Wednesday, August 31, 2011

"நாள்முழுதும் அன்பொழுகும்!"


"நாள்முழுதும் அன்பொழுகும்!"அவனை பழிக்கு பழி வாங்கணும்
அவள் குடும்பத்தை கூண்டோடு அழிக்கணும்
நீ நாசமாய் போகணும்
நீ நன்றி கெட்ட ஜென்மம்
அவளை அடெஞ்சே தீரணும்
எப்படியாவது நம்ம வலைக்குள் வீழ்த்தனும்
எப்படி வாழ்ந்திருவான்னு பாக்குரேன்
குழந்தையை கடத்தனும்
அஞ்சி லட்சம் பணத்தோட வா
ரெண்டுப்பேரும் ஓடிப்போயிடலாம்
விஷம் வைத்து கொன்னுடலாம்
காரை ஏத்தி சாவடிச்சுடலாம்
அவளை நடுத்தெருவுக்கு கொண்டுவருவேன் -
இது உன்மேல் ஆணை!
கொள்ளையடிக்கணும்,குழிப்பறிக்கணும்!
கடவுளே உனக்கு அறிவில்லையா? மனமில்லையா?
நீ வெறும் கல்! இனி உன்னை கும்பிடவே மாட்டேன்!
டாய்...நான் குடிச்சுட்டு பேசரேன்னு நினைக்காதே
குடிச்சாலும் ஸ்டெடியாய் இருக்கேன்...
வீட்டை எரிச்சிடுங்க, அழ வைக்கணும்
கத்தியால் குத்தணும், ரத்தம் பாக்காமே விடமாட்டேன்!
என் கற்பத்துக்கு நீதான் காரணம்
புருஷன் நான் புள்ளைக்கு அப்பன் அவனா?
அவளை கட்டிக்கிறேன்,உன்னை வெச்சிக்கிறேன்!

பொறுங்கள்....
பயந்துவிடாதீர்கள்...காதைப் பொத்தாதீர்கள்....
இவை அனைத்தும்...
நடு ரோட்டுச் சண்டைகள் அல்ல
தரங்கெட்ட மனிதர்களின் வார்த்தைகள் அல்ல!
கொடூர மனிதர்களின் அசிங்கப் பேச்சுக்கள் அல்ல!
திருடர்களின் திருட்டுப் பேச்சும் அல்ல!
தீவிரவாதிகளின் தியாகப் பேச்சும் அல்ல!

ஆமாம்....
காலை முதல் இரவு வரை
திங்கள் முதல் வெள்ளி வரை
நம் சின்னத்திரை டிவி சீரியல்களில்
மங்களமாய் வரும்
குடும்பக் குத்துவிளக்கு பெண்களும்,ஆண்களும்
பேசும் பெருவாரியான தமிழ் வசனங்கள்தான்!
வாழ்க தமிழ் குடும்பங்கள்! வளர்க தமிழ் தொண்டுகள்!


Tuesday, August 30, 2011

அந்த மூன்று பேரும் இந்த தூக்குக் கயிறும்!


பிறப்பு சொல்லாமல் வந்ததில்லை
இறப்பு சொல்லிவிட்டு வருவதில்லை
ஆனால்...
இவர்களுக்கு மறுப்பும்,இறப்பும்
முன் தேதியிட்ட கடிதங்களாய்!

யாருக்கு கிடைக்கும் இந்த
மரணத்தின் முன்னறிவிப்பு?

உண்ணா விரதத்திற்க்கே
ஊர் கூடி கோஷமிட்டவர்கள் - இங்கே
மண்ணாகும் மனிதர்களின்
தலை காக்க வரவில்லை!

தீவிர வாதிகளை மன்னிக்கும்
இந்த பாரத மண் - இந்த
பாமர வாதிகளை
பரிதவிக்க விட்டதேனோ?

இது வரை எனக்குப் பிடித்த
கறுப்பு நிறம்...
இனி வெறுப்பு தரும்!
இறக்குமதி செய்யப்பட்ட
நைலான் கயிரு...
இனி இறக்கும் வரை இறுக்கும்!

காலன் இங்கு நாள் குறித்தப்பின்
கடைசி ஆசை கேட்பதேனோ?
கடைசி ஆசை "வாழ்வதென்றால்"
கருணை மனுவும் கலைந்ததேனோ?

இந்திய சட்டத்தின் ஆணைப்படி
ஆயுள் தண்டனையாம் பதினான்கு வருடம்
அரசியல் உயர் மட்டத்தின் ஆணைப்படி
ஆயுள் தண்டனையாம் இருபது வருடம்
இலவச இணைப்பாய்...
இப்போது மரணதண்டனையும் கூட!

சிறைக்குள் எங்கள் சிறகுகள் சிறைப்பட்டது - கம்பி
திரைக்குள் எங்கள் மனங்கள் கரைப்பட்டது
நான்கு சுவற்றுக்குள் நாதியற்று கிடந்தோம் - நம்பி
இருக்கும் மனத்திற்க்குள் நாட்களை எண்ணி கழித்தோம்!

மெதுவாய் நொந்து சாவதைவிட
விரைவாய் வெந்து சாவதே மேல்
ஜடமாய் வாழ்க்கை வாழ்வதைவிட
திடமாய் உயிரை இழப்பது மேல்!

போலீசின் வீட்டுச் சண்டைக்கு - எங்கள்
முதுகுகள் லத்தியால் கவனிக்கப்படும்
சிபிஐயின் பதவி உயர்வுக்கு - எங்கள்
பெயர்கள் வட்டியாய் விற்கப்படும்!

சிறைக்குள் வந்துப் பாருங்கள்
சுவர்களில் எத்தனை கிருக்கல்கள்
தரைகளில் எத்தனை ஓவியங்கள் - எங்கள்
துக்கங்களை தாங்கி நிற்கும் தூண்கள் - எங்கள்
ஏக்கங்களை அணைத்து இருக்கும் கூரைகள்
அவை...கிருக்கல்கள் அல்ல
எங்கள் வாழ்க்கைப்போல் திசை தெரியா கோடுகள்
அவை ஓவியங்கள் அல்ல
எங்கள் வாழ்க்கையின் நிறமற்ற நிஜங்கள்!

ஊசலாடும் தூக்குக்கயிறுகள் எங்கள் உயிரை எடுக்கலாம்
நேசத்தோடு இருக்கும் நீங்கள் எங்கள் உயிரை காக்கலாம்
பயணித்த பாதி வாழ்க்கை தவறென்று புரிந்துக்கொண்டு- இனி
பயணிக்கும் மீதி வாழ்க்கை தவம் என்று அறிந்துக்கொண்டு
மன்னித்து எங்கள் மரணம் தடுத்தால் - இனி
மனம் திருந்தி வாழ்வை ஏற்ப்போம்
எங்கள் மூன்று பேரின் உயிர் தன்னில் - இனி
தமிழ் மண்ணின் மானம் காப்போம்!
 
 

Wednesday, August 24, 2011

"நேயர்களே இன்றைய நிகழ்ச்சிகளை..."எட்டு மணிக்கு பெட் காஃப்பி
குளிக்காமல் மார்னிங் டிஃபன்

ஒன்பது மணி முதல் பத்து மணி வரை
ஓலமன் மூப்பையாவின் - தமிழ் சினிமாவில்
"ஹிந்தி நடிகை பேசும் தமில் அலகா?" இல்லை
"தமிழ் நடிகை பேசும் தமிழ் அழகா?"
ஒரு மாபெரும் வெட்டி மன்றம்!

பத்து மணிமுதல் பதினோரு மணி வரை
கவர்ச்சி கன்னி "மகீலா" வுடன் ஒரு நாள்!

பதினோரு மணிக்கு
கதாநாயகிகளின் சுதந்திர தின நாள்
கோலாகல கொண்டாட்டங்கள்!

மதியம் பனிரெண்டு மணிக்கு
"என் பப்பியும் நானும்"
குண்டு நாயகி "கும்தாஜ்" தன் செல்ல நாயுடன்
வவ் வவ் கலகல கலக்கல் பேட்டி!

ஒரு மணிக்கு...
தனது சினிமா அனுபவங்களை
சிலாகித்து கூறுகிரார் சில்வர் ஸ்கிரீன்
சிரிப்பழகி சொத்தைப்ப்பல் "வினேகா"!

இரண்டு மணிக்கு...
இந்த ஆண்டின் இனிய பத்து வெத்துப்பாடல்கள்
மற்றும்
முதல் பத்து கண்ணியமற்ற காமெடி காட்சிகள்!

மாலை நான்கு மணிக்கு
சின்னத்திரை வரலாற்றில் முதன் முறையாக
திரைக்கு வந்து "ரிலீஸ் ஆகாத" புத்தம் புதிய
காதல் படம் "கல்யாணக் காதல்"!

இரவு ஏழு மணிக்கு
குத்தாட்ட நாயகிகளின் கும்மியாட்டம்
"நீயாட நானாட" குலுக்கல் நடனங்கள்!

எட்டு மணிக்கு..
"வெருமதி செல்வம்" சின்னத்திரை குடும்பமும்
"வெல்லமே" சின்னத்திரை குடும்பமும்
இணைந்து குழப்பும் சின்னத்திரை கொலையாட்டு!

ஒன்பது மணிக்கு.....

நேயர்களே...
இன்றைய சுதந்திர தின நிகழ்ச்சிகளை காணுங்கள் - நம்
இந்திய சுதந்திரத்தை பேணுங்கள்!

எல்லா...
விஷேஷ நாட்களிலும் எப்போதும்போல்
நம்ம வீட்டு டிவி பெட்டிகளில்
விதவிதமாய் இரைச்சலுடன்
டிஆர்பியில் முந்தும் புதுமை நிகழ்ச்சிகள்!

கடைசிவரை எந்த டிவியும் காட்டவில்லை
"சுதந்திரத்தைப் பற்றியோ,தியாகிகளைப் பற்றியோ".

சினிமா கவர்ச்சியில் சிதறிப்போனது
நம் சிந்தனை மட்டுமல்ல...
நம் நாட்டுப்பற்றும் தான்!


Saturday, August 20, 2011

ஓவியன் ஆவது எப்படி? How to become famous Artist?
ஓவியன் ஆவது எப்படி?
How to become famous Artist?

முதலில்...
இந்த கவிதைக்காக,
திறமையான உண்மை ஓவியர்கள் என்னை மன்னிக்கவும்.
(உங்களுக்கு தெரியும் உங்களின் ஓவியத் திறன் பற்றி!)

நிறைய ஆங்கில வார்த்தைகள் கலந்தமைக்கும் மன்னிக்கவும்.

ஓவியன் ஆக வேண்டும் என்று சென்னை வந்த நான்...
(படிப்பு வரவில்லை என்பது வேறு விஷயம்)

சென்னை ஓவியக்கலூரியில் படிப்பு...

கிராமத்து பழமான எனக்கு - சென்னை
நகரத்து புதுமை வாழ்க்கை - என்னை
குழந்தையாக்கி மெல்ல வளர்த்தது!

ராமராஜன் சட்டையும், முக்கால் பேண்ட்டும் போட்ட நான் - சென்னை
காமராஜ் ரோட்டிலும், மெரினா பீச்சிலும் மார்டனாய் திரிந்தேன்!

விவேக்கை போடா வெண்ணை என்று சொன்ன சென்னை
என்னை வாடா பண்ணை என்றது!

பாவாடை தாவணிகளை பார்த்து பழகிய எனக்கு
நகரத்து சுடிதாரும்,ஜீன்ஸும் நலமா என்றது!

சரி! விஷயத்துக்கு வருவோம்..
அதாங்க...ஓவியனான கதை....

பத்து ரூபா சப்பட்டை கலர் பாக்சும்
அஞ்சி ரூபா பிரஷும் தெரிந்த எனக்கு
பாட்டிலில் போஸ்ட்டர் கலரும்
பேஸ்ட்டில் வாட்டர் கலரும்
இருப்பது தெரியவில்லை!

வாட்டர் மேன் ஷீட் என்றார்கள்
கேன்வாஸ் போர்ட் என்றார்கள்
ச்சார்கோல் பென்சில் என்றார்கள்
ஆயில் பெயிண்ட் என்றார்கள்
அக்ரலிக் கலர் என்றார்கள்
புதிது புதிதாய் ஏதோதோ சொன்னவர்கள்...
கடைசி வரை எது "ஆர்ட்" என்று சொல்லவேயில்லை!

தாடியும் வைத்துப்பார்த்தேன்
குர்தா,ஜுப்பா போட்டுப்பார்த்தேன்
ஜோல்னாப்பை வாங்கிப் பார்த்தேன்
சோடாப்புட்டி கண்ணாடியுப் போட்டுப்பார்த்தேன்
ஆனால்....
ஓவியம் மட்டும் வரைய வரவில்லை!

இன்னொரு தாடிக்காரன் சொன்னதை நம்பி
ஆர்ட் கேலரிக்கெல்லாம் அலைந்து திரிந்து,
கன்னிமரா லைப்ரரியின் மூலை முடுக்குகளில்
மைக்கில் ஆஞ்சலோவையும்,பிக்காஸோவையும்
படித்து கரைத்து குடித்து கிழித்தாயிற்று..
ஆனாலும்...
ஓவியம் வரைய முடியவில்லை(வரவில்லை)!

கடைசியாய்...
ஓவியங்களை காப்பியடித்து வரைந்துப் பார்த்தேன்
ஸ்டிரேஸ் செய்து வரைந்துப் பார்த்தேன்
கடற்கரையில் சிந்தித்துப் பார்த்தேன்
மிட்நைட்டில் யோசித்துப் பார்த்தேன்
மூளையை(இருந்தாத்தானே!) கசக்கிப் பார்த்தேன்
அப்படியும் கூட ஓவியம் வரவில்லை!

வாத்தியாருக்கு டீ வாங்கிவந்தேன்
புரபசருக்கு வண்டி துடைத்தேன் - அவர்கள்
வரைவதை ஒளிந்து நின்றுப் பார்த்தேன்
ஏதோ... "டெக்நிக்" இருக்குதாமே...வரைவதற்க்கு
அவர்களிடமும் ஒன்றும் தேறவில்லை எனக்கு!

எப்படித்தான் ஓவியனாவது?
புரிய வில்லை எனக்கு!

பட்டிக்காட்டு மரமண்டை எனக்கு மார்டன் ஆர்ட் புரியவில்லை
வக்கில்லாத எனக்கு கண்டம்ப்ரரி ஆர்ட் தெரியவில்லை
அரைகுறையான எனக்கு அப்ஸ்டிராக்ட் ஆர்ட் ஏறவில்லை
கான்செப்ட்டே வராத எனக்கு கான்செப்ஸூவல் ஆர்ட் விளங்கவில்லை
மஸாஜ் தெரிந்த எனக்கு கொலாஜ் பெயிண்டிங் கிடைக்கவில்லை
ஐய்யோ....எப்படித்தான் ஓவியனாவது?

கடைசியாய்...
என்னுடைய சாகசங்களை
எலக்ஷன் டைமில் சுவர்களில் "தலைவர் வாழ்க"
டீக்கடையில் கலர்ஃபுல் போர்டுகள்
துணிக்கடை பேனர்களில் "ரம்பா,மீனா"..
மிகப்பெரிய விஷயம் - பெரிய தியேட்டர்
டாய்லெட்டில் "ஆண்கள்,பெண்கள்" வரைந்ததுதான்!
அத்தனையும்...
டிஜிடல் பேனர் வந்தபின் "வேலை காலி இல்லை"!

ஊரில் எல்லாம்...
மகன் பெரியப் படிப்பு படிப்பதாய் - அப்பா
கை நிறய சம்பளம் வாங்குவான் - அம்மா
என் கல்யாணம் அண்ணன் பணத்தில் - தங்கை
பைக்கு வாங்கி தருவதாய் நம்பி - தம்பி
இவர்களுக்கு தெரியாது...
ஓவியனாவது சும்மா லேசுப்பட்ட காரியமா?

அப்போதுதான்....
எனக்கு ஞானோதயம் கிடைத்தது..
மார்டன் ஆர்டிஸ்ட் "ம.ப.ஃபசைன்" வடிவில்!
அசிஸ்டண்ட்டாய் சேர்ந்த நான்...
அவரின் டெக்னிக்குகளை..கற்க தொடங்கினேன்!

இன்று...
நான் ஒரு மிகப்பெரிய ஓவியன்
ரெண்டு நேஷனல் அவார்ட்
ஒரு இண்டர் நேஷனல் அவார்ட்
ஆறு ஸ்டேட் அவார்ட்
லச்சக் கணக்கில் வருமானம்!

எப்படி சத்தியம்..எப்படி ஓவியனானேன்?

சென்னைய் குப்பைதொட்டிகளில் வாரியெடுத்த
வீணான பொருட்களை..வித்தியாசமாய் ஒட்டி
கண்ட்டெம்ப்ரரி ஆர்ட் ஆக்கினேன்!

கலர்களை கையில் அப்பி அசிங்கமாய்
கேன்வாசில் கிருக்கி மார்டன் ஆர்ட் வரைந்தேன்!

வித்தியாசமாய் யோசிப்பதாய்...வெட்கமின்றி
புரியாததை வரைந்து விஷுவல் ஆர்ட் ஆக்கினேன்!

மீந்துப்போன துருப்பிடித்த கம்பிகளையும்,தகடுகளையும்
வர்ணம் பூசி அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் செய்தேன்!

இன்னமும்...
நான் வரைந்ததைப் ஆர்வமாய் பார்த்துக் கொண்டு
புரியாமல் நிற்கும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை
நான் என்றும் மிகப்பெரிய ஓவியன்தான்!
தமிழ்நாட்டு நிலைமை!
தமிழ்நாட்டில்...

வறுமை கோட்டின் கீழ் யாறும் இல்லையாம்!
நேற்று சட்டசபையில் அம்மா சொன்னார்கள்.

ஆமாம்...

நம்ம அம்மா சொன்னது உண்மைதான்...

அறிக்கை பேப்பரில் இருந்த
வறு"மை" யை அழித்துவிட்டார்களாம்!


Monday, August 15, 2011

சொதந்திரொ கிடெச்சது இன்னாத்துக்கு?நாலு வார்த்தை படிக்கக் கூட
நாப்பதாயிரம் கேக்குறான்
நாகரீகம் பேரைச்சொல்லி
புள்ளே படிப்பே விக்குறான்!

நஞ்ஞை புஞ்ஞை காடு கழணி
பிளாட்டு போட்டு விக்குறான்
நம்பி இருக்கும் குடும்பம் மொத்தம்
நடுத்தெருவிலே நிறுத்துறான்!

டிவி பொட்டி கிரைண்டர் காட்டி
இலவசமா மயக்குறான்
கரண்ட்டை கூட்டி வரியை கூட்டி
அப்புறமா கவுக்குறான்!

பார்க்கிங்கு பத்து ரூவா ஆயி போக அஞ்சி ரூவா
டிக்கெட்டு போட்டு அமுக்குறான்
சிகெரெட்டு ஆறு ரூவா புடிச்சாக்க நூறு ரூவா
அபராதம் கட்ட மிரட்டுறான்!

ஜாதி பேரை சொல்லிச்சொல்லி தீயைமூட்டி
ஜாக்கிரதை என்கிறான்
பொண்ணு ஒண்ணு காதலிச்சா காதலனோட
அவளை சேத்து பொதைக்கிறான்!

மத்திய மந்திரி ஆனா போதும் மறக்காமெ
கல்லா நல்லா கட்டுறான்
அஞ்ஜி வருசம் ஆண்ட பின்னே மினிமம்
ஆயிரம் கோடி சேக்குறான்!

கந்து வட்டி கும்பல் ஒண்ணு
வீடியோவோட அலையுது
அப்பன் கட்டும் வட்டிக்கு பொண்ணு
மானம் பறக்குது!

இங்கே உண்ணாவிரதம் இருந்தாத்தான்
ஊருகூட அசையுது
அண்ணா அசாரே வந்து நின்னாத்தான்
அர்த்தங்கூட புரியுது!

பெருசுங்கெல்லாம் பார்லிமெண்ட்டில்
கூட்டம் போட்டு கத்துது
பிரியாணி பஜ்ஜி தின்னுகிட்டு
குச்சியெடுத்து பல்லை குத்துது!

கோடி கோடி செலவு பண்ணி
தீவிரவாதியை பாது காக்குது
அப்பாவி மக்களை அம்போனு
பாதுகாக்காமெ சாவடிக்குது!

பெரிய முதலாளி மனசும் சேத்து
பணமும் கூட கறுப்புதான்!
நம்ம நாட்டில் ஊழல் லஞ்சம்
தலைவிரித்து ஆடுது!

பணமிருந்தா கோர்ட்டு கூட வாய்தா
வாய்தா கொடுக்குது
கோர்ட்டிலையே நீதிபதி முன்னே
கொலையும் கூட நடக்குது!

காய்கறியும் பருப்பும் இங்கே ராக்கெட்
விலைக்கு விக்குது
கஷ்டம் படும் ஏழை குடும்பம் எலியை
புடிச்சி திங்குது!

பேருக்குத்தான் இந்தியாவில் எல்லோரும்
அண்ணன் தம்பி என்கிறான்
நம்ம ஊரு தண்ணியை கூட அணையை
கட்டி தடுக்குறான்!

இதுக்குத்தானா வெள்ளைக்காரன்
சொதந்த்திரத்தை கொடுத்தது
அய்யா சாமீ நீயே வந்து
மறுபடியும் எங்களை ஆண்டிடு!


சந்தோஷ காந்தி!
கஷ்டப்பட்டு சம்பாதித்த வெள்ளைப் பணமோ
கொள்ளையடித்து சம்பாதித்த கறுப்புப் பணமோ

இரண்டிலுமே...

எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் காந்தி!
Saturday, August 13, 2011

ஓடி விளையாடு பாப்பா!
சின்ன வயதுகளில்...

பெரியத்தெருக்களில்...
காலை வேளையில் வயிற்றில் கஞ்சி நிரம்பியவுடன்
அழுக்கு சட்டையும்,கிழிந்த கால்சட்டை ஜோப்பில்
தொங்கும் இருபது முப்பது கோலிகுண்டுகளுடன்
தூரத்தில் இருக்கும் கோலிகளை - நடுவிரலால்
நச்சென்று சரியாய் அடித்ததுண்டு!

மைதானத்தின் மத்தியில்...
வெட்டிப் பயபுளைக்கு லீவு தந்த மகிழ்ச்சியில்
சிறிய குழித்தோண்டி கையில் தாண்டாவுடன்
வறண்ட நாக்கை கீழ் மடக்கி எச்சில் ஒழுக
எதிரி எறிந்த கில்லியை குறிப்பார்த்து - அனலாய்
அறுபதடி அனாயாசமாய் அடித்ததுண்டு!

குறுக்கு சந்துகளில்...
உடைந்து போன கருத்த சிவப்பு ஓடுகளை
ஏழு அடுக்குகளாய் அவசரமாய் அழகாய் அடுக்கி
அந்தபக்கம் இந்தபக்கம் பார்க்கும்முன்
சாக்கடை நீர் தடவிய துணிப்பந்தில் - சரமாரியாய்
துரத்தி துரத்தி முதுகில் அடித்ததுண்டு!

வீட்டுத்திண்ணைகளில்...
மங்கிப்போன மாலை நேர மஞ்சள் வெயிலில்
அண்ணனும் தம்பியுமாய் சினிமா கதைப்பேசி
மூன்று புலிகளையும் பத்திரண்டு ஆடுகளையும்
ஆடுகள் புலிக்கு தண்ணிக்காட்ட - அதிசியமாய்
புலிகள் வெட்டப்பட்டு வீழ்ந்ததுண்டு!

கோயில் மண்டபத்தில்...
ஊர் கூட்டமெல்லாம் கலைந்து போன பின்னே
பொடிசுகள் எல்லாம் சாட் பூட் போட்டு கண்ணைக்கட்டி
பலப்பொடிசுகள் தூணுக்குப்பின்னே,நாற்காலிக்குள்ளே,
கைகால்களை மடக்கி சுருட்டி  மூச்சுவிடாமல் - மாயமாய்
மறைந்து மணிக்கணக்கில் மகிழ்ந்ததுண்டு!

அம்புட்டுத்தானா?
பாட்டியுடன் ஆடும் பல்லாங்குழி
பைசாவை கொண்டு பூவா தலையா
திருட்டுத்தனமாய் சீட்டுக்கட்டுடன் மங்காத்தா
கட்டுடல் காளைகள் விளையாடும் கபடி
கன்னியர்கள் விளையாடும் கோ கோ
இன்னும் எத்தனையோ...!

காலை முதல் மாலை வரை
பவர் ரேஞ்சரும்,கிரிக்கெட்டும்,WWF
பார்த்து குர்குரே தின்னும் என் மகனுக்கு
விளையாட்டும் விளையாட்டு தோழனும்
டிவி பெட்டி மட்டும்தான்!

Tuesday, August 9, 2011

காலம்!

"போங்கப்பா...நான் என்ன சின்ன பாப்பாவா?"-என்று

அன்பு மகள்  கேட்டபோதுதான் தெரிந்தது...

வாங்கி வந்த "மரப்பாச்சி" பொம்மைகளை

விளையாடும் வயதை தாண்டிவிட்டாள் என்று!


என்ன செய்வது...

எல்லா அப்பாக்களுக்கும் தங்கள் குழந்தைகள்

என்றும் சின்ன பாப்பாக்கள் தான்!Monday, August 8, 2011

விடுதிச் சாலை
அப்போதெல்லாம்...
கல்லூரி நேரம் முடிந்தவுடன்
அவசரமாய் விடுதி திரும்புவேன்!

எக்மோரில் இருந்து அடையாருக்கு..பேருந்தில்...
மத்தியான வேளை...என்றும் போல்...
உச்சி வெயில் மண்டையை பிளக்கும்!

அடையாரிலிருந்து தரமணி வரை...
நடை பயணம்...அமைதியாய்...

அப்போதெல்லாம்...
இரண்டு பக்கமும் மரங்கள் இருக்கும்
இனிதாய் நிழலும் தொடர்ந்து வரும்!

மரத்தின் கீழே...
மெல்லிய மணம் வீசும்
ஆடு மாடுகள் ஓய்வெடுக்கும்
புடவை தொட்டிலில் குழந்தை தூங்கும்
மரத்தின் இலைகள் சாமரம் வீசும்!

இளநீர்காரன் கடை போடுவான்-மத்தியானம்
மதீனா பிரியாணி விற்ப்பான்
மீன் விற்றவன் கணக்குப்பார்ப்பான்
மீசை கண்டெக்டர் அரசியலை ஏய்ப்பான்!

கால்நடைகளுடன்,கார்களும்
பைக்குகளும்,பறவைகளும் இளைப்பாரும்
புதிதாய் ஒரு காதல் ஜோடி
உண்மையாய் பல பொய் பேசி நடிக்கும்
குறவனின் குடும்பம் குடிசைப்போட்டு வாழும்!

மரத்தின் கீழே உற்றுப் பார்த்தால்
மல்லாக்க இரண்டு எறும்புகளும்
மத்தியான சாப்பாட்டையும் மறந்து
கிசு கிசுக்களை பேசி மகிழும்!

என் கால் மணிப்பயணம்
சட்டென்று காலியாகும்
எட்டடி  வந்தபின்னே
விடுதியும் எட்டிப்பார்க்கும்!

இப்போதெல்லாம்....

அதே பாதை...
இரண்டு பக்கமும் கட்டிடங்கள்
மரங்களுக்கு பதில் மின்சார கம்பங்கள்
புகைமூட்டமான ரோட்டில்...
பறவைகள் பரப்பதில்லை
ஓய்வெடுக்க இடமும் இல்லை
கார்ப்பரேஷன் குழியுண்டு
காதல் பேசும் ஜோடிகள் இல்லை
ஆளுயர இரும்பு கதவுகள் உண்டு - கூடவே
 உள்ளிருந்து இரும்பு மனங்களும் எட்டிப்பார்க்கும்!

பசுமையை தொலைத்த இந்த பயணம்
வெப்பத்தை கந்து வட்டிக்கு வாங்கி
அண்ணாந்து பார்த்தால்...
வெறிச்சோடிய வறட்டு வானம்
சூரியன் கூட நிழலைத்தேடி...

என் கால் மணிப்பயணம்-இப்போதெல்லாம்
அரைமணியாய்...அலைச்சலாய்..இரைச்சலாய்...Saturday, August 6, 2011

ஒரு கல் இரண்டு மாங்கா!

என் ஏழு வயது மகனுக்கு
ஆடிய பல்லை காட்டப்போனபோதுதான் தெரிந்தது...
பல் டாக்டரம்மா
பல்லை மட்டும் புடுங்குவதில்லை
ஃபீசையும்தான்!