Sunday, February 26, 2012

தமிழ்நாட்டு மின்சாரமும் தலைவலிக்கும் பின்சோகமும்.தமிழ்நாட்டு  மின்சாரமும் தலைவலிக்கும் பின்சோகமும்.

இந்தக் கட்டுரை எழுதும்போது மூன்றுமுறை மின்சாரம் கட் ஆனது. ஆனாலும் எப்படியாவது எழுத வேண்டும் என முடிவெடுத்தேன்.

என்ன தலைபோற பிரச்சனை என்கிறீர்களா?

மின்சாரமும் சம்சாரமும் ஒன்றுதான், அடிக்கடி கோபித்துகொண்டு ஓடிவிடுகிறார்கள். சம்சார பிரச்சனை பேசினால் தீரும். இந்த மின்சார பிரச்சனை லேசில் தீராது.

ஆழ்ந்து யோசித்தால் மின்சாரம் இப்போதைக்கு ஒரு பிரச்சனையே அல்ல(என்ன ஷாக் ஆய்ட்டீங்களா?)
அமாம் உண்மைதான்.

இஸ்திரி கரிப்பெட்டிகள் ஆயர்ன் பாக்ஸ் ஆனது, மண் சட்டிகள் எலக்ட்ரிக் ரைஸ் குக்கரானது, வெள்ளாவி துணிகள் வாஷிங் மெஷினானது,தென்றல் பாய்ந்த படுக்கை அறைகள் ஏசி குளிர்பாய்ந்தது...இப்போது குத்துதே குடையுதேன்னா எப்படி?

தொடர்ந்து படியுங்கள் ஷாக் அடிக்கும் பல விஷயங்களை சொல்கிறேன்.

கடந்த மூன்று, நான்கு  வருடங்களாக மட்டும் ஏன் இந்த மின்சார பிரச்சனை.

புரியும்படி சொல்கிறேன்....தமிழ்நாட்டுக்கு 100 யூனிட் மின்சாரம் வேண்டும் என வைத்துக்கொள்ளுங்கள்.

சுமார் 45 சதவீதம் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிறது, 25 சதவீதம் மத்திய அரசு தருகிறது, 20 சதவீதம் வெளி மார்க்கெட்டிலிருந்து வாங்கப்படுகிறது. 10 சதவீதம் பற்றாக்குறை நிலவுவதாக சொல்லப்படுகிறது.

ஏன் இந்த பற்றாக்குறை.

1. பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் இலவச மற்றும் குறைந்த கட்டண மின்சாரம்.

2. திரை அரங்குகள், மல்டிஃபிளக்ஸ் அரங்குகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில் வீணாக்கப்படும் மின்சாரம்.

3. விவசாயத்திற்க்காக இலவசமாய் கொடுக்கப்படும் மின்சாரத்தை வீணடிப்பதால் வரும் இழப்பு.

4. பெரிய பெரிய தொழிற்சாலைகளாலும், கிராமத்து மின் கம்பிகளிலும், சிறுதொழில் நிறுவனக்களாலும் திருடப்படுவதால் இழக்கும் மின்சாரம்.

5. மின் தயாரிப்பில் புதுமைக்கு மாறாத பழைய இயந்திரங்களால் ஏற்ப்படும் இழப்பு.எப்படி தடுப்பது இழப்பை?

1. சரியான சட்டத்தின் மூலம் தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும்.

2. மின் திருட்டை தடுக்க பறக்கும் படை உருவாக்கப்படவேண்டும்.(இப்போது பெருநகரங்களில் மட்டுமே பறக்கும் படை உள்ளது).

3. பழுதாகிப்போன ட்ரான்ஸ்பார்மர்கள், எரியாத தெரு விளக்குகள், பழயதை நீக்கி புதிய ரக இயந்திரங்களை மாற்றவேண்டும்.

4. மின்சாரத்துக்கு பதிலாக மாற்று வழி ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் அவசியம். தெருவிளக்குக்கள், கோயில்கள், பொது இடங்களில் சூரிய ஒளி மின்சாரத்தை கட்டாயமாக்கவேண்டும்.

5. இயற்கை மூலம் மின்சாரம் தயாரித்தல்  அதிகப்படுத்த வேண்டும். சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரத்துக்கு மானியம் கொடுத்து ஊக்கப்படுத்துதல் அவசியம்.

6. மரங்களை அதிகம் வளர்த்து காற்றோட்டமான வீடுகள் கட்டுவதால் மத்தியான நேரத்து மின்சாரத்தை குறைக்கலாம்.

7. அதிகமான பணத்தை கொடுத்து வெளி சந்தையில் மின்சாரத்தை வாங்குவதை தடுக்க வேண்டும்.

அம்பானி புதிதாய் கட்டிய வீடுக்கு இரண்டு மாதத்தில் சுமார் 7 லட்சம் ரூபாய்க்கு மின்சார பில் கட்டினாராம். அதனால் அவருக்கு 50,000/- ரூபாய் தள்ளுபடி கொடுத்தார்கள் என்று பேப்பரில் படித்ததாய் ஞாபகம். பணம் இருப்பவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் மின்சாரம் அளிக்கலாம் என்கிற நிலை மாறி அளவு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

ஆயிரம் கோடிகளுக்கு மேல் பணத்தை கொட்டி கூடங்குளத்தில் மின்சாரம் தயாரிக்க முடியவில்லை. அணு உலை ஆபத்து என்றும், அணு உலை செயல்படவில்லை எனில் தமிழகம் இருளில் மூழ்கும் என இன்னொரு கூட்டமும் புலம்பிக்கொண்டிருக்கின்றன. (உண்மையை சொன்னால் கூடங்குளத்தில் கிடைக்கும் கொஞ்சம் மின்சாரத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என்பது உண்மை நிலை. இப்படி அடிக்கடி மின்சாரத்தை "ஆஃப்" செய்தால் ...கூடங்குள போராட்டம் "ஆஃப்" ஆகும் என்பது அரசின் புது கணக்கு என்பது எத்தனை பேருக்கு தெரியும்!).

மின்சாரத்தை திருடும் மக்கள் திருந்த வேண்டும். வீட்டு உபயோகத்துக்கான மின்சாரத்தை கடைகளுக்கும், பிரவுசிங் செண்டருக்கும், விவசாய மோட்டாருக்கும், சிறு கம்பெனிகளுக்கும் உபயோகப்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

ஆளில்லாத வீடுகள், செயல்படாத நிறுவனங்களின் மின் இணைப்புகளை உடனே துண்டிக்க வேண்டும்.

போன ஆட்சியையும், வீணாய் போன அரசியலையும் குற்றம் சொல்வதில் பயனில்லை. படிக்கும் பிள்ளைகள், சிறு தொழிற்சாலைகள், விவசாயிகள் எல்லோரும் இதனல் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடிகளில் நஷ்டத்தை சந்திக்கும் மின்சார வாரியம் திவாலாகாமல் இருந்தால் சரி.

இலவசமாய் கிடைக்கும் லேப்டாப்புக்கும், கிரைண்டர் மிக்சிக்கும் அலையும் மக்களே...அதை பயன்படுத்த மின்சாரத்தை யார் தருவார்?

இதனால் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்தி.....சாரி மின்சாரம் போய்விட்டதால் தொடர்ந்து எழுத முடியவில்லை....மன்னிக்....No comments:

Post a Comment