Sunday, October 22, 2017

நடிகன், அரசியல்வாதி, டாக்டர்ஸ் மற்றும் போராளீஸ்!!!

நடிகன், அரசியல்வாதி, டாக்டர்ஸ் மற்றும் போராளீஸ்!!!

நடிகன்: 
நடிப்பு அவனுக்கு தொழில் அல்லது பிசினஸ். ரசிகர்கள் அவனுக்கு கிடைக்கும் மூலதனம். படத்துக்கு ஏற்ப்படும்   தேவையற்ற பிரச்சினைகள் அவனுக்கு கிடைக்கும் கூடுதல் வட்டி. இந்த உலகில் சுயநலமில்லாதவர் யாரும் இல்லை எனும்போது லட்சங்களில் சம்பளம் வாங்கும் நடிகன் கோடிகள் சம்பளம் கிடைக்க என்ன வேண்டும் செய்வான். எதைவேண்டும் செய்வான். கூண்டுக்குள் இருக்கும் விலங்கு.

அரசியல்வாதி: 
எல்லாவற்றிலும் பொது நலம் பார்த்து ஆண்ட அரசியல்வாதிகள் நூத்துக்கு ஒன்றிரண்டுப்பேர் இருந்திருப்பார்கள். இந்தக்காலத்தில் அப்படி யாரும் இருப்பதாய் தெரியவில்லை. ஆளும் கட்சி தங்களை தற்காத்துக்கொள்ள தவிக்கின்றது, தேவையற்ற பிரச்சினைகளை பெரிதாக்குகிறது. எதிர்க்கட்சி தங்களை வளர்க்க வீணான சிண்டு முடிக்கும் வேலைகளை செய்கின்றது. அரசியல்வாதியும் அப்படித்தான் ஆளும்போது விமர்சனத்தை தாங்காதவன் எதிர்க்கட்சியாய் இருக்கும்போது ஆள்பவனை குத்திக்காட்டுவான். கூர்ந்த்துப்பார்த்தால் இரண்டுப்பேரிடமும் அதேத்தவறுகள் கொட்டிக்கிடக்கும்.

டாக்டர்கள்: 
நடிகனையும், டாக்டர்களையும் கம்பேர் செய்வதே அபத்தம். நடிகனுக்கு கோடிகளில் சம்பளம் எனில் டாக்டர்களுக்கு லட்சங்களில்தான் கிடைக்கும் என்பது யதார்த்தம். ஆனால்.., நடிகன் மக்களின் வரிப்பணத்தில் நடிகனாவதில்லை, வளர்ந்தப்பின் வேண்டுமானால் மக்களின் அன்பளிப்பால்(டிக்கெட் காசு) பணக்காரனாவான். ஆனால்.., டாக்டர்கள் மக்களின் வரிப்பணத்தில் உருவாகிறார்கள். இந்திய/மாநில அரசுகள் ஒரு டாக்டரை உருவாக்க கோடிகள் செலவழிக்கிறது என்பது நிஜம். எல்லாம் மக்களின் வரிப்பணம்தான் என்பதை மறுக்கவும் முடியுமா? (பேமெண்ட் சீட் டாக்டர்களை சொல்லவில்லை). டாக்டர்களிடம்தான் சேவையை எதிர்ப்பார்க்க முடியுமே தவிர நடிகர்களிடம் அல்ல.

போராளிகள்: 
அப்போதைக்கு எழும் பிரச்சினைகளுக்கு பொங்கினால் போதும். எந்த ஒரு பொங்கலையும் மூன்று நாளுக்கு மேல் டிரெண்ட் செய்வதில்லை என்கிற மறதியுடன். டெங்கு தீவிரமாய் இருக்கும் வேளையில் நடிகனின் படத்திற்க்காக நம் நேரங்களையும், அரசையும் விமர்சிப்பதை விடச்சொல்லவில்லை கொஞ்சம் குறைத்து மற்ற பொது விஷயங்களிலும் நம் விமர்சனங்களை வளர்க்கலாமே?

ஆக எதைச்செய்தாலும் கொஞ்சம் யோசித்து செய்வது நலம்!!!

Monday, September 25, 2017

The Big Sick - English Movie 2017

The Big Sick - English 2017
தி பிக் சிக் - ஆங்கிலம்.

எப்போதாவது ஹாலிவுட் படங்களில் இந்திய, பாகிஸ்தானி திறமைசாலிகள் கலக்கிவிட்டுப்போவார்கள். மனோஜ் நைட் சியாமளன், ஓம் பூரி, தேவ் படேல், இர்ஃபான் கான், நஸ்ருதின் ஷா, ஏ ஆர் ரஹ்மான் இவர்களையெல்லாம் தாண்டி இன்று இயக்குனராக, நடிகராக, ஸ்டேண்டப் காமெடியனாக பாகிஸ்தானி ஆள் ஒருவர் ஹாலிவுட்டை தன்வசமாக்கிக்கொண்டிருக்கிறார். அவர்...

குமாய்ல் நஞ்சியானி. 18 வயதில் பாகிஸ்தான் வந்தவர் இந்த வருடம் தன் சொந்தக்கதையை திரைப்படமாய் எழுதி 5 மில்லியன் செலவில் எடுத்தப்படம் இன்று வரை 100 மில்லியன்களை தாண்டி சம்பாதித்துக்கொண்டிருக்கின்றது.

"தி பிக் சிக்". அமெரிக்காவில் வசிக்கும் கட்டுப்பாடான, பாரம்பர்ய முஸ்லிம் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாய் குமாய்ல் நஞ்சியானி, 18 வயது முதல் அமெரிக்காவில் வளர்ந்ததால் மத விஷயங்களில் கொஞ்சமும் ஈட்டுபாடில்லாமல் அமெரிக்க ஸ்டைலிலேயே வாழ்கிறார். ஸ்டேண்டப் காமெடி, சினிமா என அவரின் செயலில் பெற்றோர்களுக்கு (அப்பா - அனுபம் கெர்) விருப்பமில்லை. வாரா வாரம் பாகிஸ்தான் பெண்ணோருத்தியை வீட்டுக்கு அழைத்து கல்யாணம் செய்துவிட நினைக்க, குமாய்ல் எஸ்கேப் ஆகிக்கொண்டே இருக்கிறார்.

ஒரு நாள் இரவில் ஸ்டேண்டப் காமெடியில் எமிலியை சந்திக்கிறார், இரவில் இணைகிறார்கள், அடுத்த நாளும் இணைகிறார்கள். ஒரு வாரத்தில் அடிக்கடி சந்தித்து எமிலிக்கு குமாய்லை பிடித்துப்போக காதலை சொல்ல நினைக்கிறாள். அங்கே குமாய்லின் டேபிளில் இருக்கும் பல முஸ்லிம் பெண்களின் போட்டோவைப்பார்த்து கோபம் கொள்கிறாள். அவை தனக்கு மணம் முடிக்க பெற்றோர்கள் காட்டிய பெண்கள் என சொல்ல, வீட்டைவிட்டு அழுதுக்கொண்டுப்போகிறாள்.

சட்டென்று ஒரு வாரம் கழித்து மருத்துவமனையிலிருந்து போன் வர அங்கே உடல் நிலை சரியில்லாமல் எமிலி. அதிக டிரக்ஸ் எடுத்ததால் உடல் பாதிக்கப்பட்டு அடுத்த நாள் கோமாவுக்குப்போகிறாள். எமிலியின் பெற்றோர்கள் வரவழைக்க, முதலில் குமாய்லை வெறுக்கும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்துக்கொண்டு ஒன்றாய் ஹாஸ்பிடலில் இருக்கிறார்கள். நோய் பரவி இன்ஃபெக்க்ஷன் தீவிரமாக ஆபரேஷன், ஹாஸ்பிடல் சரியில்லை என மாற்ற நினைக்க, அன்று எமிலியின் ரூமுக்கு மூவரும் செல்ல், அவள் ரூமில் குமாய்லின் போட்டோக்கள், நினைவுகள் என பலதைக்கண்டு எமிலியின் உண்மைக்காதலை புரிந்துக்கொள்கிறான் குமாய்ல்.

எப்படியோ நோய் சரியாக, ஹாஸ்பிடலில் குமாய்லை காணும் எமிலி அவனை வெளியே அனுப்பச்சொல்லி வெறுக்கிறாள். தன் கனவு வேலையான நியூயார்க்குக்கு குமாய்ல் செல்கிறானா? எமிலிக்கு கோபம் குறைந்ததா? பாகிஸ்தானி குடும்பத்தின் நிலை என்ன என்பதை படத்தைப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

படத்தில் ஹைலைட்டான விஷயம் படம் முழுக்க வரும் காமெடி, பாகிஸ்தான், முஸ்லிம் மதம், கலாச்சார பிரச்சினைகள் என அனைத்திலும் இருக்கும் பிரச்சினைகளை போல்டாக காட்டியிருக்கிறார் இயக்குனர். பிரேயர் செய்வதாய் நடிப்பது, பாகிஸ்தானின் டெரரிஸ்ட் பிரச்சினைகளை நக்கலாக தாக்குவது, மதத்தில் இருக்கும் பிரச்சினைகளை விவாதிப்பது என ஆங்காங்க்கே கைத்தட்டல் பெறுகிறார்.

வயிறு வலிக்கும் காமெடியும், அழகான காதலும், காமமும், கோபமும், பிரிதலும், புரிந்துக்கொள்ளலும், செண்ட்டிமெண்ட்டும்  என பக்கா இந்தியா, பாகிஸ்தான் படத்தின் சாயல் இருந்தாலும் ஹாலிவுட் தரம் என்பது கூடுதல் சிறப்பு.

நிச்சயம் பாருங்கள், எமிலி வி கோர்டன், குமாய்ல் நஞ்சியானி தம்பதியினரின் உண்மைக்கதை உங்களை மகிழ்விக்கும். <3

Thursday, January 21, 2016

சீரியஸா படிங்க...இதுதான் சங்கதி!!!சீரியஸா படிங்க...இதுதான் சங்கதி!!!

ரொம்ப நாளுக்கு முன்னாடி நம்ம ஊர் பருத்தி விதை இருந்துச்சி.

அமெரிக்காக்காரன் கொடுத்த இலவச மரபணு பருத்தி விதையை வாங்கி விளச்சவனுக்கு முதல் மூன்று முறை இலவசமாய் அவன் விதையை கொடுத்தான் வெள்ளையன். மகசூலும் நல்லா வந்தது.

இரண்டாம், மூன்றாம் முறை கொஞ்சமா காசு வாங்கினான் வெள்ளையன். அடுத்த முறை அதிக காசு கேட்டான், இவன் விதையை பயன் படுத்தியதால் நிலமும் மலடாகி உற்பத்தியும் குறைந்தது. பாரம்பர்ய பருத்தி போய் கலப்பு மரபணு பருத்தி வந்தது. மரபணு பருத்தியின் மகசூலும் குறைந்தது. ஏமாந்தான் விவசாயி.

அடுத்ததாய்...

நாட்டுக்கோழிகளுக்கு பதிலாக பிராய்லர் கோழிப்பண்ணைகள் தொடங்க காசு கொடுத்தான். உடம்புக்கும், சத்துக்கும் உதவாத பிராய்லர், வெறும் கொலஸ்ட்ரால் சதை கோழிகளை சாப்பிட்டு நம் உடலும் வீணானது. அதன் கருவில்லாத முட்டையும் உடலில் சேர்ந்து கொழுப்பானது.

நாட்டுக்கோழியினம் அழிந்தே போனது, நாட்டுக்கோழி முட்டையும் காஸ்ட்லியாகிப்போனது, கிடைப்பதும் அரிதானது.

இதையும் அடுத்து...

வீட்டு, நாட்டு நாய்களை அழிக்க என்ன செய்தான் தெரியுமா?

டாபர்மேன், பொமரேனியன்,அப்பென்பின்ச்சர்,அமெரிக்கன் புல் டாக், ஆஸ்திரேலியன் ஷெப்பர்ட், பாக்ஸர் இப்படி பலவகை நாய்களை கொண்டுவந்து இந்திய நாட்டு நாய்களுடன் இணையவைத்து மெது மெதுவாக நம் நாட்டு நாய்களான ராஜபாளையம், கொம்பை, சிப்பி பாரை வகை நாய்களை அழித்தான்.

வெறும் அழகுக்காகவும், பந்தாவுக்காகவும் வெளிநாட்டு நாய்களை வளர்த்து நம் ஊர் நாய்களை காணாமல் போகச்செய்துவிட்டோம்.

கவர்ச்சி நடிகைகளை வைத்து "பீட்டா" விளம்பரங்கள் செய்து காசு பார்த்தான். அப்பாவி தெரு நாய்களை பிடித்துச்சென்று குடும்பக்கட்டுப்பாடு செய்து நம் இன நாய்களை அழித்தான். இப்போது அவர்களின் ஜாதி நாய்களை வாங்க குறைந்தது பத்தாயிரமாவது செலவழிக்க வேண்டும். மாதம் அதற்க்கு வெளி நாட்டு பிஸ்கட் வாங்க இரண்டாயிரம் செலவழிக்கவேண்டும்.

பின்னர்...

மரபணு பிடி கத்திரிக்காயை கொண்டுவர பிளான் செய்தான். ஒருவழியாய் எதிர்த்து விட்டோம்.

இப்போது...

வீட்டு காளைகளுக்கு தடை வாங்கி ஆஸ்திரேலிய ஜெர்ஸி பசுக்களை கொண்டுவர பிளான் செய்கிறான். நாளை நம் பசுக்களின் இனப்பெருக்கத்திற்கு காளைகள் இல்லாமல் இனம் அழிவதை கண்ணார காணப்போகின்றோம். சத்தில்லாத ஜெர்ஸி பால் குடித்து நம் பிள்ளைகள் வளரப்போகிறார்கள்.

ஒவ்வொரு சிறிய பிரச்சினைக்குப்பின்னும் ஏதோ ஒரு பெரிய சம்பவத்தின் காரணம் இருக்கும். வெள்ளையனின் ஏகாதிபத்யத்தின் அடுத்த கட்டத்தை நம் மக்கள் மீது தொடுக்க தயாராகிப்போன அவர்களுக்கு நம்ம ஊர் அரசியல் நாய்கள் துணைப்போவது வாடிக்கை.

இன்னும் "வால்மார்ட்" மாதிரியான உதாரணங்கள் ஏராளம் சொல்லலாம்...

விழித்துக்கொள்ளவில்லையென்றால் விலைபோகிவிடுவோம் ஒருநாள் நாமும்!!!

அல்லது...

பண முதலைகள் நம்மையே விற்றுவிடுவார்கள் நமக்கே தெரியாமல்

அப்பாவின் வீடு!!!
அப்பாவின் வீடு!!!
(படம் உதவி கூகுள்)

வருடம் ஒருமுறை, அல்லது இருமுறை
நான்கு அல்லது ஐந்து நாட்கள் திறக்கும்
இந்த அழகான அப்பாவின் வீடு - எங்களின்
கருவறைக்கோயில்

80களின் தொடக்கத்தில் வீட்டுக்கு குடிவந்தபோது
முதன்முதலாய் ஊரில் கட்டப்பட்ட டெரஸ் வீடு
கட்டி முடிக்கப்படாத புறா கூண்டு - நாங்கள்
இறக்கை முளைக்காத குஞ்சுகள்.

கோணி சாக்குப்பைகளால் மூடிய சன்னல்கள்
பழைய பலகைகள் சாய்த்து மறைக்கப்பட்ட கதவுகள்
சிமெண்ட் பூசி மெழுகப்படாத செங்கல் சுவர்கள் - பழைய
புடவை சுற்றப்பட்ட தற்காலிக குளியலறை

முதலில் அடித்தளம் போட்டு ஆறு மாதம்
அடுத்து சுவர் எழுப்பி ஐந்து மாதம்
பின்னர் நெலவுகள் வைத்து நான்கு மாதம் - என
கடைசிவரை விட்டு விட்டு கட்டிய மாட மாளிகை

வைப்பு நிதி லோனில் தொடங்கிய அடித்தளம்
சிக்கன குடும்ப பட்ஜெட்டில் நிற்கும் பில்லர்கள்
குருவி சேமிப்பில் வளர்ந்த மொத்த சுவருகள் - அன்பு
அம்மாவின் நகைகளில் கழிந்த கிரகப்பிரவேசம்

குழந்தைகளாய் வீட்டுக்குப்போய்
படித்து, பட்டம்பெற்று, காசு பார்த்து
கல்யாணம் செய்து, சந்தோஷமாய் - வாரிசுகளாய்
பேரன்களை கண்ட ராசியான அப்பாவின் வீடு

ரோட்டோரத்து வீடு என்பதால்...
ஊரார் எப்போதும் நலம் விசாரிப்பார்கள்
சொந்தக்காரர்கள் அடிக்கடி வந்துப்போவார்கள்
பெரியவர்கள் திண்ணையில் கதைப்பேசி செல்வார்கள் - அலுக்காமல்
அம்மா காப்பி, தண்ணி கொடுத்தே அசதியாவார்கள்

வார இறுதி நாட்களில்...
சிறிய தங்கை பாட்டு பாட
இரட்டையன் கட்டையில் தாளம் போட
பெரியண்ணன் குதித்து ஆட்டம்போட - ஊரின்
ஓரப்பார்வை ஏக்கத்துடன் வீட்டை கடக்கும்

அப்பா கதைகள் சொல்வார்
அப்பா பாடல்கள் இசைப்பார்
அப்பா பாடம் நடத்துவார்
அப்பா சிரிக்கவைத்து மகிழ்விப்பார்
அப்பா சமைத்து சுடச்சுட பரிமாறுவார்
அப்பா ஓவியங்கள் வரைந்து அசத்துவார் - ஆனாலும்
அப்பா எங்களை அடித்ததே இல்லை அவரின் இந்த வீட்டில்

அப்பாவிடம் மீன்கள் கேட்டால்.., தூண்டில் வாங்கி தருவார்
அப்பாவிடம் காசு கேட்டால்.., செலவழிப்பதையும் கற்றுத்தருவார்
அப்பாவிடம் விவாதம் செய்தால்.., விவரமாய் பதிலளிப்பார் - என்றும்
அப்பாவிடம் அறிவுரை கேட்டால்.., வாழ்க்கை விளங்கும்

பிள்ளைகள் நாங்கள் ஊர் கடந்து உழைக்கப்போக
கடமைகள் ஒருவகையில் முடிந்துப்போனதால்
அப்பா ஒரு நாள் சட்டென்று கண்ணை மூட - ஆளின்றி
காலியானது அப்பாவின் அன்பு வீடு

சிக்கனமாய வாழ்ந்திருக்கிறோம்.., பட்டினிக்கிடந்ததில்லை
சந்தோஷமாய் மகிழ்ந்திருக்கிறோம்.., சண்டைகள் போட்டதில்லை
இடப்பற்றாகுறையில் சிக்கியிருக்கிறோம்.., நிம்மதியான உறக்கம் உண்டு
மருமகனும், மூன்று மருமகள்களும் கண்டிருக்கிறோம் - இன்னும்
அன்புக்குறையவில்லை, பண்பும் மாறவில்லை

அப்பாவின் ஆசையில் பிறந்த வீடு
அப்பாவின் உழைப்பில் வளர்ந்த வீடு
அப்பாவின் உதிரத்தில் கலந்த வீடு
அப்பாவின் வியர்வையில் நனைந்த வீடு - என்றும்
அப்பாவின் ஆசியில் நிலைக்கும் வீடு

வீட்டில் தொங்கும் புகைப்படங்கள் அப்பாவின் கதை சொல்லும்
அப்பா உட்காரும் நாற்காலி அவருக்காக காத்திக்கிடக்கும்
அப்பா உறங்கிய கட்டில் எங்களை அரவணைத்து தவழும் - இங்கே
பூஜை அறை மட்டுமல்லாது மொத்த அறைகளிலும் அப்பாவேதான்

வருடம் ஒருமுறை, வீட்டைப்பூட்டி புறப்படும்போது
போட்டோவில் அப்பா மட்டும் சிரித்தப்படி இருப்பார்
எங்களை ஆசீர்வத்தித்து வழி அனுப்புவார்
நினைவுகளை சுமந்தப்படி அப்பாவின் வீடு அமைதியாய் இருக்கும் - இனி
அடுத்த ஆண்டு விடுமுறை தினத்தில் எங்களை வரவேற்க காத்துக்கிடக்கும்!!!

என்னவள்
அன்பே...

நீ
மென்மையானவள்
என்பது தெரியும்.

ஆனால்...
இவ்வளவு தன்மையானவள்
என்பது தெரியாமல் போனதே.

சிறு தூறல் மழையில்
மழை துளிகள் பட்டு
ரோஜா இதழுக்கு
வலிக்குமென்று
பூந்தொட்டியை
வீட்டுக்குள் ஒளித்து
வைக்கின்றாயே!!!

தற்காலிகம்!!!தற்காலிகம்!!!

விமானத்தில் பறக்கிறேன்
மனம் சிறைப்பட்டுள்ளது

குளிர்சாதன அறையில் உறங்குகிறேன்
தூக்கம் முழித்துக்கொண்டிருக்கின்றது

நட்சத்திர உணவகத்தில் சாப்பிடுகிறேன்
வயிறு இன்றும் நிரம்பவில்லை

கடன் அட்டையில் செலவழிக்கிறேன்
காசு என்னுடையதாய் இல்லை

சம்பளத்திற்காக பணியாற்றுகிறேன்
பணியில் ஆத்மார்த்த பிடிப்பில்லை

ஆடம்பரமாய் சுற்றித்திரிகிறேன்
எளிமையின் மகிழ்வு இதிலில்லை

நான்கு பேர் அண்ணாந்து பார்க்கிறார்கள்
உயரத்தில் நானும் இல்லை

எல்லாம் என்னுடையதாய் நினைக்கிறேன்
என்னில் எனை காணாமல்!!!

காவேரி லாட்ஜ் ஹோட்டல்

காவேரி லாட்ஜ் ஹோட்டல்

சென்னை எக்மோரில் எங்கள் ஓவியக்கல்லூரிக்கு எதிரே பல ஆண்டுகளாய் சுவைமாறாது இருக்கும் ஹோட்டல்.

நாடார்களின் உறவுமுறைகள் பலர் சேர்ந்து நாற்பது, ஐம்பது வருடத்திற்கு முன் ஆரம்பித்த லாட்ஜ் கம் மெஸ்.

90 களில் கல்லூரியில் படித்தபோது மாதம் ஒருமுறை சென்று 17 ரூபாய்க்கு மீல்ஸ் சாப்பிடுவேன். காரணம் அன்றைய என் பட்ஜெட் வாழ்க்கை.

ஊரிலிருந்து யார் வந்தாலும் அங்கேதான் முதலில் அழைத்துசெல்வேன். நான் படித்துக்கொண்டிருக்கும் மாணவன் என்பதால் அவர்களே பில் செட்டில் செய்துவிடுவார்கள்.

என் அப்பா பேங்க் விஷயமாக இரண்டு மாதத்துக்கு ஒருமுறை சென்னை வரும் இரண்டு நாட்களும் கொண்டாட்டம்தான். காலையில் மசால் தோசை, பொங்கல், மதியம் மீல்ஸ் என ரவுண்டு கட்டி சாப்பிடுவேன்.

அவர் ஊருக்கு போனவுடன் அந்த ரோட்டைக்கடக்கும்போதெல்லாம் நாக்கு எச்சில் ஊரும். அடுத்த மணியார்டர் வரை காத்திருக்கணும்.

இன்று அதே மீல்ஸ் 80 ரூபாய், பார்சல் எனில் 90 ரூபாய். மனைவி, மகன், நான் என மூன்றுபேருக்கு டிபன் 300 ஐ தொட்டாலும் மதியம் மீல்ஸ் பார்சல் எங்கள் மூன்று பேருக்கு ஒன்று போதும்.

இரண்டு நாட்கள் சென்னையில் இருந்தபோது காவேரியின் பொங்கல், வடை, ரவா தோசை, என் பேவரைட் மசால்தோசை என வெளுத்து வாங்கியதில் மாலத்தீவில் மனைவி சமைக்கும்போதெல்லாம் அடிக்கடிகேட்கிறேன் "காவேரி டேஸ்ட்டில் இருக்கணும் டியர்" என்றால் அதுக்கு அவள்... "ம்ம்கும், அங்கேயே சர்வரா போய்டுங்க, ஓசியில் திங்கலாம் என்கிறாள்".

இருபது இருபத்திரண்டு வருடம் முன் சாப்பிட்டது...இன்றும் அதே இடம், அதே டேபிள்கள் ஆனால் சுவை மட்டும் கூடிக்கொண்டே...

கிராமத்து மணம் என்பார்களே அது இங்கே கொஞ்சம் அதிகம். சமைப்பவர்கள், பரிமாறுபவர்கள் என அத்தனை பேரும் ஊர் சைடிலிருந்து வந்தவர்கள்.

நீங்களும் சாப்பிட்டுவிட்டு சொல்லுங்களேன்!!! :)

புது வருடம்
புது வருடம்

வழக்கம்போல்...
ஆணிகள்
சுமக்கப்போகும்
இன்னொரு
புது சுமை!!!

Monday, August 10, 2015

என்ன செய்யலாம் சொல்லுங்கள்???


 

எங்கள் ஊரில் (Katary Dam/ Katary Falls) இரண்டு ஏரிகள் உண்டு. இரண்டும் கிட்டதட்ட 100 முதல் 150 ஏக்கர் பரப்பளவிளான அளவைக்கொண்டது.
காமராஜர் அவர்கள் காலத்தின் மின்சார தயாரிப்புக்காக கட்டப்பட்டு முதலில் சில காலம் மின்சாரம் எடுத்ததாகச்சொன்னார்கள். பின்னர் நீர் வரத்து குறைந்ததால் அது மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. அருவங்காட்டில் உள்ள மத்திய அரசின் துப்பாக்கி மருந்து தொழிற்சாலைக்கு நீர் ஆதாரமாகிப்போனது எங்கள் அணை. அதுமட்டுமல்லாது மத்திய அரசின் மருந்து தொழிற்சாலை மக்களுக்கு இந்த நீர் சுத்தகரிக்கப்பட்டு குடிதண்ணீராகவும் இருக்கின்றது.
இதற்கு ஏதாவது அக்ரீமென்ட் செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது முறையில் அரசு இதை எடுத்துக்கொண்டதா என்பதில் தெளிவில்லை. 20 வருடங்களுக்கு முன்பு வரை நாங்கள் அந்த நீரை விவசாயத்திற்க்கும், துணி துவைத்தல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தோம். பின்னர் அங்கே நீச்சல் அடிப்பதும் உண்டு.
கடந்த 10 வருடமாக அந்த நீர் எங்களுடையதாக இல்லை. 24 மணி நேரம் மிலிட்டரி கண்காணிப்பிலும், போட்டோக்கள் கூட எடுக்க முடியாமலும், டேமை சுற்றி ஈவினிங் வாக் போகக்கூட முடியவில்லை. டிபன்ஸ் கட்டுப்பாட்டில் இருப்பதால் இத்தனை கெடுபிடிகள்.
ஆனால் நீர் ஆதாரத்தை எடுத்துக்கொண்ட பேக்டரி நிர்வாகம் எங்கள் ஊரை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததோடு மட்டுமல்லாமல், எங்கள் ஊருக்கு ரோடு வசதி கூட சரியாக செய்து தறுவதில்லை. அந்த வெடி மருந்து பேக்டரியில் எந்த வித வேலைவாய்ப்பு சலுகைகளோ அல்லது மற்ற முன்னுரிமைகளோ இதுவரை எதுவும் கொடுக்கவில்லை. இதனால் எங்கள் ஊர் இளைஞர்களுக்கு நல்ல விஷயம் நடக்குமெனில் மிக்க சந்தோஷமே.

அப்படியிருக்க இதை எவ்வாறு அணுகுவது? அல்லது எங்கு இதன் அக்ரிமென்ட் தகவல்களை பெறுவது?
வேறு என்ன செய்யலாம்? கிட்டதட்ட மூன்று ஊர் மக்கள் இந்த ஏரியை சுற்றி இருக்கின்றோம். 800 குடும்பங்கள் வசிக்கின்றோம். ஆனால் இந்த நீரால் எங்களுக்கு எந்த வித பயனும் இல்லை என்பது சோகமான விஷயம்.
ஊர் மக்களுக்கு நான் எழுதிய கடிதம்...

Hi Everyone,
I am writing this in serious note about our dam and I am looking for proper reply from your hatty senior’s. 15 to 20 years back in our hatty dam we played, swimed and enjoyed a lot. Slowly our hatty dam became prohibited area for our three hatties. 24 hours securities, we are unable to use our dam water for our own necessity like washing or farming.
Apart from this we lost our evening walk or chatting with our own friends near dam or road side. Our hatty looks like heaven we are unable to click photograph of our own dam. This is looking very odd and disgusting for me (I don’t know much about the past details of the dam). Nowadays we can’t use single drop water sources from dam. I agree this is under control of our Central government and our country defence. But because of this what benefit we are getting? Is there any special job allotment for our hatty youngsters?
As per my knowledge generally Water is people’s property. We have all the rights to use the water from our dam. Even for the road work itself we need to walk behind the Factory management.
Now my question is about…
1. Why don’t our elder’s reveal information about our hatty dam, and how come… our dam became under defence.
2. Is there any proper agreement made from our hatty people and government?
3. If yes, do they have promised any other offer for this agreement?
4. Why can’t we approach government or factory management for special placement for our own hatty people?
5. I am looking forward for elder’s or knowledgeable members comments and if I am not satisfied I will file an RTI regarding the same.
I hope this post and comments will help our hatty upcoming youngsters know more about our dam.
If i am wrong i really apologize for my post. But we need to something for our hatty youngsters at Aruvangadu CFA jobs.
Thanks.
God Bless.


Friday, June 26, 2015

மகளிர் தின ஸ்பெஷல் - சுனாமியும் என் குழந்தைகளும்

மகளிர் தின ஸ்பெஷல் - சுனாமியும் என் குழந்தைகளும்

நாளை கொஞ்சம் பிசி என்பதால் இதை இன்றே பதிகிறேன்.

2004 சுனாமி விபத்து முடிந்து நான் பெங்களூரில் இருந்த சமயம். வேலை மாற்றத்தின் காரணமாக சென்னைக்கு வந்து, ஆர்வ மிகுதியால் சாந்தோம், டூமிங் குப்பம், மெரினா இப்படி பல இடங்களில் சுமாமியின் பேயாட்டத்தைக்கண்டு மிரண்டுப்போனேன்.

ஒரு வாரம் கழித்து சென்னையில் பிக் பசாருக்கு குடும்பத்துடன் செல்ல...

அங்கே வோல்ட் விஷன் பிரதிநிதிகள் என்னை அணுகி நாகப்பட்டினத்தில் சுனாமி பாதித்த குழந்தைகளுக்கு உதவுங்கள் என்றார்கள். நானும் எனது எண்ணை கொடுத்து வீட்டுக்கு வரச்சொன்னேன்.

அடுத்த ஞாயிறு அவர்கள் வர, நிறைய பேசினார்கள். இறுதியில் நான் இரு குழந்தைகளை தத்தெடுக்க ரெடி என்றும் ஆனால் தாய் தந்தையை சுனாமியில் இழந்த ஆதரவற்ற பெண்களாக இருத்தல் வேண்டும் எனவும் சொன்னேன். அதன் படி...

ஆறு வயது காவியா, மூன்று வயது ரோசம்மா என அழகான இரு குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதார செலவுகளுக்காக வருடம் இருவருக்கும் தலா 32000 மற்றும் 36000 தருவதாய் டாகுமெண்ட்டில் சைன் செய்து கொடுத்தேன். அவர்களின் கூற்றுப்படி அவர்களின் கல்வி மற்றும் உணவுக்கு நான் பொறுப்பு மற்றப்படி எந்த வித சம்பந்தமும் இல்லை.

மூன்றாவது வருடம் ஒருமுறை நான் சரியான உதவியைத்தான் செய்கிறேனா என அறிய நாகப்பட்டினம் கிறிஸ்துவ அமைப்புக்கு சென்று அந்தப்பெண்களைப்பார்த்தேன். கடந்த காலத்து பாதிப்புகள் அனைத்தையும் மறந்து நார்மலாகி என்னைப்பார்த்தவுடன் தயங்கி தயங்கி வந்தார்கள். எனக்கு அவர்களின் போட்டோவும், டீட்டெய்ல்களும் இருந்ததால் அவர்களை காண்பதில் தடை இருக்கவில்லை.

அவர்களுக்கும் என்னை பற்றி சொல்லியிருந்ததால் அவர்களும் என்னுடன் தயக்கமின்றி பழகினார்கள். ரிஷிக்கு அப்போது ஒன்றரை வயதிருக்கும். அவனையும் கொஞ்சி மகிழ்ந்தார்கள்.

இவையெல்லாம் இப்போது எதற்க்கு என கேட்கிறீர்களா?

சுய தம்பட்டம் அடிக்க அல்ல. காரணம் அன்றைய சின்னப்பெண் காவியா இப்போது பிளஸ் டூ பரீட்சை எழுதிக்கொண்டிருக்கிறாள். அவளின் விருப்பப்படி அவள் டாக்டராக ஆசைப்படுகிறாள். கட்டாயம் ஆவாள். உங்களின் ஆசியும் தேவை.

அவளை டாக்டர் படிக்கும் அளவுக்கு என்னிடமே பொருளாதாரம் இல்லையென்பது தெரிந்தால் கட்டாயம் உங்களிடம் வெட்கப்படாமல் கையேந்துவேன்.

நான் இன்னொரு குழந்தைக்கு முயலாததும், மனைவியின் பெண்குழந்தை ஆசைக்கு ஒத்துழைப்புக்கொடுக்காததற்க்கும் இந்தக்குழந்தைகளை என் குழந்தைகளாகவே பாவிப்பதும் ஒரு காரணம்.

இந்த மகளிர் தினத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக என் வாழ்க்கையில் கிடைத்த முத்துக்கள் இன்னும் வாழ்வில் வளர இறைவனை வேண்டி, அவர்களை இன்னும் கொஞ்ச காலமேனும் அவர்கள் சொந்தக்காலில் நிற்கும் வரை உதவி செய்ய எனக்கு பொருளாதாரம் இடமளிக்கும் அதே இறைவனிடம் வேண்டி, பெண்கள் அனைவர்க்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லி நிறைவுசெய்கிறேன்.

குழந்தைகளின் போட்டோ பிரேம் ஊரில் இருப்பதால் கூகுளிலிருந்து ஒரு படத்தை பதிகிறேன் மன்னிக்கவும்!!!

Dhodda Habba
Dhodda Habba

Dhodda - பெரிய
Habba - பண்டிகை

நேற்று எங்கள் ஊரில் "தொட்ட அப்பா" எனும் பெரிய பண்டிகை. முக்கியமான திருவிழா எங்கள் ஊட்டி லிங்காயத்து படகு மக்களுக்கு.

இந்த நாளில் குடும்பத்தின் எல்லோரும் எந்த ஊரில் வசித்தாலும் ஆஜர் ஆகிவிடுவார்கள். இதன் முக்கிய விஷயம் இன்றைய நாளில் நாங்கள் எங்கள் கழுத்தில் கட்டியிருக்கும் லிங்கத்திற்க்கு பூஜை செய்து பூஜிப்போம்.

மாலையில் நிறைய பார்மாலிட்டீஸ் முடிந்தப்பின் மொத்த குடும்பமும் பெரிய தாத்தா வீட்டில் (குடும்பத்தின் மூத்த வீடு) தாத்தா அமர பின்னர் அப்பா, பெரியப்பா, சித்தப்பா, அண்ணன்கள் பின் நாங்கள், எங்கள் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் ஒன்றாகி பூஜை ஆரம்பமாகி தாத்தா அல்லது குடும்பத்து மூத்தவர் மந்திரங்கள் சொல்வார்.

அவர் தம்மா (தம்பீ) என அழைக்க
நாங்கள் அனைவரும் அப்பா என தொடர்வோம்...

பொதுவாக மந்திரங்கள் இயற்கையை போற்றியும், குடும்பத்தை சரியாய் வழி நடத்தவும், கலாச்சாரத்தை பேணவும் சொல்லப்பட்டதாகவே இருக்கும்.

எங்கள் காடு, விவசாயம், லிங்கம், சமூகம் என அனைத்தையும் பூஜித்து, லிஙத்தை பூஜித்து கழுத்தில் கட்டுவோம். குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் இருப்பின் அந்த குழந்தைகளுக்கும் லிங்கம் கட்டுவோம். பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி பின்னர் எனக்கு பிடித்த சாப்பாடு விஷயம் தொடங்கும்.

அதாவது மிகப்பெரிய வெள்ளித்தட்டில் அரிசி சாதம், ஸ்பெஷலாய் உருவாக்கிய அவரை குழம்பை ஊற்றி என் தாத்தா பிசைய முதல் வாய் அவர் சாப்பிட்டு எங்கள் அனைவரையும் பார்க்க எங்கள் கைகள் அத்தனையும் சாப்பாட்டு தட்டை பதம் பார்க்கும்.

இதுவரை எத்தனை விதமான உணவுகளை பைவ் ஸ்டார் ஹோட்டல் முதல் தெருவோர தள்ளுவண்டி வரை சுவைத்திருந்தாலும் அன்றைய இந்த உணவுக்கு (கூட்டு சாதம்) ஈடு இல்லை.

குடும்பத்தில் பலருக்கு பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள், பொருளாதார ஏத்றத்தாழ்வுகள் என பல இருந்தாலும் இன்றைய நாளில் நாங்கள் அனைவரும் ஒன்றே.

பாயாசத்துடனும் ஆடல் பாடலுடனும் நீண்ட இரவு வரை தொடரும்.

சிறிய வயதுகளில் என் தாத்தா, பின் என் சின்னத்தாத்தா பிறகு விவரம் அறிந்தப்பின் என் அப்பா அவரின் மறைவுக்குப்பின் இப்போது என் பெரியப்பா என விழா தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றது.

எங்கள் குடும்பம் ஒன்பது வீட்டுக்குடும்பம் என்பதால் கிட்டத்தத்த நாப்பது பேர் வரை கூடுவோம்.

நேற்றைய நாளில் நான் இல்லையெனினும் இதன் நினைவுகள் என்னை விட்டு நீங்காதவை, காட்சிகள் கண்முன்னே சுழன்று என்னை தூங்காமல் செய்தது என்பதும் உண்மை.

(படத்தில் காட்டியிருப்பது சேம்பிளுக்குத்தான் அரிசி சாதம் அதில் மிஸ்ஸிங் தட்டும் இதைவிட மிகப்பெரிதாக இருக்கும்)

நானே நானா???
நானே நானா???

1993 ல் ஊட்டியின் அழகான மலை கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து இறங்கியபோது 17 வயது முடியும் நேரம். மிகப்பெரிய நகரத்தில் இறங்கிவிட்ட ஏலியனைப்போலத்தான். மற்றவர்களைப்புரிந்துக்கொள்ளவும், பழகவும், என்னுடன் பழக வைக்கவும் கிட்டதட்ட மூன்று வருடம் பிடித்தது.

கல்லூரியில் சேர்த்துவிட்டுப்போன அப்பா எங்க ஊர் சீனியரிடம் மூன்றாயிரம் ரூபாயைக்கொடுத்துவிட்டு இவனை கவனிச்சிக்கோ என்று சொல்லிவிட்டு செல்ல அதில் வெறும் முன்னூரு ரூபாய் மட்டுமே எனக்காக செலவிடப்பட்டபோது நகரத்தின் இன்னொரு பக்கம் எனக்கு தெரிய ஆரம்பித்தது.

அடுத்த மாதத்தில் முதல்முறையாக ஏதோ வீட்டு ஞாபகத்தில் ஊருக்கு பஸ் ஏற டிக்கெட் கிடைக்காமல் கிட்டதட்ட 17 மணி நேரம் பயணம் செய்து நள்ளிரவு 12 மணி தாண்டி குன்னூரில் மாமா வீட்டுக்கு சென்ற முதல் பயணத்தில் இருட்டின் பயம் முதன் முதாலாய் எனக்குத்தெரிந்தது.

கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர்களின் மிக மட்டமான ரேக்கிங் கொடுமைகள் என்னைப்போன்ற விவரம் அறியாத, தமிழும் அதிகம் பேசிப்பழகியிருக்காத சிறுவனுக்குள் உண்டான பாதிப்புகள் பல. ஒவ்வொரு நாளும் நிம்மதியாய் உறங்க முடியாமல் சீனியர்களின் அட்டகாசங்களைத்தாங்கி, வீட்டுக்கு சொன்னால் கவலைக்கொள்வார்களோ என்று சொல்லாமல் மூடி மறைத்தப்போது கவலைகளை அடக்கி ஏற்றுக்கொள்ளும் அனுபவம் கிடைத்தது.

விடுதிக்கு வரும் வழியில் மற்ற வீடுகளின் சாம்பார் வாசனையோ அல்லது குடும்பமாய் மகிழும் அவர்களின் சந்தோஷங்களை கண்டபோது ஏக்கங்கள் அதிகமாகி மனதினுள் அழுதபோது எல்லாவற்றையும் தாங்கும் பக்குவம் வந்தது.

பண்டிகைகள் இல்லை, கொண்டாட்டங்கள் இல்லை, ஊர் நோக்கிய பயணங்கள் அதிகம் இல்லை, விருந்தினர்களின் வருகை இல்லை என வாழ்க்கையில் வாழ்ந்துக்கடந்த பேச்சிலர் காலங்கள் என்னை ஏதாவது ஒன்றை அடையவேண்டும் என்கிற உத்வேகத்தைக்கொடுத்தது.

ஒரு முறை வீட்டில் கேட்கவேண்டாமென்று ஊர் பெரியவரிடம் கல்லூரிக்கு கட்ட பீஸ் 1500 கேட்க, என்னைப்பார்த்து இதெல்லாம் எங்கிட்டையா கேக்குற, எதை நம்பி உன்கிட்ட பணம் கொடுக்க, போடா என்று சொல்லி விரட்டி அடிக்க அதே பெரியவர் அடுத்த நான்கு வருடம் கழித்து கோயில் திருப்பணிக்கு புத்தகத்துடன் வந்து கையேந்த பத்தாயிரம் ரூபாயை கொடுத்து அவர் வாயடைத்தபோது கொஞ்சம் கர்வமும் வந்தது.

முதன் முறையாய் நானும், நண்பர்களும் தயாரித்த விகடன் மாணவர் பத்திரிகையும், என் போட்டோவும் விகடனில் வந்தபோது என் அம்மா ஊரில் எல்லோருக்கும் காட்டி மகிழ்ந்தபோது பெற்ற தாயை மகிழ்வித்த தனயனானேன்.

மெரீனா பீச்சில் ஒற்றை ஆளாய் நின்றிருந்தபோது கண் முன்னே என் வயது காதல் ஜோடிகளின் களியாட்டங்களைப்பார்த்தபோது நானும் இதே மாதிரி இங்கே காதலியுடன் உலவவேண்டும் என்று தீயாய் வேலைசெய்து இரண்டு மூன்று பெண்களுடன் சுற்றிய இளவயசு அனுபவங்கள் என்னை நான் எவ்வளவு செல்ஃபிஷ்க்காரனாகா வைத்திருந்தேன் என்கிற கோபம் வந்தது.

முதல் முறை சம்பாதித்து அப்பாவுக்கு 500/- ரூபாய் மணியார்டர் அனுப்ப அடுத்த வாரமே 1000/- ரூபாயுடன் வந்த அப்பாவின் மணியார்டரில், சிரஞ்சீவி மகனுக்கு, உன் பணம் கிடைத்ததில் மகிழ்ச்சி, இனிமேல் நீ சம்பாதிக்கும் பணத்தில் உன் செலவுகளைப்பார்த்துக்கொள், ஆனாலும் என் பணம் மாதாமாதாம் உனக்கு வந்து சேரும். என்கிற என் அப்பாவின் பதிலில் புரிதலின் மேன்மை விளங்கியது.

சென்னை மவுண்ட்ரோடு புகாரி ஹோட்டலின் 14 ரூபாய் கேக்கை கிட்டத்தட்ட 12 வருடம் கழித்து அது 44 ரூபாயாக மாறி இருந்தப்போது குடும்பத்துடன் அதே வகை கேக்கை சுவைத்ததும், மீல்ஸ் 18 ரூபாய் என்று இருந்ததால் சாப்பிடாமலேப்போன ஹோட்டலின் சாப்பாடை பின்னர் சம்பாதித்து நண்பர்களுடன் சென்று ஆறு வருடங்களுக்குப்பின் சாப்பிட்ட சாதனைகளைப்பார்த்தபோது மனமிருந்தால் மார்க்கமுண்டு என்கிற போதனை புரிந்தது.

கல்லூரியிலும், வேலை செய்த இடங்களிலும் அன்பான நட்புக்களால் ஹோட்டலில் சாப்பிட்டு வெறுத்துப்போன என நாக்குக்கு அவர்களின் வீட்டு சாப்பாட்டை கொடுத்தபோதும், உடல் நிலை சரியில்லாத காலங்களில் காட்டிய பரிவுகளிலும் சரி, இக்கட்டான சூழனிலைகளில் உதவிய அவர்களின் மனதும் சரி நட்பில் எத்ர்ப்பார்ப்பு இருக்கக்கூடாது என்கிற மந்திரம் கிடைத்தது.

அன்பாய் மனைவியும், அழகாய் குழந்தையும் இணைந்தபோது வாழ்க்கையின் மொத்த இன்பமும் என்ன்னைச்சுற்றியிருந்ததைப்பார்த்தபோது வாழ்தலின் அர்த்தம் புரிந்தது.

ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது அந்த அலுவலகத்திலிருந்த கல்லூரி நண்பன் கேட்ட முதல் கேள்வி என்னைவிட உனக்கு எப்படி அதிக சம்பளம் எனக்கேட்டபோதும், மனைவியின் தங்க வளையல்களை இன்னொரு நண்பனுக்காக கொடுத்து மூன்று வருடம் கழித்து கேட்டபோது நீ கொடுக்கவே யில்லை என்று சொன்னபோதும், லோன் வாங்க என் ஜாமீன் கையெழுத்தை வாங்கி அவன் கட்டாததால் அதையும் வட்டியுடன் நான் கட்டியதையும், 30 வயதில் கோவையில் சொந்தமாய் கம்பெனி தொடங்கி இரண்டு வருடம் நல்லபடியாய் நடத்தி இன்னொரு பாவப்பட்ட நண்பரின் நிலை அறிந்து அதை நடத்தச்சொல்லிவிட்டுவிட்டு ஹைதராபாத் போக அவனின் சதி என்னை பாதாளத்திற்க்கு கொண்டுச்சென்று என் ஒட்டுமொத்த பத்து வருட சேமிப்பையும் காணாமல் போகசெய்தபோது பணத்தின் முக்கியத்துவம் புரிந்தது.

அதேவேளை சுனாமி பாதித்த குழந்தைகளை தத்தெடுத்து அன்றையக்காலத்தில் என் சக்திக்கு மீறி அவர்களுக்காக உதவியதால் கிடைத்த அந்த அன்புச்செல்வங்களின் அழகு மாறாத சிரிப்பால் பணத்தை விட உலகில் பல உன்னத விஷயங்கள் உண்டு என்கிற ஞானம் பிறந்தது.

சென்னையில் மிகப்பெரிய மருத்துவ மனைக்கு என் புராஜக்டை கொடுத்து அதை அவர்கள் திருட்டுத்தனமாய் என்னை ஏமாற்றி இப்போது கோடிக்கோடியாய் சம்பதித்ததை பார்த்தபோது என் மூன்று வருட உழைப்பை ஒரே நாளில் சித்தைத்ததால் ஏற்ப்பட்ட வலி என் கவனக்குறைவை மூளைக்கு புரியவைத்தது.

அடுத்த மூன்று நாட்களில் மலேஷியன் புராஜக்ட் சைன் ஆக மும்பைக்கு மலேஷியாவில் இருந்த ஆட்கள் வந்துவிட, இன்னும் இரண்டு நாளில் 35 லட்சம் எனக்கு வரும் என்கிற நம்பிக்கையில் திளைக்க அன்றைய நாள் என் இன்னொரு பார்ட்னர் உயிரிழக்க ஒட்டுமொத்தமாய் நண்பனும், அந்த புராஜக்டும் அதனால் கிடைக்கப்போகும் பணமும் இல்லாமல் போக வானத்தைப்பார்த்து நான் சொன்னது இனி எல்லாம் கடந்துப்போகும்.

34 நான்கு வயதில் 45 பேர் கொண்ட கம்பெனிக்கு சிஈஓ ஆகி பாக்கெட் நிறைய பணத்தைப்பார்த்துவிட்டு வஞ்சகத்தால் அவர்கள் கம்பெனியை இரண்டு ஆண்டு கழித்து மூடியபோது நாளை முதல் என்ன செய்வோம் என்கிற சிந்தனை தூக்கி அடிக்க திக்கு தெரியாமல் சென்னையின் சந்துகளில் யோசனையுடன் சுற்றிய ஆறு மணி நேரங்கள், நாளை முதல் வாழ்க்கை என்னகும் என்கிற பயம், மனைவியும், மகனும் நிழல்களாய் வந்து கண் முன் சுழன்ற சில மணித்துளிகள் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்கிற பலத்தை தந்தது.

அடுத்த இரண்டு நாளில் அதை விட பெரிய வேலைக்கிடைக்க அடப்பூ... வாழ்க்கை இவ்ளோதானா என்கிற தைரியம் கிடைத்தது.

நொய்டாவில் ஒற்றை தமிழனாய் புராஜக்டுகளில் 300 பேரை சமாளித்தபோது எனக்கு கிடைத்த தன்னம்பிக்கை அடுத்த கட்டத்துக்கு தயாராகிக்கொள் எனும் ஆர்வத்தை தந்தது.

எனக்கானதை அதிகம் மறைத்தது கிடையாது. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். அதனால்தான் முகனூல் என்னைப்பற்றியும், என்னைசுற்றியும் அதிகம் எழுதுகிறேன். இரண்டே நாளில் வெளிநாடு பயணம் நிச்சயமாக இப்போது இங்கே மாலத்தீவில் இருந்தாலும் இன்னும் மூன்று வருடங்களுக்குப்பின் சொந்த ஊரில் செட்டிலாகப்போகும், அதிக சேமிப்பு இல்லாத ஆனால் ஊர் மண்ணை அதிகமாக விரும்பும் நான் சூழ்னிலைகளால் 22 வருடங்களாக ஊருக்கு வெளியேதான் வாழ்க்கை என்றாகிப்போன மாற்றத்தை ஏற்றுக்கொண்டு இப்படியாக புலம்பித்தள்ளுகிறேன் உங்களையும் கஷ்டப்படுத்துக்கிறேன் இதை படிக்கச்சொல்லி!!!

பட்டக்கடன்!!!பட்டக்கடன்!!!

கோடிகளில் வீடு வாங்கியாகிவிட்டது
லட்சங்களில் புது காரும் வாங்கிவிட்டேன்
வீடு முழுக்க டிஜிடல் சாதனங்கள்
உடலை காக்க எலக்ட்ரானிக் வாக்கர்கள்
நகரில் பணக்காரன் என்கிற பதவியும் கிடைத்தாயிற்று
சமூகத்தில் முக்கியமானவன் என்கிற பேரும் வந்தாயிற்று
வருடம் ஒரு முறை திருவிழாவில் ஊருக்கு போனால் போதும்
கோயிலுக்கு நன்கொடை கொடுத்தால்
முதல் மரியாதையும் உடனே செய்வார்கள்
பெரியப்பா வீட்டில் தங்கிவிட்டு அன்றே திரும்பிவிடலாம்!!!

ஆனால் என்ன...

ஊர் எல்லையை கடக்கும்போது
"அப்பா அது நம்ம தோப்புத்தானே,
தோட்ட வீட்டுக்கு ஏன் கூட்டிகிட்டு போகல?"
என கேட்கும் மகனிடம்...

"என் அப்பா சம்பாதித்ததை விற்றுவிட்டுத்தான்
இந்த நகரத்து பகட்டு வாழ்க்கை"
எனச்சொல்ல முடியாமல்
கூனிக்குருகுது பாவப்பட்ட மனசு!!!

இழந்த பொழுதுகள்நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேங்காய் மூடியில் கொஞ்சம் பால், சர்க்கரை மற்றும் துருவிய தேங்காய் மூன்றும் சேர்த்து மொட்டை மாடியில் வைத்துவிட்டு காலையில் மூஞ்சிக்கழுவாமல் ஓடிப்போய் பார்த்தால் கட்டியான ஐஸ்கிரீம் ரெடி, ஊட்டி குளிருக்கு தொண்டைக்குழியில் சூடாய் இறங்கும் சுகம்.

டிசம்பர் காலக்குளிரில் மார்கழி மாதத்தில் ஊரை சுற்றி பஜனைபாடல்கள் பாடிய காலங்கள், பல வீட்டு பாயாசம், சுண்டல், கேசரியின் சுவைகள்.

சீசனுக்கு ஏத்தமாதிரி கோலிக்காலம், சீட்டுக்காலம், ஃபிலிம் ரோல் காலம், கில்லிக்காலம், பம்பரக்காலம், கிரிக்கெட், புட்பால் காலம், நீச்சல் காலம், எங்கள் ஊர் டேம் வருடத்தில் மூன்று மாதம் வரண்டுப்போயிருக்க அங்கே ஊரே விளையாடும் விளையாட்டுக்காலங்களை மிஸ் செய்வது.

ஊரில் எந்தப்பெரியவர்களைப்பார்த்தாலும் ஓடிப்போய் குனிந்து கும்பிட, அதில் சிலர் தலையை விடாமல் பிடித்து வைத்துக்கொண்டு இரண்டு மூன்று நிமிடங்கள் வாழ்த்தி மந்திரம் சொல்ல வேண்டாவெருப்பாய் நெளிந்த நாட்கள் இனி இல்லை.

மாதம் இரு முறை என் அம்மா என் பாட்டி வீட்டுக்கு போக, மாலை நெருங்க நெருங்க அம்மாவுக்காக காத்திருப்போம். ஆனால் அது அம்மாவுக்காக அல்லவே அல்ல...பாட்டி செய்து கொடுக்கும் குண்டு இட்லியும், கார சட்னியும் கூடவே கேசரிக்காகவும்தான். அம்மா வந்தவுடன் ஓடிப்போய் பையை பிடிங்கிய காலங்கள் இனி கிடைப்பது அரிது.

ஆடிக்கொரு முறை அம்மாவாசைக்கொருமுறை ஊட்டி, குன்னூர் கூட்டிப்போவார்கள், என் ராசிப்படி பலமுறை கிளம்பி பஸ்ஸுக்கு காத்திருக்க பஸ் வரவே வராது அப்படியே அரிதாய் வந்தால் கண்டக்டர் அண்ணனிடம் அண்ணா இன்னக்கி ஊட்டியில மசால் தோசை கிடைக்கும்தானே என்று நாக்கை சப்புக்கொட்டிய உன்னத தருணங்கள் வருமா?

டிவிக்கள் வந்தப்புதிதில் தாத்தா வீட்டில் டிவி வர ஞாயிற்றுக்கிழமைகளில் ராமாயணம் பார்க்க ஊரே திரண்டு நாப்பது நாப்பத்தைந்து பேராய் பார்த்து ரசித்த மறக்க முடியாத இனிய பொழுதுகள்

சனிக்கிழமை அண்ணன் பள்ளிக்கு கலர் டிரஸில் போக நான் அன்று அண்ணனின் யூனிபார்ம் கோட்டை மாட்டிக்கொண்டு, தொள தொள கருப்பு ஷீவையும் தூக்கி சுமந்துக்கொண்டு, மாமா வாங்கிக்கொடுத்த வெள்ளை தொப்பியுடன் கிரவுண்டில் கிரிக்கெட் நடுவராய் இருக்க, திருட்டுத்தனமாய் செய்த விஷயம் ஒரு நாள் அண்ணா கண்ணில் பட்டு துரத்திய ஓட்டங்கள்

டேய் பிளீஸ்டா, இந்த லெட்டரை போய் கொடுடா என கூடவே மிக்சர் பாக்கெட்டையும் அடுத்த தெரு அக்காவுக்கு கொடுக்க சொல்லி எங்க தெரு அண்ணன் கொடுக்க லெட்டரை அந்தப்பெண்ணின் அம்மாவிடமும், மிக்சரை என் வாயிலும் போட்டுக்கொடுத்த காதல் துரோகங்கள்

சித்தப்பாவின் முதுகில் குரங்காய் உட்கார அவரும் முதலையாய் என்னை சுமந்துக்கொண்டு இந்தக்கரை முதல் அந்தக்கரை வரை நீத்திச்சென்ற திக் திக் நிமிடங்கள்.

அவள் நான்காவது படிக்கும்போது வேறு ஊருக்குப்போய்விட இரண்டு மாதம் ஒரு முறை ஊருக்கு வருவாள். இதை எப்படியாவது கேள்விப்பட்டு அன்று மட்டும் மூன்று முறை முகம் கழுவி, அந்தக்குளிரிலும் இரண்டு முறை குளித்து ஸ்மார்ட்டாக அவள் கண்ணில் பட வீடு வழியே பல முறை நடப்போம். இறுதியில் அவளின் அந்த அரை நொடிப்புன்னகை...சொல்ல வார்த்தைகள் கிடைக்காத அறியா குழந்தைக்காதலின்(!) இன்பக்காட்சிகள்.

லீவு நாட்களில் சீசனுக்கு ஒரு பழம் காய்க்க காடு மலைகள் ஏறி வித விதமான பழங்களை சுவைத்தக்காலம். பாதிப்பழங்கள் அடுத்தவர் தோட்டத்திலிருந்து பறிக்கும் திருட்டுப்பழங்களின் சுவையை ரசித்த ரம்மிய நாட்கள்.

வாரம் ஒரு முறை குமுதமும், ஆனந்த விகடனும் வர அண்ணா தம்பிக்குத்தெரியாமல் பேப்பார்காரரிடம் வாங்கி ஒளித்துவிட்டு பள்ளிச்சென்று மாலை வந்தவுடன் முகம் கழுவாமல் படித்த வெட்டிப்பொழுதுகள்

மழை நாட்களில் வீட்டுக்குள் முடங்கி அம்மா செய்த முறுக்கையும், வடையையையும் நாள் முழுக்க சூடான காப்பியுடன் சுவைத்தக்காலங்கள், கதவுக்கு வெளியே "சோ" வென மழைக்கொட்ட பக்கத்து வீட்டு அம்மாக்களும் கதைப்பேச வீட்டுக்கு வர தூங்கிய மாதிரி நடித்து புரளிக்கேட்ட பொழுதுகள்

இன்னும் எத்தனையோ இருந்தாலும்...மேல் சொன்னவைகள் இனி நடக்க வாய்ப்பில்லை. நான் மட்டுமல்ல இந்தத்தலைமுறைக்கும் இந்தமாதிரி நிகழ்வுகளை ரசிக்க ராசியில்லை அல்லது நேரமும் இல்லை. ஒவ்வொரு தலைமுறையோடு சில உன்னத விஷயங்களை மனிதன் இழப்பதும் வாழ்வியலின் ஒரு பகுதி. முடிந்தால் உங்கள் சந்ததியினருடன் பழைய சம்பவங்களை பகிர்ந்து சந்தோஷப்படுங்கள்.

ஆனாலும் வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாய் ஆக்கி மற்றவர்களையும் சந்தோஷப்படுத்த நாம் முயலவேண்டும்!!!

எனக்கும் ஒரு ரயில் கதை தெரியும்.
அவர் ஒரு படித்த அப்பாவி, மற்றவர்களை நம்பி மோசம்போனவர். தனது அப்பாக்கள் காலம் வரை சுகமாய் ஜீவித்துவிட்டு இவரின் காலத்தில் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து ஏமாந்துப்போனவர். ஆனால் யார் இவரைப்பார்த்தாலும் இவரின் உண்மை நிலை அறியாது இவரை அவமதிப்பார்கள். ஆனால் இந்த அப்பாவியின் நிலை வேறு தாத்தா அரசு ஊழியராக இருந்தார், இவரின் அப்பாவும் அரசு ஊழியராகத்தான் இருந்தார். இவரின் நிலை வந்தப்போது காலம் மாறிவிட்டது. அரசு வேலை இவருக்கு குதிரைக்கொம்பானது.

இதோ இப்போதுக்கூட தனது 45ஆவது வயதில் அரசு வேலைக்கான நேர்முகத்தேர்வு விஷயமாக சென்னைக்கு செல்ல மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் காத்துக்கிடக்கிறார், ஒரு மணி நேரம் முன்னதாகவே. இத்தனைக்கும் சரியாக மூன்றுவாரத்திற்கு முன் முன்பதிவு செய்து ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டும் வைத்திருக்கிறார். கையில் சிறிய தலையணை, பெட்ஷீட், தண்ணீர் பாட்டில், சைவ உணவு பார்சல் கூடவே ஒரு தலை வலி மாத்திரை ஒன்றும், நீலகிரி தைலமும் உண்டு.

ஆறு பத்துக்குத்தான் ரயில் வரும் ஆனால் இவர் 5 மணிக்கெல்லாம் வந்துவிட்டார். நேரம் தவறாமை இவருக்கு முக்கியம். கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருக்கிறார் யாருக்கும் தொல்லைக்கொடுக்காமல்.

நேரம் ஆக ஆக கூட்டம் கூடியது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் இன்னும் அதிகமாகி சலசலப்பும் ஜாஸ்தியாக எல்லோரும் ரயில் வந்து நிற்க்குமுன்னே முண்டியடித்து ஏற ஆரம்பித்தனர். இவரும் மெதுவாய் தனது கம்பார்ட்மெண்டை தேட இதோ எஸ்4 வந்துவிட்டது. அதற்க்குள் பெரிய சூட்கேஸுடன் வந்த ஒருவர் இவரின் முதுகை சரியாய் முட்ட இவரும் நிலை குலைகிறார். இவரை முட்டியவர் இவரைப்பார்த்து "யோவ்...பாத்து போகக்கூடாதா?" என எரிச்சலுடன் இவரைப்பார்க்க இவரும் "மன்னிக்குடுங்க" என்கிறார். கலிகாலம்.

இவரின் இருக்கை மிடில் பெர்த். தனது பொருட்களை கீழே வைத்துவிட்டு உட்கார திடுமென்று ஒரு கூட்டம் ஏறி இவரின் மடியிலேயே உட்காருகிறது. அந்தக்கம்ம்பார்ட்மெண்ட்டே நிரம்ப இரயில் புறப்பட தயாராகிறது.

"கொஞ்ச தள்ளி உக்காரு சார்" என் அதட்டல் வர இவரும் நகர்ந்து ஜன்னலோடு ஒட்டி உட்காருகிறார். நாலுபேர் உட்காரும் இடத்தில் ஆறுபேர் உட்கார்ந்துக்கொண்டு இவரை அதட்டுகிறார்கள்.

ஒருவர் இவரின் வாட்டர் பாட்டிலை இவரிடம் கேட்காமலேயே எடுத்து வாய்க்கொப்பளித்து துப்பிவிட்டு இன்னும் கொஞ்சம் பான் பராக்கை போட்டு மெல்லுகிறார்.

இன்னொருவர் சார் இந்தப்பையை கொஞ்சம் பிடிங்க என்று ஆறு கிலோ பெரிய பையை இவரின் தொடையின் மேல் வைக்க, இவரும் கொஞ்சம் கீழே இருக்கும் இடத்தில் வைக்க நினைக்க "யோவ் கீழே வைக்காதய்யா ஒரே அழுக்கா இருக்கு" என்கிறார். அவரும் அந்தப்பையை இறுக்கமாய் பிடித்துக்கொள்கிறார்.

கோயமுத்தூர் ஸ்டேஷன் வர இன்னும் கூட்டம் ஏறுகிறது. "யாருதுங்க மிடில் பர்த்?" என புதிதாய் ஏறிய குடும்பம் கேட்கிறது. இவரும் "என்னுது தாங்க" எனச்சொல்ல "நீங்க லோயர் பெர்த்துல படுங்க, என் பொண்டாட்டி மிடில் பெர்த்துல படுக்கட்டும்" என்று சொல்லி இவர் சம்மதம் சொல்லும் முன் மிடில் பர்த்தில் எல்லாவற்றையும் வைக்கிறார். அந்தம்மாவும் மிடில் பர்த்தில் ஏறி காலில் இருக்கும் செறுப்பை கழட்ட அதுவும் இவரின் தலையிலேயே விழுகிறது. இவரும் அதை பத்திரமாக கீழே வைக்கிறார் ஒன்றும் சொல்லாமல்.

கொஞ்சம் குளிரவே தனது தலையணையை தேட அதை அப்போதே ஒருத்தர் கீழே விரித்து உட்கார்ந்திருக்கிறார். "யோவ் தயிர்சாதம் கீழே குண்டி வலிக்குதுய்யா, அட்ஜீஸ் பண்ணிக்கோன்னு" நக்கலாய் சிரிக்கிறார்.

டின்னர் நேரமென்பதால் பலர் சாப்பிட்டுக்கொண்டிருக்க, இவர் தனது சாப்பாட்டு பார்சலை சாப்பிட எடுக்க வயதான ஒருவர் வந்து "பசிக்குதய்யா" என இவரும் தன் சாப்பாடைக்கொடுக்கிறார், சாப்பாடை வாங்கியவருக்கு அது தயிர்சாதம் என்று தெரிந்தவுடன் "யோவ் இதை மனுஷன் தின்பானா, பிரியாணி கட்டிகிட்டு வரக்கூடாதாய்யா!" என்று தூக்கியெறிந்துவிட்டு அடுத்தக்கம்பார்ட்மெண்ட்டில் பிச்சை எடுக்க செல்கிறார்.

ரயில் ஈரோட்டை நெருங்க டிடிஆர் டிக்கெட்களை பரிசோதிக்க வர மெதுமெதுவாய் கூட்டமும் நகர்கின்றது, அந்தக்கம்பார்ட்மெண்ட்டில் இத்தனை நேரம் இம்சைகள் செய்த எவரும் சரியாக முன்பதிவு செய்யாதவர்கள். அனுமதியின்றி ஏறியவர்கள். சிலரிடம் டிக்கெட்டே இல்லை. கொஞ்சப்பேர் கதவருகில் போக, சிலர் டாய்லட் அருகில் போக இவரும் நிம்மதியாய் உறங்கலாம் என நினைக்கையில் டிடிஆர் அந்தப்பக்கம் நகர்ந்ததால் அந்தப்பழையக்கூட்டமும் பழையப்படி வந்து இவரின் இடத்தை அடைக்கிறது. ஆனால் இவரின் சொந்த இடமான மிடில்பெர்த்தில் இன்னொரு ஜீவன் நிம்மதியாய் உறங்க ஆரம்பித்துவிட்டது.

இவருக்கு தெரியும்..."நான் தூங்கணும்" என்று சொன்னாலும் அவர்கள் விலக மாட்டார்கள், "யோவ் அதான் இத்தனைக்காலம் காலை நீட்டி தூங்குனது போதாதா?" "ஒரு நாள் தூங்கலைன்னா என்ன செத்தா போய்டுவே!" என வார்த்தைகப் பறந்து வரும் என்பது இவருக்குத்தெரியும்.

காரணம் இவருக்கு சண்டைப்போடத்தெரியாது. வீண் பிரச்சினைகளுக்கும்போகத்தெரியாது. எனக்கென்னமோ இவர் சென்னை வரை உறங்கப்போவதில்லை, மற்றவர்கள் இவரை உறங்கவிடப்போவதில்லை...நாளைவேலைத்தேர்விலாவது உண்மையான திறமைக்கு மதிப்பளித்தால் இவருக்கு கட்டாயம் அந்த வேலை கிடைக்கும், நல்ல காலமும் பிறக்கும் என உங்களைப்போலவே நானும் எண்ணி எதிர்ப்பார்த்து உறங்காமல் இருக்கிறேன், பிராத்தனைகளுடன்!!!

அலெர்ட் பிளீஸ்!!!அலெர்ட் பிளீஸ்!!!

எத்தனை முறை சொன்னாலும் மக்களுக்கு புரிவதில்லை, படித்தவர்களே மீண்டும் மீண்டும் அதிக தவறு செய்கிறார்கள்.

மாலத்தீவு வந்தப்பின் இதே இன்னொரு கேஸ். ஏஜெண்ட்டை நம்பி லட்சங்கள் அந்த படுபாவிக்குக்கொடுத்து பின்னர் இங்கே வந்து சேர்ந்த மதுரைக்கார செஃப்புக்கு வந்த இரண்டு மாதமும் சம்பளம் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் மதுரை தாஜ் குரூப்பில் வேலை செய்து அதைவிட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறார்.

ரெசார்ட்ஸில் வேலை என்று ஏஜெண்ட் சொல்ல இங்கே வந்தப்பின்தான் தெரிந்ததாம்...அது ஒரு சாதாரண ரெஸ்டாரண்ட் என்று. இங்கே வேலை செய்யும் பெங்காலிகள் பலருக்கு பல மாதங்களாக இருக்க அவர்களுக்கு தங்க இடமும், சாப்பாடும் கொடுத்ததால் இங்கேயே இருக்கிறார்களாம்.

நிற்க.

இப்போது பல வசதிகள் இருப்பதால் வேலை கிடைத்தவுடன் இணையத்தில் ஆராயுங்கள்.

ஏஜெண்ட்டிடம் முன் பணம் கொடுக்காதீர்கள்.

ஒன்றிர்க்கு இரண்டு முறை சரியாய் விசாரியுங்கள். ஏஜெண்ட்டின் ரிஜிஸ்டரேஷன் எண்களை சரிப்பாருங்கள்.

உங்களின் அதிக கஷ்டங்களை சொல்லி எந்த வேலையாயினும் பரவாயில்லை என்று இறங்கி வராதீர்கள்.

முடிந்தால் அங்கே வேலைசெய்பவர்களை அந்த ரெசார்ட்ஸின் பெயரைப்போட்டு தேடுங்கள், கட்டாயம் ஒருத்தரையாவது முகனூலில் பிடிக்கலாம். அல்லது அங்கே வேலை செய்து ரிசைன் செய்தவர்கள் இந்தியாவிலேயே யாராவது கிடைக்கக்கூடும்.

சொத்தை வித்து, நகையை வித்து , கடனை வாங்கி இரண்டே மாதத்தில் மீண்டும் ஊருக்கு ஏமாந்து செல்வதென்பது கொடுமை.

அவ்வப்போது சந்திக்கும நண்பர்களின் மனக்கவலைகளை கேட்கும்போது உறங்கமுடிவதில்லை.

இறுதியாக ஒன்று...

நம்ம ஊரில் உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையும், பைசா கமிட்மெண்ட்டும் இல்லையெனில் மட்டும் வெளினாடு வேலைக்கு முயற்சி செய்யவும்.

இழந்ததை பெறமுடியுமா???


இழந்ததை பெறமுடியுமா???


சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் நீலகிரி மலையென்றால் அங்கே அடர்ந்த காடுகள், வரிசையாய் மலைகள், வானம் பார்க்கும் மரங்கள், ஓடி விளையாடும் மேகங்கள் என அத்தனையும் இருந்தது. ஆனால் இன்று திரும்பிப்பார்க்கின்றபோது மலைகள் மரங்களற்று பொட்டல் காடுகளாய், சிதைந்து மலடாய்ப்போன பூமி என எங்கு காணினும் வெறுமை.

அன்றைய காலங்களில் மக்கள் எப்போதாவது காட்டு யானைகளையோ, காட்டெருமைகளையோ பார்க்க நேரிடும். அவைகள் அதன் வழி போய்க்கொண்டிருக்கும், மக்கள் அவர்களின் வேலையை தொடர்ந்துக்கொண்டிருப்பார்கள். தெளிவாக சொல்லவேண்டுமெனில் விலங்குகள் காடுகளிலும் மக்கள் ஊருக்குள்ளும் நிம்மதியாய் வாழ்ந்துக்கொண்டிருப்பர். ஆனால் எல்லாம் கடந்தக்காலங்களில் மாறிப்போய்விட்டது...

மலையின் அழகில் மயங்கி காசு வைத்திருக்கும் வெளியூர் பண முதலைகள், உள்ளூரில் காசுக்காக ஆசைப்பட்டு சொந்த மண்ணை விற்க துணிந்த திடீர் பணக்காரர்கள் என பலர் மலைகளை விலைக்கு வாங்கி ரெசார்ட்ஸ்களகவும், கெஸ்ட் அவுஸ்களாகவும் மாற்ற விலங்குகளின் நடைப்பாதைகள் தடுக்கப்பட்டு, அவைகளின் வாழ்வாதார காடுகள் அழிக்கப்பட்டு வேறி வழியின்றி மெதுமெதுவாய் ஊருக்குள் வர ஆரம்பித்துவிட்டன.

இயற்கை சூழலில் சேர்ந்து வாழும் எங்கள் மக்களால் இப்போது அப்படி வாழ முடியாமல் போனது. காரணம் உணவுக்காகவும், வழி மாறிப்போனதாலும் விலங்குகள் ஊருக்குள் நடமாட ஆரம்பித்துவிட்டன. எப்போதாவது பார்த்த விலங்குகள் இப்போதெல்லாம அடிக்கடி கண்ணில் பட ஆரம்பித்துவிட்டன. அவ்வளவு ஏன் இப்போதெல்லாம் குரங்குகள் வீட்டு கிச்சனுக்குள் வந்து சாதம் இருக்கும் பாத்திரத்தில் சாம்பாரை ஊற்றி தின்றுவிட்டு போகும் அளவுக்கு புத்திசாலிகளாகிவிட்டன.

இன்னொரு கொடுமையான விஷயம்...எங்கள் ஊரில் வீட்டுப்பிராணிகளான பூனையோ அல்லது நாயோ ஒன்றுகூட கிடையாது. எல்லாவற்றையும் இரவில் சிறுத்தைகள் அடித்து தூக்கிக்கொண்டுப்போய்விடுகின்றன. வாரம் ஒரு மாடாவது காணாமல் போய்விடுகின்றது.

காட்டு யானைகள், காட்டெருமைகள், கரடிகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் குரங்குகள் என அத்தனையும் இரவில் ஊருக்குள் வருவது சாதாரணமாகிப்போனது. காலை மத்தியான வேளைகளில் மக்களால் தேயிலைப்பறிக்க போகமுடியவில்லை, விவசாயம் பார்க்க விவசாய நிலங்களுக்குப்போக முடியவில்லை. அவ்வப்போது ஏன் அடிக்கடி விலங்குகளால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

பல தேயிலை தோட்டங்கள் ஆட்கள் இலைப்பறிக்க போவதற்க்கு பயந்து கவனிப்பாரற்று கிடக்கின்றனன். விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் மற்றும் கரடிகளின் அட்டகாசத்தால் காய்கறிகள் காணாமல் போகின்றன. அதனால் மண்ணின் மைந்தர்களாகிய நீலகிரி மக்கள் வேலைத்தேடி மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர் என ஊரை காலிசெய்ததால் ஊரில் கிட்டத்தட்ட பாதி வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. நிலம் வைத்திருந்தவர்களும் நீலகிரியில் இருக்கும் நிலங்களை விற்றுவிட்டு கோயமுத்தூரில் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் சாதாரண மக்கள் இப்போது பயந்து பயந்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் தேயிலை விலை குறைந்துக்கொண்டே வருவதாலும், மலை வாழ் இடத்தில் வேறு ஒன்றும் இல்லாததால் சாதாரண மக்களால் பிழைக்க முடியவில்லை. அரசும் தங்களின் செயல்பாடுகளை தீவிரமாக்காமல், சட்டங்களை விலைக்கு விற்பதால் காடுகளை அழித்து வியாபார நோக்கத்திலான பணமாக்கல்கள் அதிகமாகிவிட்டன.

இயற்கை அழகு கொஞ்சும் இடத்தில் வாழ்ந்துவிட்டு காலை, மாலையில் வெளியே செல்ல முடியவில்லையெனில் அதனால் என்ன பயன்? இருந்தும் அனுபவிக்கமுடியவில்லையே. எல்லாமே விலங்குகளால் ஏற்ப்பட்ட பயம்தான்.

எது எப்படியோ இழந்தது திரும்பக்கிடைக்கப்போவதில்லை. ஆனால் இருப்பதை காப்பாற்றினாலே போதும். அதை நீலகிரியில் வாழும் படுகர், தோடர், தொதவர் இன மக்கள்தான் முன்னின்று செய்யவேண்டும். சில காலமாக எங்களுக்கும் ஒற்றுமையில்லாததால் பல பிரச்சினைகள் கண்டுக்கொள்ளாமலே விடப்பட்டுவிட்டன.

இல்லையெனில்...வருங்கால சந்ததியினர் நீலகிரி என்றொரு மலைவாழ் பிரதேசம் இருந்தது அங்கே படுக மக்கள் வாழ்ந்தார்கள் என்று பாட புத்தகங்களில் மட்டுமே படிக்க வேண்டியிருக்கும்!!!

ராகி களி செய்முறை.

நேற்று பல பேர் கேட்டதால்...

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கப் ரவை சிறிது சிறிதாக அதில் போட்டு கட்டித்தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். அது கொஞ்சம் திடமானவுடன் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

அதில் அரை கப் ராகி மாவை பரப்பி போட்டு தட்டு வைத்து மூடிவிட்டு சிம்மில் வைக்கவும். ஒரு ஆறு அல்லது ஏழு நிமிடம் கழித்து மூடியை திறந்து பெரிய கரண்டிக்கொண்டு கிண்டாமல் நடுவிலிருந்து மெதுவாக மிக்ஸ் செய்யவும். நன்றாக ராகி மிக்ஸ் ஆனவுடன் அடுப்பை ஆப் செய்யவும்.

பின்னர் சாப்பாட்டு தட்டில் கொஞ்சம் குளிர் தண்ணீர் ஊற்று அதில் இரண்டு கரண்டி களியை போட்டு தட்டை இடது கையிலும் வலது கையில் நீரை தொட்டும் உருண்டை பிடிக்கவும்.

சூடான உருண்டை களி கிடைத்தப்பின் விருப்பமுள்ளவர்கள் நடுவில் கொஞ்சம் குழி செய்து நெய்யை ஊற்றி உங்களுக்கு பிடித்த கறியைக்கொண்டு சாப்பிடவும்( பல்லால் கடிக்காமல் அப்படியே முழுங்கவும்).

(இதில் ரவைக்கு பதிலாக மீந்துப்போன சாதத்தை கொதிக்க வைத்து மசித்தும் செய்யலாம்.)

காம்பினேஷன்

களி - பெப்பர் ஜீரா ரசம் - உருளைக்கிழங்கு மற்றும் சிறு கீரை மசித்து செய்த கீரை

களி - அவரை குழம்பு - அப்பளம்

களி - கருப்பட்டி வெல்லம் மிக்ஸ்

நான் வெஜ் சாப்பிடுகளின் ரசனை எனக்கு தெரியவில்லை மன்னிக்கவும்.

களி செய்முறை சொன்ன மனைவிக்கு நன்றிகள்.

Thursday, June 25, 2015

பெண்கள் - அரசியல்இந்தியாவைப்பொறுத்தவரை அரசியலில் பெண்களின் பங்கு அவர்கள் எதிர்ப்பார்த்த 39 சதம் இல்லையென்றாலும், ஆட்சியில் இருந்த பெண்கள், அரசியலில் இருந்தப்பெண்கள் என இதுவரை பலரின் அனுபவம் எப்படி இருந்திருக்கின்றது?
பெண்கள் அரசியலுக்கு அதிகம் வரவேண்டும் என எண்ணுகிற அதே வேளையில் அவர்களின் அரசியல் அணுகுமுறையும் ஆண்கள் பால் அவர்களுக்கு ஏற்ப்படும் ஒரு வித ஆதிக்க மனமும் மாறவேண்டும்.
சில உதாரணங்கள்
இந்திரா காந்தி இரும்புப் பெண்தான். ஆனால் எமெர்ஜின்சி காலத்தில் அவர்களின் அணுகுமுறை?
மாயாவதி ஒற்றை ஆளாய் வென்ற பெண்தான். ஆனால் அவர்களின் புகழையே பரப்ப அவர்கள் செய்த அனாவசிய சிலை செலவுகள்???
மம்தா கீழிருந்து கஷ்டப்பட்டு மேல் வந்த திறமையான ஆட்சியாளர் ஆனால்.கிடைத்த வாய்ப்பை சரியாய் பயன்படுத்தாமல் தனக்கு கீழ் இருக்கும் ஆண்களை கொஞ்சம் அடக்கு முறையோடே கையாண்டார், ஊழல்களும் நிலுவையில் உண்டு.
ஜெயலலிதா நான் சொல்ல என்ன இருக்கு, ஊரே கும்பிடு போடுவதையும், காலில் விழுவதையும் ரசிக்கும் எண்ணம் கொண்டவர். ஊழல் வழக்குகளும் தொடர்ந்து விரட்டுகிறது.
பிரதீபா பாட்டீல் ஜனாதிபதியாக இருந்தபோது குடும்பத்துடன் டூர் போனதில் இந்திய நாட்டின் பணத்தை எக்கச்சக்கமாய் செலவு செய்தவர் பலன் ஒன்றும் இல்லாமல்
கனிமொழி இன்னும் அலைக்கற்றை ஊழலில் சிக்கியிருக்கிறார்.
சோனியா காந்தியை நல்லவங்களா, கெட்டவங்களான்னே தெரியல.
ஷீலா தீட்ஷித் இவர்களும் தில்லியை கைக்குள் போட்டு தவறுகள் செய்தார்.
இன்றைய பிஜேபி அரசில் கிட்டத்தட்ட நான்கு பெண்கள் வசுந்தரா, சுஷ்மா, ஸ்மிரிதா இரானி இப்போது பங்கஜா இவர்களும் சிக்கலில் இருக்கிறார்.
இதனால் ஆண் அரசியல் வாதிகள் மட்டும் நல்லவர்களா என்ன??? அவர்களும் இதே வகைதான்.
ஆனால் நான் சொல்லவந்தது...அரசியலில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் அவர்கள் செய்யும் தவறுகள் இன்னும்பெரிதாக தெரியும் என்பதும் உண்மை.
பெண்களில் நல்ல அரசியல்வாதிகள் இல்லையென்று சொன்னால் என் நாக்கு அழுகிவிடும். ஆனால் அந்த எண்ணிக்கை வெகு குறைவே!!!

அப்பா ஸ்பெஷல்

அப்பா ஸ்பெஷல்அப்பா ஸ்பெஷல்#1

ஒரு இரவு 1983ஆம் வருடம் என நினைக்கிறேன்...இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் ஊர் முருகனின் தேர்த்திருவிழா கோலாகாலம்.

நாங்கள் சாப்பிட்டு தூங்கிவிட்டோம். நான் அரைத்தூக்கத்தில் இருந்தேன்.

என் அம்மாவும் அப்பாவும் பண்டிகைக்கு பட்ஜெட் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

பலகார சாமான்கள் போக...

எனக்கும் என் சகோதரர்களுக்கும்
சட்டை பேண்ட்,
தங்கைக்கு பாவாடை தாவணி,
அம்மாவுக்கு புடவை,
அப்பாவுக்கு வேஷ்டி சட்டை...
என எல்லாம் முடிவானது.

அப்பா அம்மாவிடம் கேட்டார் 'சுமார் எவ்ளோ ஆகும்?'

அம்மா சொன்னார்கள் 'மூவாயிரத்து சொச்சம்' என்றார்கள்.

'ஓ... மூவாயிரம்தான் இருக்கு' என்றார் அப்பா கொஞ்சம் கவலையுடன்.

எனக்கோ அடுத்த மூன்று நாட்கள் தூக்கம் இல்லை...காரணம் சட்டை அல்லது பேண்ட் இதில் ஏதோ ஒன்றுதான் கிடைக்கும் என்கிற கவலை. பட்ஜட் இல்லை என்றாரே அப்பா...கொஞ்சம் கோபமும் வந்தது அப்பாவின்மேல்...
திருவிழாவுக்கு இரண்டு நாள் முன் எல்லாவற்றையும் வாங்கிவந்துவிட்டார். உடனே ஓடிப்போய் எங்கள் பொருட்களை எடுத்துவிட்டோம்.

ஆனால் ஒன்று மட்டும் அங்கே இல்லை...அது என் அப்பாவின் வேஷ்டி மற்றும் சட்டை.
பண்டிகை நாளில் ஊரே புதுசு புதுசாய் ஆடைகளுடன் உலாவ...போன வருடத்து பழைய துணியில் எல்லோரையும் விட மிக மிக அழகாய் இருந்தார் என் அப்பா. கோயிலில் அலங்காரம் செய்த முருகனைவிட இன்னும் ரொம்ப அழகாய்!!!

--------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா ஸ்பெஷல்#2

தாத்தாக்களின் காலத்தில் அவர்களின் அப்பாக்களின் முன்கூட நிற்காமல் மறைந்து நின்று பேசுவார்களாம்.
என் அப்பாக்களின் காலத்தில் என் தாத்தா முன் பவ்யமாய் நின்று என் அப்பா பேசுவார்..
எங்கள் காலத்தில் அப்பாவுக்கு சரி சமமாய் உட்கார்ந்து அரட்டை அடிப்போம்.
இன்றைய காலத்தில் என் மீது ஏறி நின்று உதைத்து பேசுகிறான் அன்பாய் என் மகன்.
தலை முறையில் இடைவெளி விழவில்லை கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கியே வந்துள்ளது!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பா ஸ்பெஷல்#3

உங்களுக்கெல்லாம் உங்க அப்பாதான் ஹீரோ.
ஆனா எனக்கு என் அப்பாதான் வில்லன்.
ஆமாம்...
கேட்டதெல்லாம் வாங்கிதந்து, ஆசைப்பட்டதெல்லாம் நிவர்த்தி செய்து
விரும்பியதை படிக்கவைத்து
அவர் செலவில் கல்யாணமும் செய்துவைத்து
அழகான வீட்டையும் கட்டிக்கொடுத்து
கொஞ்சம் சொத்துக்களும் வைத்துவிட்டு
எல்லாமே கொடுத்து என்னை சோம்பேறி ஆக்கிவிட்ட என் அப்பா எனக்கு பிடித்த நல்ல வில்லன்தான்!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பா ஸ்பெஷல்#4

எனது அப்பா எங்கள் ஊர் திருவிழாவில் ஒருமுறை மேஜிக் செய்தார். மண்ணை, பொட்டு கடலையாக மாற்றி காட்டினார்.
ஊரும், நானும் வாயைப்பிளந்து ஆச்சர்யப்பட்டோம்.
அன்றிரவு வீட்டுக்கு வந்தவுடன் எப்படிப்பா மணலை, பொட்டு கடலையா மாத்தினீங்கன்னு கேட்டேன்.
அவர் கூலாய்...எல்லாம் உன் அம்மாவிடம்தான் கற்றுக்கொண்டேன் என்றார்.
நான் என் அம்மாவை பார்க்க, என் அம்மாவும் பாராட்டிய அப்பாவை பார்த்து வெட்கத்தில் நெளிந்தாள்.
அம்மாகிட்ட அப்படி என்ன கத்துட்டீங்க என்றேன்.
நானாவது மண்ணை, பொட்டு கடலையாக்குறேன். ஆனா உங்கம்மா ரூபா நோட்டை புடவையாக மாற்றுவாள், பணத்தை நகையாய் கூட மாற்றுவாள் என்று சொல்லிவிட்டு...எஸ்கேப்!!!
ஹேப்பி ஃபாதர்ஸ் டே :)
--------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பா ஸ்பெஷல்#5

எங்க அப்பாவும் நானும் ரொம்ப குளோஸ். என் அண்ணா, என் தங்கை எங்க அம்மாகிட்ட ஒட்டிக்குவாங்க.
என் கல்யாண நாளில் என் அப்பாவின் கண்கள் கலங்க.
ஏம்பா கண்ணு கலங்குதுன்னு கேட்டேன்
அத விடுப்பா என்றார் கண்ணை துடைத்துக்கொண்டே
தங்கச்சி கல்யாணத்துல கூட நீ அழலையேப்பா. என் மேல அவ்ளோ பாசமா? ஆவலாய் கேட்டேன்.
அதில்லப்பா, நான் பட்ட கஷ்டத்தை நீயும் இனி படப்போறியேன்னு நினச்சேன், அதான் அழுகை வந்திடுச்சுன்னு எங்கம்மாவை ஓரக்கண்ணால் பார்க்க... என் அம்மா பொய்யாய் முறைக்க, அதுக்குள்ள அப்பா எஸ்கேப்!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பா ஸ்பெஷல்#6

என் அப்பா 30 வருஷத்துக்கு முன் சொன்ன நகைச்சுவை இன்னும் என் மனதில்.
மானேஜர் - யோவ் உன் பேர் என்னய்யா?
கஷ்டமர் - அடைக்கல சாமி
மானேஜர் - வாங்குன லோனை அடச்சியா?
கஷ்டமர் - அடைக்கல சாமி
மானேஜர் - கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஹேப்பி ஃபாதர்ஸ் டே.
--------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பா ஸ்பெஷல்#7

எங்க ஊர்ல ஒரு பாட்டி என் தங்கச்சி கல்யாணத்துக்கு வந்துட்டு எங்கப்பாகிட்டெ சொல்லிட்டு இருந்திச்சி.
குன்னூருக்கு போயும் பஸ்ஸை விட்டேன்,
எல்லனள்ளிக்கு போயும் பஸ்ஸை விட்டேன்,
கேத்தியிலும் பஸ்ஸை விட்டேன். அதான் லேட்டாயிடுச்சு என்றார்.
எங்கப்பா கூலா கேட்டார், எல்லா இடத்திலையும் பஸ்ஸை விட்டீங்களே, அப்ப டிரைவர் என்னப்பண்ணிட்டு இருந்தார்???
ஹேப்பி ஃபாதர்ஸ் டே!!!

Friday, February 13, 2015

தனுஷ் (வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா)
கடந்த மூன்று வருடங்களாக எழுத நினைத்தது. மரியான் டிரைய்லரை பார்த்தபோது எழுந்த ஆசை, இப்போதுதான் எழுத நேரம் வந்திருக்கின்றது காரணம் "ஷமிதாப்" டீசர்.

இந்த உலகில் திறமையில்லாமல் யாரும் வெற்றிப்பெறமுடியாது என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கும் நிகழ்வு. அப்பா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தாலும் தனுஷின் அசாத்திய வளர்ச்சிக்கு இது மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பில்லை. முதல் படத்தில் நடித்தபோது "இவங்கப்பா டைரக்டர்டா, அதான் இந்த மூஞ்சியெல்லாம் நடிக்குது" என்று சொன்னவர்களில் நானும் ஒருவன். தமிழ் சினிமா அகராதிப்படி ஹீரோ இப்படித்தான் இருக்கணும் என்கிற வரைமுறையை மாற்றிவைத்த வெகு சிலரில் தனுஷும் ஒருவர்.

தனது மைனஸ்களை அதாவது உடல் உருவ அமைப்புகளை அப்படியே மாற்றி தனக்கான பிளஸ்ஸாக ஆக்கி இன்று இந்தியாவில் ஒரு முக்கியமான வளரும் இளம் நடிகர். சிம்புவும், தனுஷும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் கதாநாயகர் போட்டியை ஆரம்பித்திருந்தாலும் நாயகனுக்கான எல்லா தகுதிகளையும், பின்புலத்தையும் கொண்ட சிம்புவால் இன்று தனுஷுடன் போட்டியிட முடியவில்லை. அதற்க்கு காரணம் தனுஷின் தீவிர உழைப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதிலும் நடிப்பை அவர் ரசனையுடன் கையாள்கிறார் என்பதுவும் நிஜம்.

சிலருக்கு நடிப்பு என்பது இயற்கையிலேயே வரும். தனுஷுக்கும் அப்படித்தான் தன் தந்தை எதிர்பாராமல் தனுஷை நடிப்புத்துறைக்கு இழுத்துவர, அண்ணன் அவ்வப்போது வாய்ப்பளிக்க இவரும் அதை கெட்டியாகப்படித்து கரையேறிவிட்டார். தமிழ் சினிமாவில் நமக்கே உரித்தான குத்துப்பாடல்களுக்கு தனுஷ் மாதிரி இன்னொருவர் ஆட இனி பிறந்துதான் வரவேண்டும்.

தனுஷின் வாழ்க்கையில் எத்தனையோ ஆச்சர்யங்கள் அவைகளை தனுஷே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். சூப்பர் ஸ்டாரின் மகளை திருமணம் செய்தது, கொலவெறி பாடல், நேஷ்னல் அவார்டுகள், இந்தி அறிமுகம் என இப்போது ஷமிதாப்பில் அமிதாப்பையே தூக்கி சாப்பிட்டிருக்கிறார். ஆக என்னதான் லக் என்கிற விஷயம் வாழ்க்கையில் நிகழ்ந்தாலும் அந்த லக் அடிக்கடி நமக்கு வரும் அல்லது கிடைக்கும் என்பது நிச்சயமில்லை. அப்படி ஒரு முறை கிடைத்த லக்கை சரியாக யூஸ் செய்கிறவன் கட்டாயம் சாதிப்பான் என்பதற்க்கு தனுஷ் ஒரு உதாரணம்.

"எதேச்சையாக நான்கு நாள் முன் ஷமிதாப் டிரைய்லரை பார்த்தவுடன் தனுஷுக்காக எழுதவேண்டும் என தோன்றியதற்க்கு காரணம் ஷமிதாப் டிரைய்லரில் வரும் அந்த சில நொடி "ஜோக்கர் வேடம்", அதில் தெரியும் அவரின் நடிப்பின் முதிர்ச்சி. சில காட்சிகள் அமிதாப்பையே மிஞ்சியிருக்கிறார் அல்லது அமிதாப்பே தனுஷின் நடிப்பில் மகிழ்ந்து தனுஷுக்காக தன் ஸ்டேட்டஸையும் மறந்து நடித்திருப்பார் என்பது நிச்சயம். இந்த பகிர்வில் தனுஷின் படங்களில் அவரின் நடிப்பைப்பற்றி தனித்தனியாக சொல்லத்தேவையில்லை காரணம் அவரின் எல்லாப் படங்களிலும் அவரின் தனித்திறன் இருக்கும்."

இப்போதைய இளம் நடிகர்களில் தனுஷிடம் தனித்தன்மை இருப்பது உண்மை. இன்னும் வரும் காலங்களில் சரியான கதைகளையும், வித்தியாசமான வேடங்களையும் தேர்ந்தெடுத்தால் தனுஷ் என்கிற நடிகனுக்கு சினிமாவில் ஒரு சிறப்பான இடம் காத்திருக்கும் என்பதில் ஐய்யமில்லை. வாழ்த்துக்கள் தனுஷ்!!!

ஆக இந்த உலகில் யாரும் வெல்லலாம், இப்படிப்பட்டவர்கள்தான் வெல்லமுடியும் என்கிற கட்டாயமில்லை. எந்தத்துறையை எடுத்துக்கொண்டாலும் ஆர்வமும், உழைப்பும், நம்பிக்கையுமிருப்பின் அவர்கள் எல்லோருக்கும் தனுஷின் வளர்ச்சி ஒரு உந்துதலாக இருக்கட்ட்டும்.

பிசாசு - விமர்சனம்.


பிசாசு - விமர்சனம்.

முதல்காட்சியில் கார் மோதி சாகடிக்கப்படும் அழகானப்பெண் தன்னை காப்பாற்ற ஆஸ்பிடலுக்கு கொண்டுப்போன ஹீரோ வயலின் ஆர்டிஸ்ட்டின் கையைப்பிடித்துக்கொண்டு இறக்கிறாள்.

பின்னர் அவன் வீட்டிலேயே பேயாய் தங்கும் அல்லது செய்யும் அட்டகாசங்களும், ஏன் அங்கு தங்கினாள்? தன்னை கொன்றது யார்? என்பதற்கான முடிச்சையும் இறுதியில் அவிழ்த்து வணக்கம் போடுகிறார் இயக்குனர்.

பக்கா மிஷ்கின் படம். வித்தியாசமான பாத்திர படைப்புக்கள். பாதி நடிகர்கள் வழக்கம்போல் சைக்கோத்தனமான தோற்றங்கள். வித்தியாச கேமரா கோணங்கள், லைட்டிங் என படமுழுக்க திகிலுடனே நகர்கிறது.

கோரம், ரத்தங்கள், வன்முறைகள், அருவருப்பு காட்சிகள் என ஏதுமில்லாமல் படமுழுக்க மெல்லிய சஸ்பென்ஸுடன் எடுத்திருக்கிறார்.

ஆங்காங்கே காமெடிகள் தூவி முதல் பாதியில் படம் பல இடங்களில் சிரிக்கவைத்தாலும் சட்டென்று நிற்க்கும் பிண்ணனி இசை அடுத்த ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு அடுத்து என்ன? என்று நம்மை நினைக்கவைப்பது படத்தின்பலம். அதுவும் முதல் முறை தியேட்டரில் கூட்டத்துடன் பார்க்கும்போது மற்றவர்கள் முன் நம் பயத்தை அலறலாகவோ, கூச்சலாகவோ காட்டாமல் இருக்க கஷ்டப்படவேண்டியதுள்ளது என்பது நிஜம்.பிண்ணனி இசைக்கும், கேமரா கோணங்களுக்கும் முகப்பெரிய ஓ போடாலாம்.

பெண்ணின் அப்பாவைத்தவிர கிட்டத்தட்ட 90 சத நடிகர்கள் எல்லோரும் புது முகங்கள், இசை புதியவர் அதிலும் மிஷ்கின் பேவரைட் வயலின் இசை படமெங்கும்.

மைனஸ் எனப்பார்த்தால் எனக்கு சில கேள்விகள்.

* போன் பேசும்போது வண்டி இடித்ததுக்கூடவா தெரியாது? ஆளே சாகும் அளவுக்கு ஆக்சிடண்ட் ஆகும்போது காரில் அடையாளமோ, கீரலோ தென்படாதா?

* என்ன காரணத்திற்காக இந்த நல்ல பிசாசு ஹீரோ வீட்டில் தங்குகிறது? அப்படியே அவனுக்கு புரியவைக்க தங்கினாலும் அப்படி பயமுறுத்தும் அவசியம் என்ன?

* பெண்ணைக்கொன்றவனை எந்த அப்பா இப்படி சிம்பிளாகவும் ஏற்று செய்த குற்றத்தை மறப்பார்? அதுவும் கத்தியுடன் அலையும் அப்பா ஒரே நிமிடத்தில் மன்னிப்பதென்பது நல்ல காமெடி.

* கடைசி காட்சிகளில் நாயகன் காலை பிடித்து எதற்க்கு தடுக்கிறது?

* பறந்து வரும் இரண்டாவது பேய் யார்? அதுவும் இறந்துபோன உடலை தூக்கிக்கொண்டு கிளைமாக்ஸில் செய்வதெல்லாம் அபத்தம். 

* பேயை விட ஹீரோவின் நடிப்பும், ஆக்டிவிட்டிகளும், முக்கியமாய் அவரின் முடியும் நம்மை எரிச்சல் அடைய வைக்கின்றன. 

ஆனாலும் வித்தியாசமான யாரும் எதிர்ப்பார்க்காத கிளைமாக்ஸையும், திகைக்க வைக்கும் திரைக்கதையையும் கொடுத்த மிஷ்கினையும், தயாரித்த பாலாவையும் வாழ்த்தலாம். இந்தப்படத்தின் மூலம் பேய் இருக்கு என்பதை மிஷ்கின் நம்புகிறார் நம்ப வைக்க முயல்கிறார்.

மனநலம் பாதித்த சிறுவன், மனைவியை கொடுமைப்படுத்தும் கணவன், நிறக்குறைப்பாடுக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர், மெய்ஞானம் பேசி காசுப்புடுங்கும் இளைஞன், பார்வையில்லாத சின்னப்பெண் என படமுழுக்க மிஷ்கினின் அட்டகாச டச்.

பிசாசு - வித்தியாசம்!!!அப்பாவின் நினைவுகள்!!!

இன்று என் தந்தையின் மூன்றாவது நினைவு தினம்.
என் மகனின் அழகில்
என்னைக்கண்டு மகிழ்ந்தவர்
என் தந்தை.
என் தந்தையின் உள்ளத்தை
என் மகனில் கண்டு மகிழ்கிறது
என் மனம்!!!
----------------------------------------------------------------------------------------------------------------------

நான் மூன்றாம் வகுப்பு படித்த நேரம். பள்ளித்தொடங்கி ஒரு வாரம் ஆன நேரம். அன்று பள்ளியில் எதேச்சையாக முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த என் புத்தகத்தை பாடம் நடத்த வாங்கியவர், பக்கங்களை புரட்டிவிட்டு என் புத்தகத்தை என்னிடம் திருப்பி கொடுத்துவிட்டு அடுத்த மாணவரிடம் புஸ்தகம் வாங்கி பாடம் நடத்தினார் ஆசிரியர்.

நான் ஏன் என்று புரியாமல் முழிக்க, இறுதியில் கேட்டபோது "உன் புக்குல படங்கள் சரியா பிரிண்ட் ஆகலை, வேற புக்கு வாங்கித்தரச்சொல்லு உங்கப்பாவை" எனச்சொல்லி நகர்ந்துவிடார்.

என் இரட்டை சகோதரனிடம் புத்தகத்தை வாங்கி பார்த்தபோது "ராபர்ட் கிளைவ், ஜான்சிராணி மற்றும் இன்னும் சில படங்கள்" என் புத்தகத்தில் தெளிவாக இல்லை.

இரவு வீட்டுக்கு வந்த அப்பாவிடம் கத்தி சத்தம்போட, "நாளைக்கு புது புக்கு வந்தாத்தான் ஸ்கூலுக்கு போவேன்" என்று அடம்பிடித்தேன்.

பொறுமையாய் புத்தகத்தை வாங்கியவர் " சரி நீ இப்ப தூங்கு" என சொல்லி அனுப்பிவிட்டார்.

காலையில் நான் எழுந்தவுடன் ஸ்கூலுக்கு போகமாட்டேன், புது புக்கு வேணும் என கதற. என் அப்பாவும் என் புக்கை நீட்டினார்.

புக்கை வாங்கி புரட்டி பார்த்த எனக்கு ஆச்சர்யம். என் இரட்டையரின் புத்தகத்தைப்பார்த்து அப்படியே அச்சு அசலாக இரவு முழுக்க உட்கார்ந்து வரைந்திருக்கிறார் என் அப்பா. ஹரியிடம் புத்தகத்தை வாங்கி கம்பேர் செய்ததில் எது ஒரிஜினல், எது வரைந்தது என்பதே தெரியவில்லை.

பள்ளியில் இந்த முறை "ஆசிரியரிடம், புது புக்கு சார்" என என் புஸ்தகத்தை நீட்ட, அவரும் பாடம் நடத்தி திருப்பிக்கொடுத்துவிட்டுப்போனார்.

அந்த வயதில் எனப்பாவுக்கு நான் தேங்ஸ் சொன்னதில்லை. பின்னர் ஒரு நாள் வங்கி ஊழியரான என் அப்பாவுக்கு அவர் படம் வரைந்த அடுத்த நாள் முக்கிய ஆடிட் இருந்ததாய் என் அம்மா சொன்னார்.

அந்த அளவுக்கு வித்தியாசமே தெரியாமல் அச்சு அசலாக வரைந்த என் அப்பாவின் ஓவிய திறமையில் எனக்கும் கொஞ்சம் கொடுத்துவிட்டுப்போனதால்தான் இன்று மூன்று வேளை நிம்மதியாய் உண்கிறேன், வாழ்கிறேன்.

என் முதல் "ஹீரோவின்" மூன்றாம் நினைவு நாளில் இதை எழுதுவதில் பெருமைக்கொள்கிறேன். இதை பதிந்த நேரம் என் கண்களில் கண்ணீர் வந்ததை தடுக்க மனம் வரவில்லை.

I love u dad. Miss u too!!
------------------------------------------------------------------------------------------------------------------


அப்போதேல்லாம் சென்னை கல்லூரியில் படிக்கும்போது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்துவிடுவேன்.
ஒவ்வொருமுறையும் அப்பாவிடம் ஆயிரம், ஆயிரத்து ஐநூறு என பணம் வாங்கிக்கொண்டு போவேன்.
அதுவும் சென்னைக்கு போகும் நாளின் காலையில் அப்பாவிடம் காசு கேட்பேன்.
அவரும் போகும்போது ஆபீஸுக்கு வந்து வாங்கிட்டுப்போ என்பார். இல்லையென்று சொல்லமாட்டார். எங்கள் ஊரிலிருந்து சென்னை சென்று படித்த இரண்டாவதோ, மூன்றாவதோ ஆள் நான்தான்.
நானும் ஊட்டி சேரிங்கிராஸில் இருக்கும் அப்பா வேலை செய்யும் கோ ஆப்பரேட்டிவ் பேங்கில் போய் நிற்ப்பேன்.
என்னைப்பார்த்தவுடன் பியூன் அண்ணா... வடையும், டீயும் ஆர்டர் செய்வார். நான் பேங்கில் வருவோர் போவோரை பார்த்துக்கொண்டே இருப்பேன்.
என் அப்பாவும் என்னை உட்காரச்சொல்லிவிட்டு மாடிக்கு போவார், வெளியில் இரண்டு மூன்று முறை போய் வருவார்.
நானும் பணம் கொடுக்க இவ்வளவு லேட்டா என் மனதிற்க்குள் திட்டுவேன் அப்பாவை. அங்கே காத்திருக்கும் ஒரு மணி நேரத்தில் பலமுறை அப்பாவை மனதுக்குள் கடிந்துக்கொள்வேன்.
பின்னர் ஈவினிங்கில் நான் கேட்டதை விட அதிகமாக பணம் கொடுத்து அனுப்புவார்.
90களில் ஆயிரம், இரண்டாயிரம் என்பதெல்லாம் பெரிய தொகை. நடுத்தர குடும்பத்தின் நான்கு குழந்தைகளை படிக்கவைத்துக்கொண்டிருக்கும் வங்கி ஊழியரிடம் திடீர் என்று நான் கேட்கும் தொகை இல்லாது... எனக்காக மற்றவர்களிடம் கடன் வாங்கத்தான் மாடிக்கும், வெளியிலும் சென்று வந்துள்ளார் என்பதும், கஷ்டப்பட்டுத்தான் என்னை படிக்க வைத்தார் என்பதும் என் மர மண்டைக்கு நான் அப்பனான பின்னர்தான் புரிந்தது!!!