Monday, December 5, 2011

கடலில் ஒரு கதை!

அவள்: வீட்டில்

மாமன் போயி பத்து  நாளாச்சி
மனசெல்லாம் செத்து ரணமாச்சி
கடல்தாயை நாளும் கேட்டாச்சி
தலையில் பூவும் வாடிப்போச்சி!

காத்திருக்க கவலையில்லை மாமாவே
சீக்கிரமா வந்து சேரு மாமாவே
ஞாபகம் இருக்கட்டும் மாமாவே
வயித்தே ஒதெக்கிரான் மாமாவே
உன்னெயே தேடுரான் மாமாவே
இன்னையோட ஆறு மாசம் மாமாவே!

போனவரெல்லாம் வந்தாச்சு மாமாவே
உன்னையே மட்டும் காணலெயே மாமாவே
புள்ளதாச்சி நான் இங்கே மாமாவே
புலம்புவது புரிகிறதா மாமாவே!

காவலுக்கு யாரும் இல்லே மாமாவே
சேதி சொல்ல யாறும் இல்லை மாமாவே
நிலா கிட்டே சொன்ன சேதி மாமாவே
நிஜமா உனக்கு சேரலையோ மாமாவே!

காதலிச்ச உன்னைத்தேடி மாமாவே
குடும்பத்தை உதறி வந்தேன் மாமாவே
கல்யாணம் மட்டும் வெற்றியல்ல மாமாவே
சாதிக்கணும் ஊருக்குள்ளே மாமாவே
தலைநிமிந்து நிக்கணும் என் அப்பாகிட்டே மாமாவே!

காத்து காத்து கலங்கி நிக்கறென் மாமா
பாத்து பாத்து தயங்கி ஏங்குறேன் ஆமா
மறக்காமே சீக்கிரமா வந்து சேரு மாமா
மத்தியான சாப்பாட்டுக்குள்ளே ஆமா!


இவன்:நடுக்கடலில்

உன் சிரிப்பு சத்தம் காதுக்குள்ளே இருக்கு
உன் மடிப்பு மச்சம் மனசுக்குள்ளே இருக்கு
பத்து மயில் தள்ளி நீ இருந்தாலும்
நித்த மயில் உன் நினப்பு  தாண்டி!

என் பேச்சே கேக்கலையே கட்டுமரம்
அலை பேச்சே கேட்டதடி பட்டமரம்
போன பாதை தெரியவில்லை எனக்கு
எப்படிட்தேன்  புரியவைப்பேன் உனக்கு?

நீ எனக்கு கொடுத்த முத்தம் காயலையே கண்ணே
கையில் கருவாட்டு வாசம் கூட போகலயே கண்ணே
வலை போட்டு பிடித்த மீன்கள் ஏராளம் கண்ணே
மூணு மாசம் நாம் வாழ தாராளம் கண்ணே!

வெயில் பட்டு  உடம்பும் கறுத்ததடி
மயில் நீ பட்டு மனசும் வெளுத்ததடி
நெடும்பயணம் போயி கசப்பாச்சுதடி
உன் மடித்தூக்கம் எனக்கு இனிப்பானதடி!

காலை சூரியன் வரும் முன்னே கண்ணே
வந்து நிப்பேன் உன் முன்னே பெண்ணே
கலங்காமல் காத்திரு என் கண்ணே
கட்டாயம் சாதிப்போம் என் பெண்ணே!


இன்று : இலங்கை ராணுவம்

சட்டெண்று வந்த கப்பல்
சிலோனின் கடற்படை கப்பல்
கச்ச தீவு எல்லைக்குள்ளே
வெச்ச காவு நெஞ்சின் மேலே

வலையை அறுத்து கட்டி எறிந்தான்
தலையை வெறுத்து எட்டி உதைத்தான்
மீன்களை எடுத்துக் கொண்டான்
வீண்பழி போட்டு வென்றான்!

ராவணன் துப்பாக்கிகள்
ராமன்களை அழித்தது
மீனவன் கண்ணீர் கடலில்
நம்மவன் செந்நீர் திடலில்

கடலில் தொடங்கும் இவன் வாழ்க்கை
கடலில் அடங்கும்  அது இயற்கை
பாதுகாப்பில்லாத இவன் பொழப்பு
பாதுகாப்பது யார் பொறுப்பு?


இனி : இந்தியா...

காத்திருக்கும் இவன் மனைவிக்கு
சேதி சொல்ல யார் இருக்கா?
நாதியற்ற மீனவன் இவனுக்கு
தேசம் இனி காவல் தருமா?
பாசம் காட்டி நடிக்கும் சிங்களனின்
வேஷம் காட்ட யார் இருக்கா?
நேசம் காட்ட நாம் இருந்தும்
தேசம் இன்னும் முழிக்கலையே!

உப்பு கரிப்பது கடலால் அல்ல
தப்பு நடக்குது கண்ணீரால் சொல்ல
குப்பத்து வீட்டு கதவுகள் திறந்தே இருக்கும்
தொலைந்தவர் மீண்டு வருவார் என்று!

விளையாட்டாய் நேரம் தொலைக்கும் தமிழா
மீனவர் வாழ்க்கை பாரம் உனக்கு எளிதா?
மறக்காதே இவன் உயிர் நமக்கு முக்கியம்
பொறுக்காதே இனி உயிர் காப்போம் நிச்சயம்!