத்துக்களும் நடக்காத சமூகம். ஏன் பிச்சை எடுப்பவர் இல்லாத சமூகம் என்பது தனிச்சிறப்பு.

4. முகம் தெரியாத மூன்றாவது ஆள் ஊருக்குள் வந்தால் அவர்களை அழைத்து விசாரித்து சரியான தகவலை தந்து தேனீர் கொடுத்து அனுப்பும் விருந்தோம்பல் பழக்கம் உலகச்சிறப்பு.

5. கல்யாணம்,குழந்தை பிறப்பு,விபத்து,மரணம் இந்த மாதிரி எந்த சுப துக்க காரியங்கள் நடந்தாலும் குடும்பத்துடன் வந்து மொய் குடுத்து உதவும் பழக்கம் இன்றும் உண்டு. பல நல்ல, கெட்ட காரியங்கள் கஷ்டப்படும் குடும்பங்களின் கடைசிநேர செலவுகளுக்கு இந்த பணம் உதவும் என்பதில் வேறு கருத்து இல்லை. முக்கியமாக மரண வீடுகளில் பெண்கள் அனைவரும் தலையோடு தலை சேர்த்து (மண்டை கொடோது) துக்கத்தை பகிர்ந்து இரவு முழுக்க உடலின் அருகில் ஊரே திரண்டு பஜனை பாடல்கள் பாடி மறுநாள் உடலை அடக்கம் செய்து ஆத்மாவை சாந்தி செய்வது வரவேற்க்கவேண்டிய கலாச்சாரம்.

6. 99 சதவீத பிரச்சனைகள் போலீஸ்டேஷனுக்கோ, நீதிமன்றத்திற்க்கோ செல்லாமல் ஊர் பஞ்சாயத்திலேயே சுமூகமாய் முடிந்துவிடுவது கட்டுபாடுகளின் உச்சம்.

7. சமீபத்தில் ஏற்ப்பட்ட நிலச்சரிவுகளில் பல ஊர்கள் பாதிக்கப்பட, இதைக்கண்டு தவித்த மக்கள் பல ஊர்களிலிருந்து லாரிகளில் வந்து பண உதவிகளையும் பொருளுதவிகளையும் தந்து துன்பத்தில் பங்கெடுத்தது எங்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி.

8. வயதில் பெரியவர்கள் யாரைப்பார்த்தாலும் ஆசீர்வாதம் (அரிசிவி) வாங்கும் பழக்கம் இன்னும் ஊர்களில் இருப்பது மகிழ்ச்சி. கல்யாண நிகழ்வுகளிலும் , சந்தோஷ காலங்களிலும் "ஓ அவ்கோ" எனும் ஒலியை ஒருசேர எழுப்பி கொண்டாடுவது அருமையோ அருமை.

9. குறுகிய சமூகமாய் இருந்தாலும் பல திறமை வாய்ந்த இளைஞர்கள் பலர் நாட்டில் உயர் உதவிகளிலும், விளையாட்டு மற்றும் கலை துறைகளிலும் சிறந்து விளங்குவதிலும் எங்களுக்கு சந்தோஷமே.

10. வருடம் ஒருமுறையாவது திருவிழாக்களில் மொத்த குடும்பமும் தாத்தா,பாட்டி,சித்தப்பா,அண்ணி,மாமா....என எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடி பாரம்பரிய அவரை குழம்பையும், துப்பதிட்டு எனும்( நெய் பலகாரம்) த்தையும் உண்டு மகிழ்வது கண்கொள்ளா காட்சி.ஆனால் இன்றைய சில குறைகள்...

1. பலகாலங்கள் இயற்க்கையுடனும், விவசாயத்தையும், தேயிலை தோட்டங்களையும் நம்பி வாழ்ந்த மக்கள் இன்று பணத்திற்க்காக தோட்டங்களை தாரைவார்த்து கொடுத்து எங்கள் சமூகம் பிழைக்க இன்னொரு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து செல்வதில் எங்களுக்கு வருத்தமே.

2. நீலகிரியின் பசுமைகளை காக்க தவறியதால் காட்டில் வாழ்ந்த குரங்குகளும், காட்டு எருமைகளும் ஊருக்குள் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. அதிலும் எங்கள் வீட்டு சமயல் அறைகளில் குரங்குகள் பசியை தீர்த்துக்கொள்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்த முறை ஊருக்கு சென்றபோது சிறுத்தை புலிகளால் ஊரில் ஒரு நாயை கூட காண முடியவில்லை. ஆங்காங்கே வைத்திருக்கும் செல்ஃபோன் டவர்களால் சிட்டுக்குருவிகளைக்கூட காணவில்லை.

3. சுற்றுலா தலங்கள் ஆகிவிட்ட ஊட்டியும் குன்னூரும் பணக்காரர்களின் ஆக்கிரமிப்புகளால் அழிந்து மலையரசி இன்று தன் அழகை இழந்து கூனிக்கிடக்கிறாள். ஆக்கிரமிப்புகளிலிருந்து மலையும் மக்களும் காக்கப்படவேண்டும். இயற்க்கையோடு ஒண்டி வாழ்ந்த மக்கள் இன்று கொஞ்சம் ஒதுங்கி இருப்பதும் கவலையே. "மாஸ்டர் பிளான்" திட்டத்தை வரைமுறைப்படுத்த்வேண்டும்.

4. நகரங்களில் மக்களின் மனசை மாற்றிய மதமாற்ற கும்பல் இப்போது நீலகிரியையும் மெதுவாய் அண்ட ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இதற்க்கெல்லாம் அசரப்போவதில்லை எங்கள் படகு சமூகம்.

5. கம்ப்யூட்டர் வேலைகளாலும், திடீர் வசதிகளாலும் இன்றைய படுக இளைஞர்களும், இளைஞ்சிகளும் பாதைமாறாமல் இருப்பது நலம். காக்கப்பட வேண்டிய கலாச்சாரங்கள் காக்கப்படவேண்டியது மிக அவசியம்.

6. பெற்றோர்கள் படுக குழந்தைகளுக்கு சமூகத்தின் தனித்துவத்தை சொல்லித்தர தவறி விட்டனர் மற்றும் பல பழமையான எங்களின் பாரம்பரிய நிகழ்வுகளும், விளையாட்டுகளும் குழந்தைகளுக்கு சொல்லித்தராமல் இருப்பது வருந்தத்தக்க விஷயம்.

7. குன்னூரிலும், தேனலை ஹட்டியிலும் திடீரென்று முளைத்திருக்கும் முதியோர் காப்பகம் என்னை அதிர்சிக்குள்ளாக்கியிருக்கிறது. வேண்டாமே நம் சமூகத்தில் இப்படி பட்ட அவலங்கள்.

8. பாரம்பரிய நம் உணவுகளை எரிகியிட்டு (கோதுமை களி), பத்த அக்கி போன்றவற்றை மறந்து வருவது கவலை தருகிறது..

எது எப்படியோ இந்தியாவில் கிட்டத்தட்ட பலனூறு மொழிகளும், பல ஆயிரம் இனங்களும் அழிந்து போயிருக்கின்றன. இன்னும் பல இனங்கள் அழியும் தருவாயில் தவித்துக்கொண்டிருக்கின்றன. அந்த இடத்தில் நம் படகு மொழியும், மக்களும் இருந்துவிடக்கூடாது என்பது என் எண்ணம்.

விடுபட்ட நிகழ்வுகளை சொல்லுங்கள்.....நிஜங்களாய் இருப்பின் நிறைய பகிர்வோம். நம் கலாச்சாரத்தை காப்போம்.


நன்றி,


www.bluehillsbook.blogspot.comWednesday, March 14, 2012

இலங்கை தமிழ் மக்களும் தமிழ்நாட்டு மாநில கட்சிகளின் குள்ளநரித்தனமும்! - அலசல் கட்டுரை.


இலங்கை தமிழ் மக்களும் தமிழ்நாட்டு மாநில கட்சிகளின் குள்ளநரித்தனமும்! - அலசல் கட்டுரை.

இந்த கட்டுரை எழுத முகநூலே (Face Book) காரணம் (கடந்த இரண்டு வாரங்களாக இலங்கை உள்நாட்டு போரின் கொடூரமான பல படங்கள் என்னை மாதிரி இளகிய மனம் கொண்ட பலரை தூங்கவிடவில்லை).

இரண்டு நாட்களாய் அதிசயம்....அண்ணா திமுக, திமுக, காங்கிரஸ், பாரதீய ஜனதா, கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த பிற கட்சிகளின் கடைசி நேர ஒற்றுமை இந்தியாவை ஆச்சர்ய படவைத்துள்ளது.

காரணம் ஒன்றுமில்லை....ரொம்ப சிம்பிள்.....

சங்கரன் கோயில் இடைத்தேர்தலில் இவர்கள் இலங்கை தமிழர் பிரச்சனையை முன் வைத்து பச்சோந்தி அரசியல் நடத்துவதுதான் காரணம்.
இப்போது கூப்பாடு போடும் இவர்கள் கடந்த மூன்று ஆண்டுளாக எங்கே போனார்கள்?

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்க வற்புறுத்தும் இந்த மதிகெட்ட தமிழ் மந்திரிகள்  ஏன் முன்னதாகவே இந்தியா சார்பில் இந்த தீர்மானத்தை கொண்டுவர வற்புறுத்தி இருக்கலாமே!

அமெரிக்கா, ஜெனீவாவுக்கு தெரிந்த இலங்கை தமிழரின் அவலங்கள் பக்கத்து நாடான நமக்கு தெரியாமல் போனது எப்படி....அல்லது தெரிந்தும் தெரியாமல் இருந்தது எப்படி?

பல வருடங்களாக இந்திய கடல் எல்லையில் தமிழ் மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை கண்டிக்க முடியாத இந்த தமிழ்நாட்டு அமைச்சர்கள் இலங்கையின் உள்நாட்டு பிரச்சனையில் ரொம்பவும் ஆர்வம் உள்ள்வர்கள் போல் நடிக்கிறார்கள். தைரியம் இருந்தால் முதலில் நம்ம ஊர் மீனவர்களுக்கு தீர்வை தந்துவிட்டு அப்புறம் இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கட்டும்.

இந்திய மத்திய அரசும் கஷ்மீரிலும், மணிப்பூரிலும் ஆயிரம் பிரச்சனைகளை வைத்துக்கொண்டு இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்காது என்பதை இந்த அப்பாவி மக்களுக்கு தெரிவிப்பது யார்?

சங்கரன்கோயில் இடைதேர்தல் மட்டும் இல்லையென்றால் "இலங்கையா? அங்கு என்ன பிரச்சனை?" என்று நம்ம ஊர் மந்திரிகள் சமோசா சாப்பிட்டுக்கொண்டே கேட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.


அமெரிக்கா ஏன் இந்த பிரச்சனையை ஊதி பெரிதாக்குகிறது என்பது பல பேருக்கு புரியாமல் இருக்கலாம். அமைதியான தெளிந்த குட்டையை அமெரிக்கா எப்போதாவது விரும்பி யிருக்கிறதா?

குட்டையை கலக்கி குழப்ப வேண்டும் அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு கொடுத்தது போல் நாளை இலங்கைக்கும் சீனா ஆதரவு கொடுத்துவிட்டால் தெற்க்கு ஆசியாவில் அமெரிக்காவின் ஓங்கும் கரம் வெட்டப்படும் என்பதால்...இன்னும் தெளிவாக சொன்னால்...வடிவேலு சொல்வதைப்போல் " நான் ரௌடி...நான் ரௌடி" என்று அவ்வப்போது ஏதாவது செய்தாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது அமெரிக்கா. இலங்கையை பயமுறுத்தி அங்கே ஒரு ரேடாரை நிறுவி, தெற்க்கு ஆசியாவில் அவ்வப்போது சர்க்கஸ் காட்டவேண்டும் என்பது அதன் எண்ணம். இலங்கை மட்டும் அமெரிக்காவின் கைக்கூலியானால் இந்தியாவின் கதி அதோகதிதான். மூன்று பக்க கடலால் பாதுகப்பில்லாமல் இருக்கும் இந்தியா இன்னும் பல ஆயிறம் கோடிகளை பாதுகாப்புக்கு ஒதுக்க வேண்டி வரும் (அதனால் இலங்கை இந்தியாவிடமும், இந்தியா இலங்கையிடமும் நட்பாய் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்).

அப்படி அமெரிக்கா நினைக்கும் நிலை வந்தால் இந்தியாவுக்கும் பிரச்சனைதான். மேலே சீனா, பாகிஸ்தான்...கீழே அமெரிக்கா...அப்புறம் இந்தியாவின் வல்லரசு கனவுக்கு ஆப்புதான்.

கூடவே இந்தியா ஒன்றும் அமெரிக்கா அல்ல....பாகிஸ்தானில் நுழைந்தது போல் இந்தியா இலங்கையில் நுழைய முடியுமா? எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டின் உள்நாட்டு பிரச்சனையில் ஓரளவிற்க்குதான் தலையிட முடியும் என்பதை மன்மோகன் நன்றாகவே அறிவார். காங்கிரஸ் பெருசுகளும் இதை உணறுவர்.

பிறகு என்னதான் தீர்வு? இலங்கை தமிழ் மக்களுக்கு வாழ்வாதாரத்தை எப்படி தறுவது?

பதில் இல்லமல் இல்லை ஆனால் யோசித்து செயல்படவேண்டிய தருணம் இது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்கிற காரியம் அல்ல இது.

அதனால் இந்த தமிழ் நாட்டு மக்களுக்கு இந்த கட்டுரையின் மூலம் தெரிவிப்பது என்னவெனில் முதலில் இந்த பச்சோந்தி அரசியல் செய்யும் கட்சிகளை நம்பாதீர்கள். சங்கரன் கோயில் தேர்தல் வரைதான் இந்த தலைவர்கள் கூப்பாடு போடுவார்கள் என்பது நிஜம்.ஒன்றை மட்டும் செய்யலாம் இந்த மத்திய அரசு. அவை...

1. தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை தமிழ் மக்களுக்கு திருப்பி அளிக்க வற்புறுத்தலாம்.

2. கண்காணிப்பு அமைப்பை ஏற்ப்படுத்தி அவ்வப்போது இலங்கையை கவனிக்கலாம்.

3. ஜெனீவா தீர்மானத்தில் நடுநிலை வகிக்கலாம், இதனால் அமெரிக்காவையும், இலங்கையையும் ஐஸ் வைத்து குளிர்விக்கலாம்.

4. சிறுபான்மை இனத்தவரும், பிழைக்க சென்றவர்களும் உலக நாடுகளில் பலதரப்பட்ட இன்னல்களை சந்திப்பது இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதற்க்கு இலங்கை மட்டும் விதிவிலக்கா என்ன?

5. விடுதலைப்புலிகளை வளர்த்து ஆளாக்கி பின்னர் அதனை அழித்து, இருந்த சுவடே இல்லாமல் ஆக்கியதற்க்கு அமெரிக்காவும் ஒரு முக்கிய காரணம் என்பதை வரலாறு சொல்லும். குழந்தையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் அம்மா...இந்த அமெரிக்க அம்மா!

6. இனப்படுகொலைகளுக்கும், உள்நாட்டு கலவரங்களுக்கும் தூபம் போட்டு அதில் குளிர்காய்ந்தவர்கள் அவர்களின் சுயநலத்திற்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதனை ஆதரிப்பதும் தவறுதான்.

அப்படியானால் நீங்கள் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரானவரா என்று கேட்பது புரிகிறது.

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய தமிழ் மண்ணில்" பிறந்த நான்....மேற்க்கண்ட கட்டுரையில் இந்தியாவின் நிலை எப்படி இருக்கவேண்டும் என்பதை மட்டும் சொல்லி இருக்கிறேன். இலங்கையின் கடைசி நேர கொடுமைகளை காணும்போதெல்லாம் கண்ணீர் விடுகிறேன்.

கடைசியாக இந்த ஜெனீவா தீர்மானத்திற்க்கு பிறகாவது இலங்கை தமிழ் மக்களுக்கு அமைதி கிடைக்கட்டும். இறந்தவர்கள் ஆத்மா சாந்தி பெறட்டும். கூடவே அரசுகளுக்கு எதிரான ஆயுதபோராட்டம் என்றும் அமைதியை தந்ததில்லை இனி தரப்போவதும் இல்லை.Friday, March 9, 2012

"அய்யாசாமியின் அருள்வாக்கும் ஆறுநாள் பொருள் சேர்ப்பும்" - நிஜக்கட்டுரை

"அய்யாசாமியின் அருள்வாக்கும் ஆறுநாள் பொருள் சேர்ப்பும்" - நிஜக்கட்டுரை.

ரெண்டு மாசமாக டைம் சரியில்லை என்பதால் என் நண்பர் (அட...நம்புங்க சார்!) பக்கத்தில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்றார்.

உள்ளே போய்விட்டு வந்தவர் அடுத்தமுறை என்னையும் வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். ஒன்றுமே புரியாமல் கூடவே சென்றேன். நண்பர் என்னை அழைத்த காரணம் இப்போதுதான் புரிந்தது.

இருட்டாய் இருந்த அறை....ஆங்காங்கே மஞ்சளும், குங்குமும் கொட்டிக்கிடந்தன. எலுமிச்சை பழங்கள் சிதறி இருந்தன.
0 வாட் பல்புக்கு கீழே சுமார் 20 முதல் 30 சாமி போட்டோக்கள். சாமிகளுக்கு அடியில் சிவந்த கண்களுடன் நம்ம ஆ"சாமி".

கூட இருந்த அஸிஸ்டண்ட் எங்களை அழைத்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சாமி அருள்வாக்கு சொல்லுவார், சனிக்கிழமை காலை வந்து டோக்கன் வாங்கிடுங்க என்றார்.

டோக்கனுக்கு எவ்ளோ ஆகும்? என கேட்ட என்னை நக்கலாக பார்த்துவிட்டு அது "ஃப்ரீ" என்றார்.

இந்த காலத்தில் அப்படியும் ஒரு சாமியாரா? பணமே எதிர்ப்பார்க்காத ரொம்ப நல்லவர் என நினைத்துக்கொண்டேன்.

சரியாய் சனிக்கிழமை ஆஜராகி ஃப்ரீ டோக்கனும் வாங்கிவிட்டோம். நண்பர் சனிக்கிழமை இரவு தூங்காமல் சாமியாரிடம் தன் கஷ்டங்களை சொல்ல நோட்ஸ் எடுக்கத்தொடங்கினார்.பின்னர் மனப்பாடமும் செய்யத்தொடங்கினார்(ஏதும் மறக்காமல் இருக்கணும் இல்லே).

எப்பவுமே லீவு நாளில் குளிக்காத நண்பர் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே பயபக்தியுடன் குளித்து பட்டை நாமம் போட்டு ரெடியானார். லீவுநாள் மத்தியானத்துக்கு மசாலாவாகும் கோழி தப்பித்தது.
ஐந்து மணிக்கெல்லாம் ரெடியாகி பைக்கில் கோயிலுக்கு போனோம். ஒரு ஈ, காக்கா கூட காணவில்லை. கோயிலும் பூட்டியிருந்தது. நேரம் ஆக ஆக ஒவ்வொருத்தராய் வர ஆரம்பித்தார்கள். கோயில் திறந்தவுடன் முன்னாடி போய் உட்கார்ந்துக்கொண்டோம்.

ஆறு மணிக்கு சாமியார் வந்தார். பூஜையை ஆரம்பித்தார். கருவறையில் பூஜையை முடித்துவிட்டு தன் இருக்கையில் உட்கார்ந்தார். கூடவே வந்த அசிஸ்டெண்ட் வாங்க டோக்கன் நெம்பர் 1 என்று சத்தம் போட்டார்.

எங்களின் டோக்கன் நம்பர் 7 என்பதால் என்ன நடக்கிறது என்பதை பார்த்தோம். ஆனால் கையில் கேரி பேக்கை வைத்திருந்தார்கள். பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டபோது என்னப்பா இது...ஒண்ணும் வாங்கலையா? என்றார்.
நண்பர் ஓடிப்போய் அசிஸ்டெண்ட்டிடம் கேட்டபோது ஒரு லிஸ்ட்டை கொடுத்தார்.

ஓம் அம்மன் துணை!

எலுமிச்சை பழம் 2
வெத்தலை பாக்கு
பெரிய ஊதவத்தி 2
கற்பூரம் இரண்டு கட்டு
பூ மாலை
வாழை பழம் 2
தட்ஷனை 50 ரூ

என்று இருந்தது.

நானும் நண்பரும் வெளியே வந்தவுடன் கோயில் வாசலில் பூஜை சாமானாப்பா? என்றாள். தலையை ஆட்டிவிட்டு பொருட்களை வாங்கினோம். மொத்த பில் 88 ரூ. பூ மட்டும் இரண்டு முழம் 30 ரூவாவாம்!

ஏழாவது டோக்கன் வர நண்பர் கொஞ்சம் பக்தி கலந்த பயத்துடன் சாமியாரிடம் போய் உட்கார்ந்தான். பூ,பழங்களை வாங்கிய சாமி தட்ஷனை எங்கே தம்பீ என்றார்.

கையில் 100 ரூபாயை கொடுத்தவுடன்....சொல்லு என்ன பிரச்சனை?

நண்பர் கஷ்டங்களை சொல்ல...நாலு மாசமா வேலையில்லை சாமீ, குடும்பத்திலே பிரச்சனை சாமீ, பணக்கஷ்டம் சாமீ...

தம்பீ ஒவ்வொண்ணா சொல்லுங்க....

சரி தம்பி என்று சொல்லி எலுமிச்சைபழத்தில் கற்பூரம் ஏற்றி நண்பருக்கு இடமிருந்த வலம் மூன்று சுத்து சுத்திவிட்டு. குங்குமத்தை நெற்றியில் அப்பிவிட்டு சின்ன சாமிகிட்டே கேளுங்கே மீதியை சொல்லுவாறு என் சொல்லி அடுத்த ஆளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.

அஸிஸ்டண்ட்டிடம் போய் நின்றோம். அடுத்து ஒரு சின்ன சீட்டை கொடுத்தார்.

அதில்...

ஓம் அம்மன் துணை!

100 கி இலுப்பை எண்னை
100 கி வேப்ப்பெண்ணை
100 கி கடலெண்ணை
100 கி நல்ல்லெண்ணை
100 கி தேங்காய் எண்ணை

எலுமிச்சை பழம் 2
வெத்தலை பாக்கு
பெரிய ஊதவத்தி 2
கற்பூரம் இ கட்டு
பூ மாலை
வாழை பழம் 2
தட்ஷனை 100 ரூ

என்று இருந்தது. வரும் செவ்வாய் கிழமை காலையில் திரும்பவும் வருமாறு சொன்னார்.தலையை சொறிந்துகொண்டு வீட்டுக்கு வந்தோம்.

அடுத்த முறை எனக்கு நண்பனுடம் செல்ல விருப்பமில்லாததால் நான் செல்லவில்லை. ஐந்து நாட்களை கழித்து நண்பனை எதேச்சையாக சந்தித்தேன்.

என்னப்பா...கோயிலில் சோலி எல்லாம் முடிந்ததா, பிரச்சனை தீர்ந்ததா என கேட்டேன்.

அவனும் இரண்டு பக்கமும் தலை ஆட்டினான். அதை முடிந்ததாக எடுப்பதா இல்லை முடியவில்லை என எடுப்பதா தெரியவில்லை. பின்னர் கொஞ்சம் புலம்பினான்...

கடைசியில் ஒன்று மட்டும் எனக்கு புரிந்தது.

அவரிடம் வரும் பக்தர்களை வாரம் மூன்று முறை வரச்சொல்வார்கள்.

முதல் முறை செல்லும்போது கிட்டத்தட்ட 150 ரூபாய் செலவு (தட்சனை சேர்த்து),
இரண்டாவது  முறை செல்லும்போது கிட்டத்தட்ட 350 ரூபாய் செலவு (தட்சனை சேர்த்து),
மூன்றாவது முறை செல்லும்போது கிட்டத்தட்ட 250 ரூபாய் செலவு (தட்சனை சேர்த்து)!

மனப்பிரச்சனை,பணப்பிரச்சனை, உடம்பில் வலி, நோய் மற்றும் எல்லா வித பிரச்சனைகளுக்கும் ஒரே மாதிரியான டிரீட்மெண்ட் தான். ஒரு எலுமிச்சை பழம், சூடம் ஏற்றி தலையில் வைத்து கோயிலை சுற்ற வேண்டும்.

ஒரு ஆளுக்கு வாரத்தில் மூன்று முறை ஆன செலவு 750 ரூபாய். அப்படியானால் சுமார் 25 பேருக்கு மாதத்தில் ஆகும் செலவு 18750 ரூபாய். அப்படியானால் ஒரு மாதத்திற்க்கு அருள்வாக்கு அய்யாசாமியின் வருமானம் 75000 ரூபாய்.

இவையெல்லாம் போக பக்தர்கள் கொடுக்கும் பழங்கள், கற்பூரம், எண்னை மற்றும் அகர் பத்திகளை திருப்பி கடைகளுக்கு விற்ப்பதால் வரும் வருமானம் சுமார் 10 ஆயிரம் ரூபாய். பூஜை தட்டில் விழும் பணத்தை சேர்த்தால் அது தனி....கூடவே கோயிலில் மாதா மாதா சம்பளம் வேறு ...அப்பப்பா இப்பவே கண்ணை கட்டுதே!

இதில் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு லீவாம், எத்தனை பணம் கொடுத்தாலும் அவரை பார்க்கமுடியாது என்பது முக்கியமான தகவல்.

இந்த அருள்வாக்கு அய்யாசாமி சென்னை ஐடி கம்பெனி மானேஜர்களை விட அதிகம் சம்பாதிக்கிறார் என்பது மட்டும் நிஜம். ஐ கிளாஸ் முதல் லோ கிளாஸ் வரை பலவித கஸ்டமர்கள் இவருக்கு உண்டு. கையில் டச் ஸ்கிரீன் மொபைலை தட்டிக்கொண்டு காரில் பிசியாக சுத்துகிறார்.

நம்பி போகிறவர்களுக்கு பிரச்சனைகள் தீர்ந்தால் நல்லது. இல்லை என்றால் அருள்வாக்கு அய்யாசாமியை சொல்லி தவறில்லை. மூட நம்பிக்கை மனிதர்களைத்தான் திருத்த வேண்டும். 

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - மறுபடியும் தொடங்கும் ஒரு கார்பொரேட் கொள்ளை அலசல்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -  மறுபடியும் தொடங்கும் ஒரு கார்பொரேட் கொள்ளை அலசல்.
போன மாதம் வரை sms களில் சுமார் 50 கோடிக்கு மேல் சம்பாதித்த அம்பானியும், விஜய் டிவியும் மறுபடியும் sms போட்டியை அறிவித்திருக்கிறார்கள்.

இதனால் எனக்கு எழும் சில சந்தேகங்கள்....

1. கிட்டதட்ட 5 கோடிக்கு மேல் sms வந்ததாக சொல்லும் சேனல் அதிலிருந்தே போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க ஏன் முன்வரவில்லை?

2. மறுபடியும் sms போட்டி மூலம் இன்னும் எத்தனை கோடிகள் கொள்ளையடிக்கத் திட்டம்?

3. இதுவரை சுமார் 20 பேர் தான் போட்டியில் பங்குபெற்றுள்ளார்கள். புதிதாய் sms போட்டியை அறிவிப்பதை விட முன்னர் sms அனுப்பியவர்களுக்கு என்ன பதில் சொல்லபோகிறது?

4. இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு அரசு என்ன நிலையில் ஆதரவு தருகிறது, இந்த திருட்டுத்தனங்களை கவனிக்க ஏதேனும் வரைமுறை உண்டா அல்லது கண்காணிப்பு அமைப்புகள் உண்டா?

5. இதை எதிர்த்து சாதாரண மக்களால் ஏதாவது செய்ய இயலுமா? சட்டம் உண்டா?

6. இதற்கெல்லாம் ஒரே தீர்வு இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை மக்கள் ஒதுக்க வேண்டும். TRP ரேட்டிங்கில் இதை கடைசி இடத்திற்க்கு கொண்டுவரவேண்டும் ( இப்போதே சூர்யாவின் இந்த நிகழ்ச்சி TRPயில் பின் தங்கி யிருப்பதாக கேள்வி!).

7. கோடிகணக்கான மக்கள் இந்த சேனல் சொன்னதை நம்பி சுமார் பல நூறு ரூபாய்கள் வரை sms அனுப்பி தங்களுக்கு தகவல் வரும் கோடிகளை அள்ளலாம் என்று காத்திருக்கும் இந்த அப்பாவிகளுக்கு என்ன சொல்ல போகிறார்கள்?

கடைசியாக.....

அட போப்பா.....மறுபடியும் sms  அனுப்பி நானும் இந்த போட்டிகளில் கலந்து வெல்லுவேன் என்று சொல்லும் சில பேருக்கு நான் சொல்ல ஒன்றுமே இல்லை. இதை ஏற்ப்பதும் ஒதுக்குவதும் தனி மனிதனின் இஷ்டம். அதில் குறுக்கிட எனக்கு உரிமை இல்லை. நீங்கள் கோடிகளை வென்றால் எனக்கு சந்தோஷமே!

ஆனாலும் தவறுகள் நடக்கும் போது என்னால் சும்மா பார்த்துகொண்டிருக்க முடியவில்லை என்பதால் எனக்கு தெரிந்ததை எழுதி இருக்கிறேன்.

Tuesday, March 6, 2012

புகைப்படம்!

புகைப்படம்!சின்ன வயதுகளில்
என்னை யாரும்
புகைப்படங்கள் எடுத்ததில்லை,

பல வீடுகளில்
கருப்பு வெள்ளை
படங்களை பார்த்தால்
ஏக்கம் வாட்டுகிறது இன்னும்.

அம்மா அப்பாவை
சமயம் கிடைக்கும்போதெல்லாம்
"ஏன் புகைப்படம் எடுக்கவில்லை?"யென்று
சண்டை போட்டதுண்டு
கோபித்துக்கொண்டதுண்டு.

என் செல்ல மகனை
டிஜிடல் கேமராவில்
தினமும் விதவிதமாய்
புகைப்படங்களை எடுத்து என்
ஆசைகளை தீர்த்துக்கொள்கிறேன்
சுவரில் மாட்டி ரசித்து மகிழ்கிறேன்.

இந்த முறை
ஊருக்கு சென்றபோது
அவரின் பழைய கேமராவில்
என் புகைப்படத்தை அப்பா காட்டினார்...
"அப்பா இது நான் இல்லை, என் மகன்" என்றேன்
சிரித்துக்கொண்டே அப்பா சொன்னார்...
"சின்ன வயசில் நீ இப்படித்தான் இருந்தாய்" என்று!