Tuesday, September 13, 2011

வட்டம்!


தொலைந்துப்போன மணித்துளிகளை
சுற்றி சுற்றி தேடும்
கடிகார முள்ளுக்குத் தெரியாது
வாழ்க்கை ஒரு வட்டம் என்று!


Saturday, September 3, 2011

பணக்காரன் ஆவது (ஆனது) எப்படி?


மிகப்பெரிய பணக்காரர்களை பார்க்கும்போதெல்லாம்
என்னுள்...ஆச்சர்யம்...ஆதங்கம்...கூடவே
கொஞ்சம் பெருமூச்சுடன் வரும் பொறாமை


நானும் நினைத்ததுண்டு...
அப்பன் காசில் வாங்கிய "ஆடி" காரில் வரும்
அவனைப் பார்த்தால்...
என் அப்பன் எனக்கு இளக்காரமாய் தெரிந்தான்!


பீசாவும் பர்கரும் தின்னும் அவனை கண்டால்
தயிர் சாதமும்,தொக்கும் எனக்கு குமட்டும்
இதை தின்பதற்க்கு  "பீ..."யை கூட திங்கலாம் எனத்தோன்றும்!


அவனின் ஒருநாள் பாக்கெட் மணி - எனக்கு
என் வீட்டின் மூன்று மாத மளிகை செலவு


அவனிடம் கேட்டே விட்டேன்...
எப்படி உன் அப்பன் கோடீசுவரன் ஆனார் என்று?


நக்கலாய் சிரித்தான்...ஏளனமாய் பார்த்தான்...
மெதுவாய் கொட்ட ஆரம்பித்தான்


தள்ளு வண்டியில் வளையல் விற்ற
அவன் அப்பன் "ச... ஸ்டோர்" கதையை...
கேளுங்கள்...நாளை உங்களுக்கும் உதவும் பாயிண்ட்டுகள்!
1. பணக்காரன் ஆகவேண்டுமானால்
முதலில் "குழிப்பறிக்க" கற்கவேண்டும்.


2. சொந்தப் பணம் இல்லாவிட்டலும்
ஊர்ப் பணத்தை இரட்டிப்பு ஆக்குவதாய்...
ஏலச்சீட்டில் ஏமாளிகளை சேர்த்து 
நம் பணமாய் சுருட்டத் தொடங்கவேண்டும்!


3.அரசியல் கதர் வேட்டி பெருசுகளுடன்
ஐக்கியமாகி அந்தப்புரங்களில் அலையவேண்டும்
பெரிய கும்பிடுகளுடன் பொக்கே கொடுத்து
பேனர்களில் போஸ் கொடுக்கவேண்டும்!


4. போலீஸ் மாமாக்களுடன் மல்லுக்கட்டி
மாமா வேலைகள் பார்க்கவேண்டும்
பொங்கல்,தீபாவளி நாட்களில்லெல்லாம்
அன்பளிப்பால் அவர்களை அமுக்கவேண்டும்!


5. சோற்றுக்கு வழியில்லாத கிராமத்து உழைப்பாளிகள்
சுப்பனையும்,குப்பனையும் குனியவைத்து கும்மியடித்து
வயல்,வரப்புகளை அடிமாட்டு விலைக்கு அதட்டி வாங்கி 
அடுக்கடுக்காய் அப்பார்ட்மெண்ட்டுகள் கட்ட வேண்டும்!


6. தங்கங்களையும்,கறுப்பு பணங்களையும்  
கொஞ்சமாய் கணக்கு காட்டி, வரி கட்டி
அவாலா கணக்கில் ஸ்விஸ் பேங்க்கில்
பினாமி பெயர்களில் பதுக்க வேண்டும்!


7. கும்பல் கும்பலாய் கொத்தடிமைகளை
குறைஞ்ச விலைக்கு ஊரில் வாங்கி 
இருபது மணி நேரம் வேலைக்கொடுத்து
உதிரங்கள் சுண்ட சுண்ட  உறுஞ்ச வெண்டும்!


8. ஊருக்கு ஒரு கிண்டர் கார்டன்,
டவுனுக்கு ஒரு கான்வெண்ட் ஸ்கூல்
மாவட்டத்துக்கு ஒரு பொறியியல் கல்லூரி
கல்வியை வியாபாரமாக்கத் திரியவேண்டும்!


9. ப்பார்கிங் இல்லாத நகைக்கடை
ஃபயர் எஃஸிட் இல்லாத துணிக்கடை
லிஃப்ட் இல்லாத மளிகைக்கடை
எஞ்சினியர் முடித்தவர்க்கு ஐடி கடை
இதனையும் லஞ்சம் கொடுத்து காக்கவேண்டும்!


10. இலவசமாய் அரசிடம் நிலம், நீர் வாங்கி
ஃபைவ் ஸ்டார் கணக்காய் ஹாஸ்பிடல் கட்டி
ஏழை பாழைகளுக்கு வைத்தியம் பார்ப்பதாய்
நம்பவைத்து டாக்டர் பட்டம் வாங்கவேண்டும்!


11. பத்துமாடி ஹோட்டல் ,கிளப் கட்டி
ஃபாரின் ஃபிகரை ரிசப்சனிஸ்ட் ஆக்கி
மறைமுகமாய் மாமா வேலைப்பார்த்து
ஆர்டர்களை அள்ள தெரியவேண்டும்!


12. நாளை திடீரென்று சிபிஐ ரெய்டு வந்தால்
இதயத்தில் இறுக்கமாய் வலி யென்று
பேச முடியாமல் வாயில் மாஸ்க்கைப் போட்டு
ஐசியு வில் அட்மிட் ஆகி நடிக்க வேண்டும்!


13. ஒன்றுக்கு மூன்றாய் கல்யாணம் செய்து
வெப்பாட்டிகளின் வயதுக்கு ஏற்ப
வரிசையாய் குழந்தைகள் பெற்று
குடும்ப சொத்துக்களை பிரித்து 
பாதுகாக்க தெரியவேண்டும்!


14. வருடம் ஒருமுறை யேனும் மேடைகளில்
கொடை வள்ளலாய் அரிதாரம் பூசி
மூணு கால் சைக்கிளும்,தையல் மிஷினும்
மானாவாரியாய் மக்களுக்கு கொடுத்து
போட்டோவில் கைகூப்பி சிரிக்கவேண்டும்
பத்திரிகை பக்கங்களில் பப்ளிசிட்டி பண்ணவேண்டும்!


15. அடுத்ததாய்...


அய்யோ...அய்யோ...நிறுத்துப்பா...
இனிப் பணக்காரர்களை பார்த்தால்
எனக்கு பொறாமை வராது.
அய்யோ பாவம் என்று கரிசனம் வரும்.
பணக்காரனாய் இருப்பதை விட
கூவத்தில் கூட குடும்பம் நடத்தலாம்!