Tuesday, February 7, 2012

"திருப்பதி திருமலா ஒரு பயணக் கட்டுரை!"

"திருப்பதி திருமலா ஒரு பயணக் கட்டுரை!"

36 வருடத்து எதிர்ப்பார்ப்பு போனவாரம் தான் நிறைவேறியது!

ஆமாம் கடைசியில் திருப்பதி சென்று கோவிந்தாவை கண்டுகொண்டேன்.

இதுவரை பயணக் கட்டுரைகள் எழுதியதில்லை...ஆனால் முதன் முதல் இந்த திருப்பதி பயணம் என்னை எழுத தூண்டியது.காரணம்...(முதல் முறை திருப்பதி பயணம் போகுபவர்களுக்கு இது உதவலாம் என்பதால்..!)

சென்னையிலிருந்து நான்கு மணி நேர பஸ் பயணம் நான் என் மனைவி மற்றும் என் ஐந்து வயது மகன் ஆர்வத்துடன் பயணித்தோம்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயங்கர கூட்டம்....எல்லா பொருட்களிலும் மூன்று முதல் 10 ரூபாய் வரை கூடுதல் விலையில் பாட்டில் ட்ரிங்க்ஸ் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டுகள்.

நல்ல நேரம்  பஸ்ஸில் முன்னிருக்கையில் இடம் கிடைத்தது.
கெட்ட நேரம் என் மகனுக்கு அரை டிக்கெட் கிடையாதாம்.

மூன்று மணிக்கு பஸ் புறப்பட்டது. ஆறரை மணிக்கு திருப்பதி போனோம். கீழ் திருப்பதியிலிருந்து திருமாவுக்கு 30 நிமிட பஸ் பயணம்.( ஒரு டிக்கெட் 37 ரூபாய்....ரொம்பவே அதிகம்தான்!). கூடவே பாதுகாப்பு சோதனையும்...

ஏழு மணிக்கு மேல் திருப்பதி போய் சேர்ந்தோம். முதன் முறை செல்வதால்....ஒன்றுமே புரியவில்லை. பக்கத்து வீட்டு தாத்தாவிடமும் நண்பர்களிடம் எல்லாம் பெறப்பட்ட தகவல்கள் வீணாய் போனதுதான் மிச்சம்! காரணம் கூட்டம்....எங்கும் கூட்டம்.....எதிலும் கூட்டம்!

திருப்பதி போனா காசே செலவாகாதுப்பா....எல்லாம் அவர்களே ஃபிரீயா கொடுப்பார்கள் என்று தாத்தா சொன்னதை நம்பி பர்சில் நிறைய பணம் எடுத்து செல்லவில்லை. புரியர மாதிரி சொல்லனும்னா....செலவாகாது....ஆனா செலவு ஆகும்!

தங்குவதற்க்கு ரூம்பிற்க்கு 350 ரூபாய் ரீஃபண்டபிள் அட்வான்ஸ், ரூம் கொடுத்தவரும் விடுதி காபாளரும் தலையை சொறிந்துக்கொண்டு சாரு....டமில்நாடா....என்று கேட்டதால்....அவர்கள் பாக்கிட்டில் தலா நூறு ரூபாய் திணித்தேன்.
நல்ல மழை மற்றும் கட்டுக்கடங்காத கூட்டத்தால்....நல்ல அறை கிடைக்க வில்லை,,,ஏதோ டி பிளாக்கில் கொடுத்த அறையில் தண்ணீர் சொட்டியது....

கம்பளி....தலையணை அடுத்த கடையில் வாடகைக்கு கிடைக்கும் மொத்தம் 140 ரூபாய் என்றதால்...500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து அதையும் வாங்கினேன்.

இரவு சாப்பாட்டை முடித்து.... மனைவி மகனை அறைக்கு அனுப்பி மொட்டைபோட கிளம்பினேன்.

அங்கும் கூட்டம்.....கையில் ஒரு சீட்டையும் ஒரு பாதி பிளேடையும் கொடுத்தார்கள். ரொம்ப சந்தோஷமாய் இருந்தது...ஃபிரீயாய் மொட்டை போட பிளேடூம் கொடுக்கிறார்கள் என்பதால். பின்னர் என் எண்ணுக்கு உள்ள மொட்டை அடிப்பவவரிடம் சென்றால்....பக்கத்தில் தண்ணி பக்கெட்டுக்கு பதில் பண பக்கெட் வைத்திருந்தார். அவருக்கு பத்து ரூபாய் கொடுத்தால் வேகமாய் அரைகுறையாய் மொட்டைஅடிப்பார்...சாரூ....தமிழா.....கவனிங்கோ சாரூ....என்றார்......நான் 20 ரூபாய் கொடுத்தேன்....சந்தோஷமாய் பொறுமையாய் மொட்டைஅடித்தார்.

மொட்டைஅடித்தபின் குளிரில் ஒரு அவசர குளியல்.ரூமிற்க்கு வந்தேன். காலை நாலுமணிக்கு தரிசனம் பார்க்க கிளம்ப வேண்டும்.

மறுநாள் காலை....

மூண்று மணியெல்லாம் எழுந்து குளித்து....கிளம்பிவிட்டோம். ஈ கோ ஃபிரண்ட்லி பஸ்சில் 5 நிமிட பயணம். முதல் கேட்டில் நுழைந்தோம்..பயங்கரமான பாதுகாப்பு சோதனைகளை தாண்டி (நல்ல வேளை மொபையில் ஃபோனையும், கேமராவையும் ரூம்பிலேயே வைத்துவிட்டேன்).

அவ்வப்போது....யாரோ ஒருவர் கோவிந்தா....என்று சொல்ல கூட்டமே உடனே கோவிந்தா சொல்வது அழகு!

கைதிகளைப்போல் ஒரு பிளாக்கில் சுமார் ஆயிரம் பேர் கூட்டத்தை அடைத்துவிட....இதுமாதிரி ஏழு எட்டு பிளாக்குகள் உள்ளனவாம்...வரிசையில் நிற்க்க ஆரம்பித்தோம். ஆனால் தமிழ் பக்தர்களே அதிகம்.

திடீரென்று....வலபக்கம் கூட்டம் நகர்கிறது...கோவிந்தா....கோவிந்தா....மொத்தக்கூட்டமும் தள்ளிகொண்டு வலப்பக்கம் நகர்கிறது. திடீரென்று....இடப்பக்கம் கூட்டம் நகர்கிறது...கோவிந்தா....கோவிந்தா....மொத்தக்கூட்டமும் தள்ளிகொண்டு இடப்பக்கம் நகர்கிறது.கடைசிவரை இரும்புக்கதவுகள் திறக்கவே இல்லை.

காலை மணி ஏழானது....
சூடான காப்பி கொடுத்தார்கள்.

காலை மணி எட்டானது....
சூடான கிச்சடி கொடுத்தார்கள். இரண்டுமே சுவையில் அருமை.

காலை மணி பத்தானது....
அங்கங்கே வேர்க்கடலை....கோகோகோலா, பாப்கார்ன்....சுண்டல்.....பிஸ்கட்டுகள்...விற்க்க ஆரம்பித்தார்கள். எனக்கு கொஞ்சம் சந்தேகமும் வந்தது...நான் இருப்பது திருமலாவிலா? இல்லை தியேட்டரிலா? (என் அம்மா என்னை கை கால், முகம் வாய்களை கழுவி சுத்த பத்தமாக சாமி கும்பிட சொல்வார்கள்)

பையனுக்கு கோக்....பிஸ்கெட் மனைவிக்கு சுண்டல்...எனக்கு சிப்ஸ்...செலவு!

காலை பதினோரு மணிக்கும் கதவுகள் திறந்தபாடில்லை. கொஞ்சக் கூட்டம் 12 மணிக்கு திறப்பார்கள் என்றார்கள். கொஞ்ச பேர் 3 மணிக்கு திறப்பார்கள் என்றார்காள். கோவிந்தாவுக்குத்தான் வெளிச்சம்.

மனைவியின் நச்சரிப்பால்....வெளியே வந்தோம். ஏதோ வி ஐ பி தரிசனமாம் சீக்கிரம் சாமியை பார்த்துவிடலாம்...என்று பக்கத்தி வீட்டில் ஆண்டி சொன்னார்களாம். ஆளுக்கு முன்னூறு ரூபாய் வீதம் ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கி அங்கே போனால்....அங்கும் ஏகப்பட்ட கூட்டம்.

எறும்பு மாதிரி கூட்டம் மெதுவாய் நகர்ந்தது......நின்றது...நகர்ந்தது.....காரணம் யாரோ....வி.ஐ.பி. கள் விசிட் செய்கிறார்களாம்.

மாலை நான்கு மணி.....இன்னொரு வெயிட்டிங் ரூமில் அடைத்தார்கள்.....கடைசியாய் 6 மணிக்கு ஒரு வழியாய் கோயில் அருகில் சென்றோம்.இன்னும் அரை மணி ஊர்தலுக்குப்பின் கிட்டத்தட்ட கோவிந்தாவை நெருங்கிவிடோம்.

அப்போதுதான் கவனித்தேன் காலையில் எங்களுடன் இருந்த ஃபிரீ தரிசன நண்பர்கள்....எங்களை தாண்டி இன்னொரு வரிசையில் முந்தி சென்றார்கள். இடை கவனித்த என் மனைவி என்னிடம் பேச்சு கொடுக்காமல் கூரையை பார்த்தாள்!.

கால்கள் வலித்தது....பசி வேறு....ஆனாலும் கோவிந்தாவை பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் வெள்ளம்....வரிசையாய்.....

பரபரப்பு அதிகமானது.....ஜரகண்டி....ஜரகண்டி....சப்தம் காதில் ஒலித்தது....கூட்டம் கோவிந்தா....வெங்கட ரமணா....கோபாலா......எங்கும் ஒலித்தது.

ஒருநாள் முழுக்க...காத்திருந்து,,,,இதோ கர்பக மூலத்தில் வீற்றிருக்கும் ஏழுமலையானை கண்டோம்.....அப்பாடா...என்ன ஒரு ஒளி....தங்க நகைகளாலும் மலர் அலங்காரங்களாளும் ஜொலிக்கிறார். என் 36 வருட வாழ்க்கைப்பயனை இன்றுதான் அடைத்ததுப்போல் ஒரு புதிய அனுபவம்.

ஜரகண்டி....ஜரகண்டி..என்ற காக்கிகள் அரை நொடியில் எங்களை வெளியே பிடித்து தள்ளினார்கள். கோவிந்தா....கோவிந்தா....கோவிந்தா....!
அரை நொடிகள் பார்ப்பதே அதிகம்.

வெளியே வந்தபோது கண்ணாடி அறைக்குள் கோடிகளை எண்ணிகொண்டிருந்தார்கள்.ஏன்ன்

அடுத்து மனைவி சொல்லிவிட்டாள்...மொத்தம் அவள் கனக்குக்கு ஆறு லட்டுகள் வாங்க வேண்டும்.இந்த ஸ்பெஷல் டிக்கெட்டுக்கு மூன்று லட்டுகள் கிடைத்தது.இன்னும் மூன்று முண்டியடித்துக்கொண்டு வாங்க முக்கால்மணி ஆனது.

அடுத்ததாய் ஷாப்பிங்.....

ஊருக்கு கிளம்ப ரெடியானோம்.ரூம் கீயை திருப்பி கொடுத்தவுடன் ரீஃபண்டபில் டெபாசிட்டை பேங்க் கவுண்டரில் வாங்க சொன்னார்கள். அவருக்கு டிப்ஸ் போக மீதியை வாங்கிகொண்டேன்.

கம்பளி, தலையணை கொடுத்து மீதியை காசையும் வாங்கிகொண்டேன். கோவிந்தாவுக்கு குட்பை சொல்லிவிட்டு கீழே இறங்கினோம்.

சில பிள்ஸ் :

அருமையான கோயில் மற்றும் நல்ல கிளைமேட்.

கோயிலிக்குள் கிடைக்கும் ஃபிரீ உணவுகள் உண்மையிலேயே அருமை.

வெங்கடாச்சலபதியின் கம்பீரமும் அழகும் வார்த்தைகளால் சொல்ல முடியாது.

கோயிலுக்குள் கிடைக்கும் மனத்திருப்தி.

திட்டமிட்டு முன்னேற்பாடாய் செல்பவர்களுக்கு கிடைக்கும் நிம்மத்தியான அனுபவம்.
கூடுதல் தகவல்களுக்கு : http://www.tirumala.org/Advance%20Booking.htm

வார இறுதி நாட்களில் செல்லாமல் வார நாட்களில் போவது நலம்.

தேவஸ்தான குழுமத்தின் மக்களுக்கான நலத்திட்டங்கள்.சில மைனஸ் :

கூட்டம்......ரொம்ப கூட்டம்....கட்டுக்ககங்காத கூட்டம்.

விஐபி களால் சாதாரண பக்தர்கள் நாட்கணக்கில் தரிசனத்திற்க்கு காத்திருக்கும் அவலம்.

பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் ஸ்பெஷல் கவனிப்பு.

ஹோட்டல்களில் தரமற்ற உணவுகள்.

எல்லாத்துக்கும் டிப்சை எதிர்ப்பார்க்கும் தேவஸ்தான அலுவலர்கள்.

வியாபார தனம்/மையம் ஆகிவிட்ட கோயில் சுற்றுபுரம்.

புதிதாய் செல்பவர்களுக்கு தேவஸ்தான அலுவலர்களின் அலைகழிப்பு பதில்கள்.

பக்கத்து கோயில்களுக்கு அழைக்கும்/ இம்சை கொடுக்கும் டிரைவர்கள்.


ஃபைனல் கமெண்ட் :

கோடி கோடியாய் கொட்டும் கோயிலில் இன்னும் வசதிகளை அதிகப்படுத்தி பக்தர்களை மகிழ்விக்கலாம்.
காசு செலவாகாத மாதிரி தெரியும் ஆனா செலவாகும்!

No comments:

Post a Comment