Thursday, January 5, 2012

அண்ணாச்சிக்கடை...வாசலில்!




ஆறு மாடி தேர் கட்டிடம்
ஆறு மாதிரி ஊர் கூட்டம்
பளபளக்கும் மொசைக் தரை
மினுமினுக்கும் விற்பனைத் துறை

ஊட்டி முதல்  குமரி வரை
பாட்டி முதல் குமரி வரை - மொத்தமாய்
வந்து போகும் அண்ணாச்சிக் கடை!

அம்மாவின் பாலை தவிர - எல்லாமே
சும்மா குறைந்த விலையில்
கிராமத்து இளசுகள் எல்லாம் - வாயாலே
பரபரத்து வியாபாரம் நடத்தும்!

புதுவருடம் முதல் கிருஸ்துமஸ் வரை
தினம் தள்ளுபடி திருவிழா
மனம் அள்ளும்படி பெருவிழா!

திடீரென்று வந்தார்கள்
படாரென்று பூட்டினார்கள்

மின் பாதுகாப்பு இல்லையாம்
அவசர வழியும் இல்லையாம்
வாகனம் நிறுத்த இடமில்லையாம்
மழை நீர் பாதுகாப்பு இல்லையாம்
மேல் மாடிகளுக்கு அனுமதி இல்லையாம்!

கட்டியவன் கல்லா கட்டிவிட்டான்
அனுமதித்தவன் கம்பி நீட்டினான்
பாவம்...
வேலைப்பார்த்தவன் வெளியே தள்ளப்பட்டான்!

ஆயிரம் ரூபாய்க்கு ஒரு நாளில்
ஆயிரம் நிமிடங்கள் வேலைப்பார்த்த
ஆயிரமாயிரம் எங்களின் கதி?

கட்டியது தவறென்றால் - கட்ட விட்ட
அரசங்கம்  தவறல்லவா?
குடிநீர் கொடுத்த குடிநீர் வாரியம்
மின்சாரம் கொடுத்த மின் வாரியம்
காசை வங்கிக்கொண்டு
ஓசை இல்லாமல் இருக்கிறார்கள்!

வரி கட்டினர் அண்ணாச்சிகள்
சரி சொன்னனர் தன்னாச்சியர்
கரி பூசின கறுப்பு சட்டம்
பறி போனது எங்கள் வாழ்க்கை!

பாழாய்ப் போன சட்டம்
கடமையை செய்தது - எங்கள்
உடமையை பறித்தது!

அண்ணாச்சிக்கு ...
இந்த கடை இல்லையென்றால் வேறு கடை
 அரசுக்கு...
இங்கு வரி யில்லையென்றால் வேரு வழி
ஆனால்...எங்களுக்கு
இந்த வேலை இல்லையென்றால்...

வேலைப் போன எங்களுக்கு
காலை ஏன் விடிகிறது?
நாளை எப்படி விடியும் என்று
சாலையில் கிடந்து தவிக்கின்றோம்!




No comments:

Post a Comment