Monday, November 28, 2011

புதிய இந்தியா!
"Levis Jeans" ஸும்,"Van Heusen"ஸும்
வந்ததால் - எங்களின்
பருத்தி காதி துணிகள்
பழசாய்ப் போயின!

"Netty" யும்,"Gown" னும்
வந்ததால் - எங்களின்
தாவணிகளும்,புடவைகளும்
தரமிழந்துப் போயின!

"Pizza" வும் "Burger" ரும்
வந்ததால் - எங்களின்
இட்லி,சப்பாத்திக்களை
சுவை இழக்க வைத்தன!

"Axe Perfume" உம் "Olay" க்களும்
வந்ததால் - எங்களின்
மஞ்சளும்,மருதாணிக்களும்
வாசம் இழந்துப் போயின!

"Valentine's Day, Friendship Day" க்களும்
வந்ததால் - எங்களின்
நட்புக்களும்,கல்யாணங்களும்
கோர்ட் படிகள் ஏறுகின்றன!

"Cricket"டும்,"Golf" பும்
வந்ததால் - எங்களின்
கபடியும்,மல்யுத்தமும்
களையிழந்துப் போயின!


"Pepsi" யும் "Coke" கும்
வந்ததால் - எங்களின்
கோலிசோடாவும், பொவண்டோவும்
தாகத்தில் துவண்டன.

"Wine" னும்,"Vodka" வும்
வந்ததால் - எங்களின்
கூழையும்,கள்ளையும்
குழித்தோண்டிப் புதைத்தன!

"Standard Charted, American Express Bank" கும்
வந்ததால் - எங்களின்
கூட்டுறவு வங்கிகள்
திவாலாகிப்போயின!

"Dollar , Euro" க்களும்
வந்ததால் - எங்களின்
மூளைகள் வெளிநாடுகளில்
அடமானத்திற்க்கு விற்கப்பட்டன!


இதோ....
"Walmart" டும், "Tesco" வும்
வருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்
நாடார் அங்காடிகளும்,செட்டியார் வியாபாரங்களும்
உழைக்கும் விவசாயிகளும் கூட இனி...
அமெரிக்கர்களின் எகாதிபத்யத்தில்
மீண்டும் அடிமையாகப் போகிறார்கள்.

இருப்பதை விட்டுவிட்டு
பறப்பதற்கு ஆசைப்படும்
அரசியல் அதிகாரிகளுக்கு
மீனைவிட தூண்டில் பெரிதென்று
புரிவதெப்போது?

முடிந்துப்போன தீபாவளி என்பதெல்லாம்...!
முடிந்துப்போன தீபாவளி என்பதெல்லாம்...!


வருடத்தின் ஒரு நாளுக்காக - எங்கள்
வம்சத்தின் விலை - இழப்பு!

மிச்சமிருக்கும் தலைமுறையும் - அடுத்த
வருடத்திற்க்கு சுமை சுமக்கும் - சாகும்வரை!

விவரம் அறியாத வயதுகளில் - தெரிந்தே
விபத்தில் சிக்கிக்கொண்டோம்!

வினைகள் புரியாத வேதியியலில் - தினமும்
விழுந்து விளையாடிக்கொண்டோம்!

பாஸ்பரசும்,பொட்டாஷியமும் - எங்களுக்கு
பாதி நேரச் சாப்பாடு

அலுமினியமும்,சல்ஃபரும் - எங்களுக்கு
மீதி நேர பெரும்பாடு!

எங்கள் உடல்களில்...கெட்ட
அமிலங்களும் தாதுக்களும்
தஞ்சம் கொண்டு தாண்டவமாடும்.
ஊர் உலகம் கொண்டாட
உயிர்களும்,உறவுகளும்
நெஞ்சம் கொதிக்க திண்டாடும்!

வெட்ட வெயிலில்,பொட்டக் காட்டில்
பட்ட மரங்களின் கீழ்
கட்டு கட்டாய் பட்டாசுகளை
கட்டி வருகிறோம்

எட்ட நின்று பற்றவைக்கும் - அதனை
கட்டிக்கொண்டு வாழ்கிறோம்!

எங்கள்...
கருத்துப்போன உடலில்
தீக்காயம் பட்ட தோல்கள்
மறத்துப்போன மனதில்
விபத்தில் தொலைத்த கால்கள்!

முதலாளியின் சொந்த குத்தகையில்
தொலைந்த வாழ்க்கை
தொழிலாளிக்கு கந்து வட்டியில்
விழுந்தது இயற்கை!

தொழிற்ச்சாலை வெடி விபத்துகளில்
சொந்தங்களை இழந்தோம்
வேதியியல் வினை விபத்துகளில்
பந்தங்களை தொலைத்தோம்!

நாங்கள் இறந்தால்...
ஆரடி நிலம் தேவையில்லை
சிதறிப்போன உறுப்புக்களுக்கு
ஓரடி நிலம் போதும்!
உடல்களை எரியூட்ட
கட்டைகள் தேவையில்லை
உடல்களே வேதியியல் அடைத்த கட்டைகள்தான்!


நீங்கள் கொளுத்தி வெடிப்பது - வெறும்
காகிதமும் ரசாயணமும் மட்டுமல்ல - எங்கள்
உழைப்பையும் இழபபையும் தான்.
ஒவ்வொறு பட்டாசு சத்தங்களிளும் - இந்த
கொத்தடிமைகளின் வேதனை சப்தங்கள்!

நொடியில் வெடித்து கரியாக்கும்
அற்ப சந்தோஷத்திற்க்காக
விடியல் மறந்து உழைக்கும்
எங்கள் வாழ்க்கை விளங்கட்டும்!
விழுந்த ஓசோன் ஓட்டையும்
பெரிதாய் வளராமல் இருக்கட்டும்!

கடைசியில்...
வெடிப்பது வெடிகளை மட்டுமல்ல
தடுப்பது விபத்துக்களையும்தான்
கூடவே...
எங்களின் விபத்தில்லா வாழ்க்கையும்தான்!


Sunday, November 27, 2011

வாடகை வீடு!

வீட்டுச் சொந்த்தக்காரர்
வாடகை அக்ரிமெண்ட் போட்டார்...

நாலு குண்டு பல்ஃபுகளும்
மூன்று டியூப்லைட்டுகளும்
இரண்டு பஜாஜ் ஃபேனும்
ஒரு டியூப்லைட் பட்டையும் - மற்றும்
பாத்ரூம் கண்ணாடியும்
விட்டுச் செல்வதாய் எழுதினார்!

ஆனால்...
கடைசிவரை சொல்லவேயில்லை...
ஆறு எலிகளையும்
மூன்று பல்லிகளையும் - கூடவே...
நூறு கரப்பான்களையும் விட்டுச்சென்றதை!ப"சுமை"

தாத்தா நட்டுவிட்டுப்போன
மாங்கா மரம் காணவில்லை
ஊர் நடுவில் இருந்த நெல்லிமரம்
யார் நினைவிலும் இன்றில்லை

அரச மரத்தடியில் நடந்த
பஞ்சாயத்துக் கூட்டங்கள் - இன்று
மார்டன் மண்டபங்களில்!

ஊர் எல்லையில் சுமைதாங்கிக்கு
நிழல் சுகம் கொடுத்த
அரச மரத்தின் அடிச்சுவடே இல்லை!

ஊர் வரும் ஒத்தையடிப்பாதையில்
இருப்பக்கமிருந்த பசுமை மரக் காவலர்கள்
இருந்த இடம் தெரியவில்லை!

அய்யனார் கோயில் வேப்பமரமும்
வேரோடு ம்வெட்டப்பட்டுவிட்டதாம்.

ஊரிலிருந்த பறவைகள் எல்லாம்
கட்டாயம் இடமாற்றம் செய்யப்பட்டன

ஊர்க்குழந்தைகள் விளையாடிய மைதானங்க்களில்
குழந்தைக்களுக்குப் பதில் வாகனங்கள்  வட்டமிடுகின்றன.

மேய்ப்பான்கள் இல்லாத ஆடு, மாடுகள்
போஸ்ட்டர்களையும்,குப்பைத்தொட்டிகளையும்
பசிமறக்க அலசி மேய்கின்றன.
மரங்களில் கட்டப்பட்ட மாடுகள் எல்லாம் - இன்று
மின்சார கம்பங்க்களில் மண்டியிட்டு இருக்கின்றன.

கல்யாணங்களில் கூட
பிளாஸ்டிக் வாழைகளும்,மாவிலைகளும்
வாடகைக்கு வரவேற்க்கப்படுகின்றன.
சாமிக்குக்கூட காகித மாலைகள்
சாயம் போட்டு விற்கப்படுகின்றன.

மரங்களற்ற மலைகள் - நாளை
மண்சரிந்து  மடுவாகும்.
நீர் வற்றிய ஏரிகள் - விரைவில்
புரம் போக்காகி பட்டாக்களகும்.

கடைசியில்...
வானம் பார்த்த பூமியும்  - இனி
மானம் காக்க போராடும்!
பசுமை மறந்த ஆசாமியும் - இனி
வாழ்வை காக்க போராடுவான்.

யாரோ சொன்னார்கள்...
ஊருக்குள் லாரிகள் வந்தது - லோடுகளாய்
காய்கறிகளும், பசுமைகளும்
நகரத்திற்க்கு விற்கப்பட்டனர்!

ஊருக்குள் பஸ்கள் வந்த்து - அடிமாடுகளாய்
பட்டதாரிகளும்,விவசாயிகளும்
ஏற்றப்பட்டு ஊர்கடத்த்ப்பட்டனர்!

உலக மயமாக்கலும் நாகரிக மயமாக்கலும்
விட்டுவிட்டுப்போன சுமைகள் இவை,
ப"சுமை" மறந்த சுவடுகள் இவை!