Thursday, February 23, 2012

என்கவுன்ட்டர் எனும் சுலப வேலை!


என்கவுன்ட்டர் எனும் சுலப வேலை!

நேற்று காலையில் கிடைத்த அதிர்ச்சி, வங்கி கொள்ளையில் ஈடுபட்ட வடநாட்டை சேர்ந்த 5 வாலிபர்கள் சுடப்பட்டனர் என்று.

எனக்குள் எழும் ஆயிரம் கேள்விகள்.

முதலில் என்கவுன்ட்டர் என்றால் என்ன? எப்படிபட்ட தருணங்களில் என் கவுன்ட்டர்கள் நடத்தப்பட வேண்டும்.தமிழ்நாட்டில் குறுகிய காலங்களில் நடைபெறும் பல என் கவுன்ட்டர்கள். ஏன் இந்த அவசர கொலைகள்? உண்மையிலேயே வேறு வழியில்லாமல் இந்த கொலைகள் நடைபெறுகின்றனவா? அல்லது வேண்டுமென்றே கொல்லப்படுகிறார்களா?

ஆராயப்பட வேண்டிய விஷயம்.

எப்போது என்கவுன்ட்டர்கள் நிகழ்த்தப்பட வேண்டும்?

1. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பொது மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்ப்படும் போது நிகழ்த்தலாம்.

2. அரசாங்கத்துக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுபவர்கள், சற்றே எல்லை மீரும்போது என் கவுன்ட்டர் நிகழ்த்தலாம்.

3. மிகப்பெரிய தீவிரவாதிகள்/குற்றவாளிகள் காவல்துறையை எதிர்த்தோ, ராணுவத்தை எதிர்த்தோ தாக்குதல் நிகழ்த்தும்போது என் கவுன்ட்டர் நிகழலாம்.


 ஆனால் என் கவுன்ட்டர் என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வேறு வழியில்லை என்கிற கடைசி தருணத்தில் சரியான காரணத்தை நீதி துறையின் அனுமதிப்பெற்று நிகழ்த்தப்பட வேண்டும்.

என் கவுன்ட்டர் நிகழ்த்துவதற்க்கு இதுமாதிரி பல சட்ட சிக்கல்களை தாண்டி மனித உரிமையை காக்கப்பட வேண்டிய உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்.

இந்த உலகத்தில் யாருடைய உயிரையும் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை( நம் உயிரை எடுக்க நமக்கே உரிமையில்லை). ஏன் உச்ச நீதிமன்ற நீதிபதிக்குக்கூட நிறைய கட்டுபாடுகள் உண்டு.

மரண தண்டனையை பல நாடுகள் மறந்துவிட்ட இந்த நேரத்தில் நம்ம பாரத பூமியில் இப்படிப்பட்ட இரக்கமற்ற நிகழ்வுகள் நிகழ்வது சரியா?

76000 ஆயிரம் கோடிகளை ஏப்பம் விட்டவர்கள், பத்து பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்தவர்கள், பல பெண்களை கற்பழித்தவர்கள் மற்றும் நாட்டை காட்டிக்கொடுத்தவர்கள் என பலரும் சுதந்திரமாய் சுற்றிவரும்போது வெறும் சில லட்சங்கள் பறிபோனதற்க்காக இப்படி 5 உயிர்கள் அநியாமாக கொல்லப்பட வேண்டுமா?

கொள்ளையடித்தவர்களை உயிரோடு பிடித்தால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 95% வரை கைப்பற்றலாமே!

கொள்ளையடித்தவர்களை உயிரோடு பிடித்தால் கொள்ளைக்கான காரணங்களை ஆராய வாய்ப்பு கிடைக்குமே!

கொள்ளையடித்தவர்களை உயிரோடு பிடித்தால் அவர்கள் முன்னால் ஈடுப்பட்ட கொள்ளைகள் கூட துப்பு துலங்குமே!

கொள்ளையடித்தவர்களை உயிரோடு பிடித்து சரியான தண்டனை கொடுப்பதின் மூலம் அவர்களும் வாழ்க்கையில் திருந்த ஒரு வாய்ப்பு கிடைக்கும் அல்லவா?5 பேரை கொலை செய்த பின்னரும் மற்ற நால்வர் பற்றி காவல் துறை அதிகாரிகளுக்கே தெரியவில்லை.நால்வரில் ஒருவராவது இந்த குற்றங்களில் ஈடுபடவில்லை என்றால் அவரின் குடும்பத்திற்க்கு காவல் துறை என்ன பதில் சொல்ல போகிறது?

கொள்ளையடிக்கப்பட்ட வங்கிகள் மட்டும் ஒழுங்கா என்ன?

10 ஆயிரம் லோன் வாங்கியவர்களை பாவம் பார்க்காமல் பத்திரிக்கைகளில் போட்டோக்கள் போட்டு மனங்களை மிதித்தவர்கள்.

நடிகர்கர்களுக்கு விளம்பரத்திற்க்காக கோடிகளை கொட்டும் இவர்கள் பல ஆயிறங்கள் செலவில் பாதுகாப்பை செய்ய ஏன் தவறினார்கள்?

சர்வீஸ் முடித்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஏன் பாதுகாப்பு பணியும் நியாயமான சம்பளமும் கொடுக்க மறந்தார்கள்?

கந்து வட்டிகளை விட கேவலமான வட்டிக்கு விடும் வங்கிகள், வசூல் செய்ய குண்டர்களை வைக்க தெறிந்த வங்கிகள்    பாதுகாபுக்கு தேவையான ஒன்றையுமே செய்ய மறந்தது ஏன்?

இதற்க்காக கொள்ளையடித்தவர்கள் நல்லவர்கள் என்று நான் சொல்லவில்லை. மக்களின் பணத்திற்க்கு பாதுகாப்பு கொடுக்காத வங்கிகளும், கொள்ளையடிக்க தூண்டிய சமூகத்தையும் யார் தண்டிப்பது?

இரண்டு வங்கிகளிலும் கொள்ளையடித்த போது பொம்மை துப்பாக்கிகள் வைத்திருந்ததாக பார்த்தவர்கள் சொன்னார்கள்.
ஆனால் காவல்துறை கொள்ளையர்கள் தங்களை துப்பாக்கியால் சுட்டதாக சொன்னார்கள்.

அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் இந்த என் கவுண்ட்டர் நடை பெற்றது இரவு 10.30 மணிக்கு என்கிறார்கள். ஆனால் காவல் துறையோ அதிகாலை 1.30 மணிக்கு நடந்ததாக கூறுகிறார்கள்.

சிறிய சந்துக்குள் உள்ள வீட்டிலிருந்த்து கொள்ளையர்கள் தப்பிக்க வழியேயில்லை என்கிற போது காவல்துறை சற்று நிதானமாக சிந்தித்து செயல் பட்டிருக்கலாம். உயிர்களை அழிக்காமல் கைது செய்திருக்கலாம்.

என் கவுண்ட்டர் செய்யப்பட்ட பின் கொள்ளைக்காரர்களிடமிருந்து எந்த வித பயங்கரமான ஆயுதங்களும் கைப்பற்ற படவில்லை. ஒரே ஒரு டைரியியை தவிர.

அநியாமாக வாலிபர்கள் 5 பேரின் உயிரை எந்த வித முக்கியமான காரணங்கள் இன்றி பறித்தது எந்த விதத்தில் நியாயம்?

அந்த இரவு நேரத்தில் கொள்ளையர்களால் பக்கத்து வீட்டில் இருந்தவர்களுக்கு கூட பிரச்சனைகள் ஏதும் இல்லாத போது இந்த அநியாய சம்பவம் தேவையா?

காவல்துறைக்கு கடமை முடிந்தது. 40 குழுக்களாக இனி தேட வேண்டாம். அரசும் என் கவுண்ட்டர் செய்த அதிகாரிகளுக்கு மார்பில் ஸ்டார் குத்தி பரிசளிப்பார்கள்.

பல உயிர்களை பறித்த அஜ்மல் கசாப், பார்லிமெண்டை கலங்கடித்த அஃப்சல் குரு இவர்களெல்லாம் சுகமாய் இருக்க அவசரமாய் இவர்களை அழித்தது நியாயமா?


கொள்ளையடித்த இளைஞர்களின் குடும்பம் இனி வாழ்நாள் முழுதும் கூனிகுறிகி வாழும். 5 பேரின் மகன் களில் யாராவது வருங்காலத்தில் கொள்ளையனாகவோ, சமூகத்தை மதிக்க மறந்தவனாகவும் வளருவதற்க்கு இந்த சமூகம் காரணமாய் இருக்கப்போகிறது என்பது நிஜம்.

மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் ஆதரவாய் பேசும் இந்த மக்கள் மனித வதைகளை எதிர்ப்பது எப்போது?


  

No comments:

Post a Comment